Ad Code

Responsive Advertisement

தமிழக அரசிடம் கைமாறும் ஆதார்!

இந்திய குடிமக்களுக்கு வழங்கப்பட்டுவரும் 12 இலக்க அடையாள எண் கொண்ட அட்டைதான் ஆதார் அடையாள அட்டை. மக்கள்தொகையில் இரண்டாவது மிகப்பெரிய நாடான இந்தியாவில், நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தனித்தனி அடையாள எண் வழங்குவதன்மூலம் மத்திய அரசின்அனைத்துச் சலுகைகளும் முறையாக சென்றடைவதற்கும் மக்கள் தொகையை எளிதில் கணக்கெடுப்பதற்கும் இந்தச் சேவை தொடங்கப்பட்டது.

கடந்த 2009ஆம் ஆண்டு ஆதார் பதிவு தொடங்கப்பட்டு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஆதார் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை, தமிழகத்தில் ஆதார் அட்டை வழங்கும் பணியை தேசிய மக்கள் கணக்கெடுப்புத் துறையான சென்செஸ் துறை செயல்படுத்தி வந்தது. ஆனால் இனி (அக்டோபர் 1) தமிழகத்தில் ஆதார் பதிவை தமிழக அரசே கையாளும் என்று சென்செஸ் துறை அறிவித்துள்ளது.ஆதார் பதிவுசெய்ய மத்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலகத்துக்கு தமிழக அரசு வழங்கிய அனுமதி செப்டம்பர் 30ஆம் தேதியுடன் (இன்று) நிறைவடைகிறது. இதுவரை தமிழகத்தில் சுமார் 640 மையங்களில் சென்செஸ் துறை ஆதார் பதிவுக்கான பணியை மேற்கொண்டு வந்தது. ஆனால் இத்திட்டத்துக்கு போதிய அளவில் மக்களிடம் வரவேற்பு கிடைக்காததால் இந்தத் திட்டத்தை தமிழக அரசிடம் ஒப்படைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. நாளை முதல் தமிழக அரசிடம் வழங்கப்படவுள்ள ஆதார் பதிவுத் திட்டம் அனைத்து இ - சேவை மையங்களிலும் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இனி தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை மக்களுடைய ’பயோ மெட்ரிக்’ தகவல்களைச் சேகரித்து, அந்தத் தகவலை ஆதார் ஆணையமான UIDAI -யிடம் வழங்கியபின்னர் அத்துறை ஆதார் அட்டைகளை மக்களுக்கு வழங்கும்.2015ஆம் ஆண்டு தேசிய மக்கள் தொகை பதிவேட்டு விவரங்களின்படி, தமிழகத்தில் 7 கோடியே 64 லட்சத்து 75 ஆயிரத்து 852 பேர் வசிக்கின்றனர். இதில், கடந்த செப்டம்பர் 20ஆம்தேதி நிலவரப்படி 6 கோடியே 44 லட்சத்து 92 ஆயிரத்து 854 பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. 1 கோடியே 19 லட்சத்து 82 ஆயிரத்து 998 பேருக்கு இன்னும் ஆதார் வழங்க வேண்டியுள்ளது என்று தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement