Ad Code

Responsive Advertisement

பழைய ஓய்வூதிய திட்டம் பற்றி அதிகாரிகள் பேசாததால் அரசு ஊழியர்கள் அதிருப்தி

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து பேசாமல், புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து மட்டும், அரசு குழு பேசியது, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களிடம், கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில், 2003க்கு பின், அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு, பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது; இதில், குடும்ப ஓய்வூதியம் கிடையாது என்பது உட்பட, பல்வேறு பாதகமான அம்சங்கள் உள்ளன.


எனவே, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என, அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்தன.கடந்த, 2011 மற்றும், 2016 சட்டசபை தேர்தலின் போது, 'பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்' என, ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார்; எனவே, அதுகுறித்து ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி 
சாந்தா ஷீலா நாயர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவினர்,இரு தினங்களுக்கு முன், ஒன்பது அரசு ஊழியர் சங்கங்கள்,ஆசிரியர் சங்கங்களை சந்தித்து பேசினர். நேற்று முன்தினம், அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் மாநில சங்கம், அரசு ஊர்தி ஓட்டுனர்கள் சங்கம் உட்பட, ஒன்பது சங்கங்களின் நிர்வாகிகள், குழுவினரை சந்தித்து பேசினர்.

அனைத்து தரப்பினரும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். ஆனால், அரசு குழுவினர், 'புதிய திட்டத்தில், மாற்றங்கள் செய்தால் போதாதா?' என கேட்டுள்ளனர்; அரசின் நிதி நெருக்கடியை எடுத்துரைத்துள்ளனர்.இதன் காரணமாக, பழைய ஓய்வூதிய திட்டத்தை, அரசு செயல்படுத்துமா என்ற சந்தேகம், சங்க நிர்வாகிகளிடம் ஏற்பட்டு உள்ளது. அரசு குழுவினர், பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து பேசாமல், புதிய திட்டத்தின் 
அம்சங்களையே பேசியதால், கூட்டத்தில் பங்கேற்ற சங்கத்தினர், அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து, சங்க நிர்வாகிகள் கூறியதாவது:

கணேசன், அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் மாநில சங்கம்: 

அரசின் நிதி நிலைமையை எடுத்துரைத்தனர். பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தில், என்ன மாற்றம் செய்யலாம் எனக் கேட்டனர். பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தில், ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு, எந்தவித பாதுகாப்பும் இல்லை என்பதை, ஆதாரங்களுடன் எடுத்துரைத்தோம். எனவே, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 

பி.ஆரோக்கியதாஸ், ஒருங்கிணைப்பாளர், 'டேக்டோ' கூட்டுக் குழு: மத்திய அரசின் திட்டத்திற்கு, முதல்வர் ஜெயலலிதா ஆதரவு தெரிவிக்கவில்லை. லோக்சபாவில், அ.தி.மு.க., - எம்.பி.,க்களின் கோரிக்கை ஏற்கப்படாமலேயே, புதிய ஓய்வூதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இதனால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பல பாதிப்புகள் ஏற்படும். மேலும் இது, லஞ்சத்திற்கு வழி வகுக்கும். எனவே, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர, குழுவிடம் கூறினோம்.

பி.இளங்கோவன், ஒருங்கிணைப்பாளர், 'ஜேக்டோ' கூட்டுக் குழு: 'புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் குறைகளை நீக்கி, எப்படி தொடரலாம்...' என, குழுவினர் ஆலோசனை கேட்டனர். ஆனால், 'புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டமே தேவையில்லை; அதில், 
எத்தனை திருத்தம் செய்தாலும், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு எந்த பலனும் கிடையாது. 
'எனவே, பழைய பென்ஷன் திட்டம் தான் ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் தேவை' என்பதை, உறுதியாக கூறிவிட்டோம்.

எஸ்.என்.ஜனார்த்தனன், மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம்: 

தமிழக அரசு ஊழியர்களிடம் பிடிக்கப்படும் பல ஆயிரம் கோடி ரூபாயை, மத்திய அரசின், பி.எப்., ஆணையத்தில் செலுத்த வேண்டும். அந்த தொகையை மீண்டும் பெற, தமிழக ஊழியர்கள் பெரும் சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும்.இதில், யாருக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் என்ற விகிதாச்சாரம் கூட கூறப்படவில்லை. ஊழியர்களின் தொகை, பங்கு சந்தையில் முதலீடு செய்யப்படுவதால், அதன் வருமானம் நிரந்தரமாக இருக்காது. ஊழியர்களுக்கு எப்போது நிதி கிடைக்கும் என்ற உறுதியானதகவல்கள் இல்லை. எனவே, புதிய பங்களிப்பு திட்டமே வேண்டாம் என, கூறி விட்டோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement