Ad Code

Responsive Advertisement

ரூ.40 லட்சம் திரட்டி அரசு பள்ளியின் தரம் உயர்த்திய தலைமை ஆசிரியர்

மாணவர்களுடன் அன்பாசிரியர் செல்வக்கண்ணன்.
மாணவர்களுடன் அன்பாசிரியர் செல்வக்கண்ணன்.
சர்வதேசப் பள்ளி என்ற அங்கீகாரத்தில் கரூர் மாவட்டம் பரமத்தி வேலூர் அரசு ஆரம்பப் பள்ளி கம்பீரத்துடன் இயங்கி வருகிறது. ஸ்போக்கன் இங்கிலீஷ், இந்தி, கராத்தே, யோகா, ஓவியம், இசை, நடனம், பாட்டு ஆகிய பயிற்சிகள் இங்கு இலவசமாகக் கற்பிக்கப்படுகின்றன.

ஊர் மக்களின் ஆதரவோடு சுமார் ரூ.40 லட்சம் திரட்டப்பட்டு பள்ளிக்கு தேவையான சுற்றுச்சுவர், அறிவியல் மற்றும் கணினி ஆய்வகங்கள், தண்ணீர்க்குழாய்கள், கழிப்பறை, நூலகம் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
பள்ளி மற்றும் மாணவர்களின் செயல்பாடுகளால் பள்ளிக்கு, சர்வதேச தரச்சான்று ISO 9001:2015 கிடைத்துள்ளது. இவை அனைத்துக்கும் பின்னால் அமைதியாக, அதேசமயத்தில் ஆற்றலுடன் இயங்கி வருகிறார் தலைமை ஆசிரியர் செல்வக்கண்ணன்.

அவரின் அளப்பரிய பணி குறித்த பயணம் இந்த அத்தியாய அன்பாசிரியர் தொடரில்...
"பிடித்தது கிடைக்காதபோது, கிடைத்ததைப் பிடித்தமாக்கிக் கொள்வது என்னுடைய கொள்கை. மருத்துவராக ஆசைப்பட்டேன்; மதிப்பெண்கள் போதவில்லை. வேதியியல் படித்தேன்; முதுகலையில் இடம் கிடைக்கவில்லை. என்னுடைய ஆசிரியரின் அறிவுரைப்படி ஆசிரியர் பயிற்சியில் இணைந்தேன். அங்கும் படித்து முடித்தவுடன் வேலை கிடைக்கவில்லை. விசைத்தறி தொழிலில் ஈடுபட்ட்டேன். 5 வருடங்கள் கழித்து 1995-ல் ஆசிரியர் பணி கிடைத்தது.

ஆசிரியர் பயிற்சி ஒரு திருப்புமுனையாக இருந்தது. வேலைக்குச் சேர்ந்த பள்ளியின் தலைமையாசிரியர் மற்றோர் ஆசானாக அமைந்தார். அங்கே வேலைபார்த்த 5 வருடங்களில் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். பொதுவாக பள்ளிகளில் தலைமையாசிரியர் பெரிய வகுப்புகளையும், உதவி ஆசிரியர்கள் சிறிய வகுப்புகளையும் கவனித்துக்கொள்வர். நான் புதிது என்பதால் சிறிய குழந்தைகளைக் கையாளத் தடுமாறினேன். அதனால் அவர் 1, 2 வகுப்புகளைக் கவனித்துக்கொள்ள, நான் 3,4,5 வகுப்புகளுக்குக் கற்பித்தேன். இதையே நான் தலைமையாசிரியர் ஆனபிறகும் கடைபிடித்து வருகிறேன்.

2002-ல் குஞ்சாம்பட்டி தொடக்கப்பள்ளிக்குத் தலைமையாசிரியராக பதவி உயர்வு கிடைத்தது. அங்கு 6 மாணவர்களே இருந்தார்கள். பக்கத்து கிராமங்களில் இருந்து எங்கள் பள்ளிக்கு மாணவர்களை வரவழைக்க முடிவுசெய்தோம். கிராமத்து சிற்றுந்து உரிமையாளரிடம் பேசி, 3 ரூ.ஆக இருந்த பயணக்கட்டணத்தைப் பாதியாகக் குறைத்தோம். திரும்ப ஊர்த்தலைவரிடம் பேச, அவர் மீதி 1.50 ரூபாயைக் கொடுத்துவிட்டதால் மாணவர்கள் கட்டணமில்லாமலே பள்ளிக்கு சிற்றுந்தில் வந்தார்கள்.

ஒரே மாதத்தில் 6 பேராக இருந்த எண்ணிக்கை, 23 மாணவர்களாக அதிகரித்தது. ஒரு பள்ளிச்சீருடை, காலணி, சாக்ஸ், பெல்ட், அடையாள அட்டை ஆகியவற்றை சொந்த செலவில் மாணவர்களுக்கு வாங்கிக்கொடுத்தேன். தொண்டு நிறுவனங்களிடம் இருந்து மேசை, நாற்காலிகளைப் பெற்றோம். சுவர்களுக்கு வண்ணம் பூசினோம். அரசு ஒதுக்கிய நிதியின் மூலம் ஒரு பக்க சுற்றுச்சுவரைக் கட்டி, மற்றொரு பக்கத்தை என்னுடைய பணத்தில் கட்டி முடித்தேன்.

படித்த பள்ளிக்கே தலைமை ஆசிரியர்
அடுத்ததாக நான் படித்த பள்ளிக்கே தலைமையாசிரியராக மாற்றம் செய்யப்பட்டேன். அடிப்படை வசதிகளைச் செய்து முடித்து, தனியார் நிறுவனங்களிடம் இருந்து கணிப்பொறிகளை வாங்கினோம். அரசு ஒதுக்கிய 2 கணிப்பொறி சேர்ந்து 10 கணிப்பொறிகளையும் கொண்டு ஆய்வகத்தை நிறுவினோம். ஒரு வருடத்திலேயே 2006-ல் சிறந்த கணினிவழிக்கற்றல் மையத்துக்கான விருது கிடைத்தது.

வெளியே மண் தரையாக இருந்ததால் கணிப்பொறி அறைகளில் புழுதி புகுந்து அவை அடிக்கடி பழுதாகின. அதனால் பள்ளி வளாகம் முழுக்க ரூ.1 லட்சம் செலவில் சிமெண்ட் கல் நட்டோம். நன்கொடையாக ரூ.40 ஆயிரம் கிடைத்தது. மீதியை என் பணத்திலேயே சமாளித்துவிட்டேன். என் இரு மகள்களும் அரசுப் பள்ளியிலேயே படித்ததால் என் பள்ளிக்கு நிறைய செய்ய முடிந்தது. மூத்த மகள் இப்போது மருத்துவம் படிக்கிறார்.

தனியார் பள்ளிகளின் படையெடுப்பால் பரமத்தி ஒன்றியத்தின் 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஒற்றை இலக்கத்திலேயே மாணவர்கள் படிக்கிறார்கள். இந்த நிலையை அரசுப் பள்ளிகளே மாற்ற வேண்டும். எங்கள் தொடக்கப்பள்ளிக்கு இதுவரை சுமார் ரூ.40 லட்சம் நன்கொடை பெற்றிருக்கிறோம். பள்ளியில் டிஜிட்டல் வகுப்பறை, ஸ்மார்ட் வகுப்பறை, ரூ.1.5 லட்சத்துக்கு புது கணினிகள் உள்ளன.
கல்விச்சீர் வழங்கும் விழா
புதுக்கோட்டை ஆசிரிய நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, கல்விச்சீர் பற்றிக் கேள்விப்பட்டேன். அதை எங்கள் பள்ளியிலும் செயல்படுத்த முடிவு செய்தோம். இதில் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிக்குத் தேவையான பொருட்களை வாங்கிவந்து சீர்வரிசையாக வழங்கலாம். இதன்படி சாக்பீஸ், ஃபினாயில், தரைவிரிப்புகள், துடைப்பங்கள், காகிதக்கட்டுகள், குப்பைக்கூடைகள், மின்விசிறி போன்ற பொருட்களை பெற்றோர்கள் சீர்வரிசை வழங்குவது போல் ஊர்வலமாக எடுத்துவந்து வழங்கினர்.
பள்ளிக்குத் தேவையான கணினிகள், 3 கிலோவாட் யூ.பி.எஸ்., 10 மின் விசிறிகள், 25 ஸ்டூல்கள், மர அலமாரிகள், சிறிய மேசை நாற்காலிகள், நகல் எடுக்கும் இயந்திரம் என ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் விழாவில் பெறப்பட்டன.

குரல் தகவல் மூலம் பள்ளி செய்திகள் பெற்றோர்களுக்கு அறிவிப்பு
பள்ளி நிகழ்வுகளை பெற்றோர்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்க வாய்ஸ் கால் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு ஒவ்வொரு நாளும் காலை 10 மணி வரை பள்ளிக்கு வராத மாணவர்கள் பற்றிய அறிவிப்பு பெற்றோர்களைச் சென்றடைகிறது. மாணவர்களின் பிறந்த நாள், பெற்றோர் பிறந்த நாள், திருமண நாள் ஆகியவற்றுக்கு பள்ளியின் சார்பில் வாழ்த்துச்செய்தியும் அனுப்பப்படுகிறது.

இடப் பற்றாக்குறை காரணமாக பொதுமக்களே பள்ளிக்கு அருகில் 5 சென்ட் இடத்தை ரூ.7 லட்சத்துக்கு வாங்கிக் கொடுத்துள்ளனர். இன்னும் வகுப்பறைகள் கட்ட ஆசை. படிப்பை வைத்து மட்டுமே எல்லோராலும் மிளிரமுடியாது என்பதால், மற்ற பயிற்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறோம். எங்கள் மாணவர்கள், சிறந்த மாணவர் என்று பெயர்பெறுவதை விட சிறந்த மனிதராக உருவெடுப்பதையே என்னுடைய ஆசிரியப் பணிக்கான அங்கீகாரமாகக் கருதுகிறேன்" என்று உறுதியோடு சொல்கிறார் அன்பாசிரியர் செல்வக்கண்ணன்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement