Ad Code

Responsive Advertisement

"ஆதார் அட்டை பதிவுக்கு காலக்கெடு ஏதுமில்லை'

குடும்ப அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணிக்கு காலக்கெடு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை என்று உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் அறிவித்துள்ளார். மேலும், ஆதார் எண்ணை இணைக்காத குடும்ப அட்டைகளுக்கு பொருள்கள் நிறுத்தப்படும் என்று வெளியான தகவலையும் அவர் மறுத்துள்ளார்.

சென்னையில் உள்ள அமுதம், கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் அமைச்சர் ஆர்.காமராஜ் புதன்கிழமை ஆய்வு நடத்தினார். இதைத் தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தீபாவளி பண்டிகைக்கு முன்பாக, அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் அத்தியாவசியப் பொருள்கள் நகர்வு செய்துமுடிக்கப்பட வேண்டும். மாத ஒதுக்கீட்டின்படி பொருள்கள் நகர்வு செய்து முடிக்க வேண்டும். மேலும், அத்தியாவசியப் பொருள்கள் சீரான முறையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்வது உறுதி செய்யப்பட வேண்டும்.

ஆதார் எண் பதிவு: ஆதார் எண் பதிவுகள் மேற்கொள்ளாத அட்டைதாரர்களுக்கு பொருள்கள் விநியோகம் நிறுத்தப்பட மாட்டாது. இந்தப் பணிகளுக்கு காலநிர்ணயம் செய்யப்படவில்லை. ஆதார் எண்ணை இணைக்காதோரும் பொருள்கள் வழங்குவதற்கு வழக்கமான நடைமுறையே பின்பற்றப்பட்டு வருகிறது.

பொருள் தேவைப்படாத அட்டைதாரர்களும்...:

எந்தப் பொருளும் தேவைப்படாத குடும்ப அட்டை ("என் கார்டு') வைத்துள்ளோர், குடும்ப அட்டை காலக்கெடு (31.12.16 வரை) நீட்டிப்பு பிரதி, ஆதார் அட்டை ஆகியவற்றுடன் தங்கள் பகுதிக்குரிய நியாய விலைக் கடைக்குச் சென்று செல்லிடப்பேசி உள்ளிட்ட சுயவிவரக் குறிப்புகளைக் கூறி ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம் என்றார்.ஆய்வின்போது உணவு பொருள் வழங்கல்- நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் மதுமதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement