Ad Code

Responsive Advertisement

பாதுகாப்பான தீபாவளி... பெற்றோர்கள் கவனத்துக்கு! - தீயணைப்புத்துறையின் ஆலோசனை

இந்தியா முழுவதும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிக முக்கியமானது தீபாவளி. இது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பிடித்தமான ஒரு பண்டிகை. இன்னும் சொல்லப்போனால்... பெரியவர்களைவிடக் குழந்தைகளைத்தான் அதிகம் மகிழ்விக்கும் இந்தப் பண்டிகை. புத்தாடைகள், பட்டாசுகள், பலகாரங்கள் இவை அனைத்தும் அவர்களுக்கு ஒரே நேரத்தில் கிடைத்துவிடுவதால், அவர்களின் மகிழ்ச்சிக்குரிய பண்டிகையாக இது காணப்படுகிறது.

இவ்வளவு சிறப்புமிக்க ஒரு பண்டிகையைக் குடும்பத்தோடு சந்தோஷமாகக் கொண்டாட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். 

மகிழ்ச்சியை ஏற்படுத்தும் இந்தப் பண்டிகையில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க பெற்றோர்களுக்கு சில ஆலோசனைகளை வழங்குகிறார், தீயணைப்புத் துறை இணை இயக்குநர் கார்த்திகேயன்.

‘‘தீபாவளியன்று, பெற்றோர்களுக்கு வீட்டு வேலைகள் அதிகம் என்பதால், குழந்தைகளின் மீது சிறு கவனக்குறைவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதனால், மிகப்பெரிய இன்னல்களைச் சந்திக்க நேரிடலாம். ஆகவே, அன்றைய நாள் பெற்றோர்கள் சில பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கையாண்டாலே போதும்... விபத்திலிருந்து தப்பிக்கலாம்’’ என்று சொல்லும் அவர், கீழ்க்காணும் ஆலோசனைகளையும் வழங்குகிறார்.

பட்டாசும்... பாதுகாப்பும்!

‘‘பெற்றோர்கள் கண்காணிப்பில்தான் குழந்தைகள் பட்டாசு வெடிக்க வேண்டும். பட்டாசைப் பார்த்ததும் குழந்தைகள் ஆர்வத்தில் வெடிக்க ஆரம்பித்துவிடுவர். அப்படி அவர்களிடம் பட்டாசைக் கொடுக்காமல், நீங்கள் அருகில் இருந்துகொண்டுதான் வெடிக்கவைக்க வேண்டும். திறந்தவெளியில் மட்டும்தான் பட்டாசு வெடிக்க வேண்டும். குழந்தைகளை எப்போதும் ஒருவர்பின் ஒருவராக நின்று பட்டாசு வெடிக்க அனுமதிக்காதீர்கள். ஏனென்றால், பட்டாசு வெடிப்பதற்குக் காலவிகிதம் மாறுபடும். அப்போது, ஒருவர் வைத்த பட்டாசு அதிக சத்தத்துடன் வெடிக்குமேயானால், பயத்தில் மற்ற குழந்தைகள் கீழே விழுந்துவிடுவார்கள். இது ஆபத்தினை உண்டாக்கும். அதற்குப் பதிலாக பக்கவாட்டில் நின்றுகொண்டு வெடிக்கச் சொல்லவேண்டும். சிறு குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது நீண்டகுச்சியை வைத்துக்கொண்டு திரியைப் பற்றவைக்க வேண்டும். அப்படிப் பற்றவைக்கும்போது குழந்தைகளுடைய முகம் பட்டாசுக்கு நேராக மேலேயும், நேருக்குநேராகவும் பார்த்தபடி இருக்கக் கூடாது. பக்கவாட்டில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். பட்டாசுகளை ஒருபோதும் கையில்வைத்து வெடிக்க அனுமதிக்காதீர்கள். பட்டாசு வெடிப்பவர்கள் கண்டிப்பாக காலணி அணிந்திருத்தல் வேண்டும்.

தவிர்க்க வேண்டியவையும்... தயாராய் இருக்கவேண்டியவையும்


பாலிஸ்டர் ஆடைகளை அணிந்து பட்டாசு வெடிக்கக் கூடாது. ஏனெனில், அவை எளிதில் தீப்பற்றும் தன்மைகொண்டவை. பருத்தியில் ஆன ஆடைகளை மட்டுமே அணிந்து வெடிக்க வேண்டும். பாட்டில்களில் வைத்து ராக்கெட் விடுவது, பட்டாசைப் பற்றவைத்து கையால் தூக்கிப்போடுவது போன்றவை மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது பெற்றோர்கள் கண்டிப்பாகப் பக்கத்தில் தண்ணீர் நிரம்பிய வாளி மற்றும் மணல் வாளிகளை வைத்திருக்க வேண்டும். கம்பி மத்தாப்பு, சங்கு சக்கரம், புஸ்வாணம் போன்ற வகை பட்டாசுகளைப் கொளுத்தியபின் அவற்றைத் தண்ணீர்கொண்டு அனைத்துவிடுங்கள். இல்லையென்றால், அந்த வழியாகச் செல்வோருக்குக் காலில் தீக்காயம் ஏற்பட அதிகம் வாய்ப்பு உண்டு.

‘‘சீன பட்டாசுகளைத் தவிர்க்க வேண்டும்!’’

குழந்தைகளுக்கு அதிக அபாயத்தன்மை இல்லாத பட்டாசுகளை வாங்கித் தரவேண்டும். அதிக ஒலி மற்றும் ஒளி ஏற்படுத்தும் பட்டாசு வகைகளைத் தவிர்க்கவேண்டும். ஏனென்றால், இதனால் குழந்தைகளுக்குக் கண்டிப்பாக கண் மற்றும் காது பிரச்னை ஏற்படும். முக்கியமாக சீன பட்டாசுகளைத் தவிர்த்திட வேண்டும். இதில், பொட்டாசியம் குளோரைடு அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றன. நமது ஊரில் தயாரிக்கப்படும் பட்டாசுகளைவிட சீன பட்டாசுகள் அதிக அளவில் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் தன்மைகொண்டவை.

பட்டாசு வெடிக்கக்கூடாத இடங்கள்!

வீட்டுக்குள்வைத்து வெடிப்பதையும், பால்கனியில்வைத்து வெடிப்பதையும் தவிர்க்க வேண்டும். பெட்ரோல் பங்க், மருத்துவமனை, பிறந்த குழந்தைகள் மற்றும் வயதானோர் உள்ள வீடுகள், பள்ளிக்கூடங்கள், கோயில்கள், பேருந்து நிறுத்தங்கள், ட்ரான்ஸ்ஃபார்மர்கள் மற்றும் மின்வயர்கள் போன்ற இடங்களுக்கு அருகே நின்று பட்டாசு வெடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

தீக்காயங்களுக்குரிய முதலுதவி சிகிச்சைகள்



தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாகத் தூயநீரை ஊற்ற வேண்டும். தீப்புண்ணில் ஒட்டியுள்ள ஆடைகளை அகற்றக் கூடாது. அப்படிச் செய்தால், துணியோடு தோலும் சேர்ந்தேவரும். தீக்காயத்தை அழுத்தித் துடைக்கக் கூடாது; தீப்புண்ணில் எண்ணெய், ஆயின்மென்ட், இங்க் போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது; ஆடையில் தீப்பற்றிக்கொண்டால் ஓடக் கூடாது. அது, தீயின் வேகத்தை அதிகப்படுத்தும். எனவே, தரையில் படுத்து உருள வேண்டும். தீப்புண்பட்ட இடத்தை மெல்லிய பருத்தித் துணிகொண்டு மூடி, உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். ஏதேனும் பொருட்கள் மீது தீப்பிடித்தால் தண்ணீர் மற்றும் மணல் கொண்டு அணைக்க முயற்சி செய்ய வேண்டும்.

பட்டாசுக் கடை உரிமையாளர்கள் கவனிக்க வேண்டியவை

பட்டாசுக் கடை வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக 200 லிட்டர் தண்ணீர் குவளைகளை எப்போதும் தயார் நிலைகளில் வைத்திருக்க வேண்டும். மூன்றுக்கும் மேற்பட்ட தீயணைப்புக் கருவிகள் மற்றும் மணல் வாளிகளைக் கடையில் வைத்திருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், கடையில் அதிக ஒளி மற்றும் வெப்பம் வெளிப்படுத்தும் மின்சார பல்புகளைப் பயன்படுத்தக் கூடாது. வெடிபொருள் சட்டம் 1984-ன் படி நிர்ணயிக்கப்பட்ட அளவுகளில்தான் வெடிபொருள் விற்பனை செய்யவேண்டும். கண்டிப்பாக 14 வயதுக்குட்பட்டோருக்குப் பட்டாசுகள் விற்பனை செய்யக் கூடாது. இந்தச் சட்டங்களை மீறும் பட்டாசுக் கடை உரிமையாளர்களின் கடை உரிமம் ரத்து செய்யப்படுவதோடு தண்டனையும் வழங்கப்படும்.

பஸ் மற்றும் ரயில்களில் பட்டாசு எடுத்துச் செல்ல வேண்டாம்

பஸ் மற்றும் ரயில்களில் வெடிபொருட்கள் கொண்டுசெல்லக் கூடாது. அப்படி மீறிக் கொண்டுசெல்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, வெடிபொருட்களை பஸ் மற்றும் ரயில்களில் கொண்டுசெல்வதைத் தவிர்த்துவிடுங்கள்.

இனிப்புகளில் கவனம் தேவை


தீபாவளியன்று அனைவரின் வீட்டிலும் ஒன்றுக்கு மேற்பட்ட பலகாரங்கள் செய்யப்படும். இதனால் அதிகமாக இனிப்புகள் சாப்பிடும்போது, தேவை இல்லாத பல உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும். அதற்குப் பதிலாக ஒரு சில இனிப்பு வகைகளை மட்டும் செய்துகொள்ள வேண்டும். அடுத்தடுத்த நாட்களில் விருப்பப்பட்டதைச் செய்து சாப்பிட வேண்டும். முடிந்த அளவுக்கு இனிப்பு வகைகளைக் கடைகளில் வாங்குவதைத் தவிர்த்துவிடுங்கள். விளம்பர மோகத்தால், பல கடைகளின் தரமில்லாத இனிப்புகள் உடல்நலத்துக்கு நிச்சயம் தீங்கு விளைவிக்கும்.

‘‘தீபாவளியன்று இரு சக்கர வாகனத்தில் செல்வதைத் தவிர்க்கலாம்!’


தீபாவளி அன்று நாம் ஏதேனும் பயணங்கள் மேற்கொண்டால் மிகவும் பாதுகாப்பாகச் செல்வது அவசியம். பிற நாட்களைப்போல் இல்லாமல் பாதையைக் கூர்ந்து கவனித்துச் செல்லவேண்டும். முக்கியமாக இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கவனமாகச் செல்ல வேண்டும். ஏனென்றால், திடீரென்று வெடிக்கும் பட்டாசினால் பயம் ஏற்படுவதோடு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் மயக்க நிலைக்குத் தள்ளப்படலாம். காற்றில் வெடிபொருட்கள் கலந்திருக்கும் என்பதால், அதன் வேதிப்பொருட்கள் கண்களில்பட்டு திடீர் எரிச்சலை உண்டாக்கும். இதனால் நம் நிலை தடுமாறி ஆபத்துகள் ஏற்படலாம். முடிந்தவரை தீபாவளியன்று இரு சக்கர பயணம் மேற்கொள்ளாமல் இருப்பது சிறந்தது’’ என்கிறார் கார்த்திகேயன்.

பாதுகாப்புடன் தீபாவளியைக் கொண்டாடி மகிழ்வோம்!

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement