Ad Code

Responsive Advertisement

அக். 17, 19-இல் 2 கட்டமாக உள்ளாட்சித் தேர்தல்

உள்ளாட்சி மன்ற அமைப்புகளுக்கான தேர்தல் 2 கட்டமாக அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன் அறிவித்தார். சென்னை கோயம்பேடில் உள்ள மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

மாநகராட்சிகள், நகராட்சிகள், மூன்றாம் நிலை நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளுக்கான சாதாரண தேர்தல் அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடைபெறும்.

இன்று முதல் வேட்பு மனு செய்யலாம்: வேட்புமனுக்களை திங்கள்கிழமை (செப். 26) முதல் அக்டோபர் 3 வரை, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி மன்ற அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தாக்கல் செய்யலாம். மனுக்கள் மீதான ஆய்வு அக்டோபர் 4-இல் காலை 10 மணிக்குத் தொடங்கும். 6-ஆம் தேதி மாலை 3 மணி வரை மனுக்களைத் திரும்பப் பெறலாம்.

இரு கட்டங்களில்...:

 நகர்ப்புறம், ஊரகம் என மொத்தம் 1,31,794 உள்ளாட்சி பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
முதல் கட்டமாக நகர்ப்புறங்களில் 10 மாநகராட்சிகளுக்கும், 64 நகராட்சிகளுக்கும், 225 பேரூராட்சிகளுக்கும் ஊரகப் பகுதிகளில் 193 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட 332 மாவட்ட ஊராட்சி வார்டுகளுக்கும், 3,250 ஒன்றிய வார்டுகளுக்கும் 50,640 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும், 6,444 கிராம ஊராட்சி தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் முதல் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 17-இல் நடைபெறும்.
இரண்டாம் கட்டமாக, நகர்ப்புறங்களில் 2 மாநகராட்சிகளுக்கும், 60 நகராட்சிகளுக்கும், 273 பேரூராட்சிகளுக்கும், ஊரகப் பகுதிகளில் 195 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட 323 மாவட்ட ஊராட்சி வார்டுகளுக்கும் 3,221 ஊராட்சி ஒன்றிய வார்டுகளுக்கும், 48,684 கிராம ஊராட்சி வார்டுகளுக்கும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும், 6,080 கிராம ஊராட்சித் தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கும் அக்டோபர் 19-இல் தேர்தல் நடைபெறும்.
சென்னை, திண்டுக்கல்

மாநகராட்சிகளுக்கு...:

சென்னை, திண்டுக்கல் மாநகராட்சிகளுக்கு 2-ஆம் கட்டத் தேர்தலில் வாக்குப் பதிவு நடைபெறும்.
வாக்குச் சாவடிகள்: ஊரகப் பகுதிகளில் 62,337 வாக்குச்சாவடிகளும், நகர்ப்புறங்களில் 28,761 வாக்குச்சாவடிகளும் என 91,098 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. சென்னை மாநகராட்சியில் மட்டும் 5,531 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.
வாக்குப்பதிவு இயந்திரங்கள்: ஊரகப் பகுதிகளில் 2,17,500 வாக்குப்பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளன. நகர்ப்புற வாக்குப்பதிவுக்கு 34,515 மின்னணு கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 41,418 மின்னணு வாக்குப்பதிவு கருவிகளும் மொத்தம் 75,933 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
முதல் முறையாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

வீடியோ மூலம் பதிவு:

 பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களால் கண்டறியப்பட்டு அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் அளிக்கப்படும். வாக்குப்பதிவு நடவடிக்கைகள் வீடியோ கிராஃபி மூலம் பதிவு செய்யப்படும்.
தேர்தல் பார்வையாளர்கள்: ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி வீதமும் சென்னை மாநகராட்சி மற்றும் சில மாநகராட்சி பகுதிகளுக்கு 2 தேர்தல் பார்வையாளர்களும் என மொத்தம் 37 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

தேர்தல் பணியில் 6.50 லட்சம் அலுவலர்கள்:
 நகர்ப்புற உள்ளாட்சிகளில் 664 தேர்தல் நடத்தும் அலுவலர்களும் 1,836 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஊரக உள்ளாட்சிகளில் 907 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 16,979 உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நகர்ப்புறங்களில் ஒரு வாக்குச்சாவடிக்கு 4 அலுவலர்கள் வீதமும், கிராமப்புறங்களில் ஒரு வாக்குச்சாவடிக்கு 7 அல்லது 8 அலுவலர்கள் வீதமும் சுமார் 6.50 லட்சம் அலுவலர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

5.80 கோடி வாக்காளர்கள்:

 5.80 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இதில் 2.88 கோடி ஆண்கள், 2.92 கோடி பெண்கள். இதர வாக்காளர்கள் 4,584 ஆகும்.

நடத்தை விதிகள் அமல்:

 தேதி அறிவிக்கப்பட்ட நேரத்தில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடுகின்றன. இதனை அரசியல் கட்சிகளும், தேர்தலில் போட்டியிடுபவர்களும் பின்பற்ற வேண்டும் என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement