Ad Code

Responsive Advertisement

தங்கம் வென்ற தங்கவேலுக்கு ரூ.2 கோடி பரிசு! - தமிழக அரசு அறிவிப்பு

பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு ரூ.2 கோடி பரிசுத்தொகையை தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்து உள்ளார்.


மாற்றுத்திறனாளிகளுக்கான பாராஒலிம்பிக் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற ​பாராலிம்பிக் போட்டியின் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் மாரியப்பன் தங்கவேலு, 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தையும், மற்றொரு இந்தியப் போட்டியாளரான வருண் சிங் 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தையும் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இதில் மாரியப்பன் தங்கவேலு தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். பாராலிம்பிக் போட்டியில் தங்கமும், வெண்கலப் பதக்கமும் வென்ற இந்திய வீரர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்தபடி உள்ளது. இதில், மாரியப்பன் தங்கவேலுவுக்கு தமிழக அரசு சார்பில் முதல்வர் ஜெயலலிதா ரூ.2 கோடியை பரிசாக அறிவித்து உள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாராலிம்பிக்கில் மாரியப்பன் தங்கவேலு தங்கப் பதக்கம் வென்றது இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும் பெருமை. பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் இந்தியர் ஒருவர் தங்கம் வெல்வது இதுவே முதன்முறை. மாரியப்பனின் சாதனை இளைஞர்களுக்கும், குழந்தைகளுக்கும் ஊக்கத்தை அளிக்கும். தமிழக அரசு சார்பில் அவருக்கு ரூ.2 கோடி பரிசு வழங்கப்படும்" என்று கூறியுள்ளார்.

இதேபோல்  பாராஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றுள்ள இருவருக்கும், பிரதமர் மோடி, விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.

மேலும், தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கும், வெண்கலப் பதக்கம் வென்ற வருண் சிங்குக்கும் மத்திய அரசு பரிசுத் தொகை அறிவித்துள்ளது.

அதன்படி, தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு ரூ.75 லட்சம் பரிசுத்தொகையும், வெண்கலம் வென்ற வருண் சிங்கிற்கும் ரூ.30 லட்சம் பரிசுத்தொகையையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், பதக்கம் வென்ற வீரர்களின் சாதனையைக் கண்டு பெருமைப்படுவதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் தெரிவித்து உள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement