Ad Code

Responsive Advertisement

ஐ.டி. துறையில் நெருக்கடி ஆசிரியர் பணியை விரும்பும் பெண் பொறியியல் பட்டதாரிகள்

ஐ.டி. துறையில் பணி நெருக்கடியால் ஏற்படும் மனஉளைச்சல், குடும்பத்தை கவனிக்க முடியாத பரிதாப நிலை ஆகிய வற்றின் காரணமாக, பெண் பொறியியல் பட்டதாரிகளின் கவனம் தற்போது ஆசிரியர் பணியின் மீது திரும்பத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக முன்னணி ஐடி நிறுவனங்களில் தாங்கள் பார்க்கும் வேலையை உதறிவிட்டு அவர்கள் பி.எட். படிப்பில் சேர்ந்து வருகிறார்கள்.

பொறியியல் பட்டதாரிகள் பி.எட். படிப்பில் சேரும் புதிய முறை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.இந்த ஆண்டு பி.எட் படிப்பில் அறிவியல், கணித பாடப்பிரிவுகளில் பொறியியல் பட்டதாரிகளுக்கு 20 சதவீத சிறப்பு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இந்த இடங் களுக்கு 154 பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கான கலந்தாய்வு சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் நடந்தது.

தகவல் தொழில்நுட்பத்துறையில் (ஐ.டி.) பணி நெருக்கடியின் காரணமாக ஏற்படும் மனஉளைச்சல், குடும்பத்தை கவனித்துக்கொள்ள முடியாத நிலை போன்ற காரணங்களால் ஆசிரியர் பணியை விரும்புவதாகவும் அதற்காக பி.எட் படிப்பில் சேருவதாகவும் கலந்தாய் வுக்கு வந்திருந்த பெரும்பாலான பெண் பொறியியல் பட்டதாரிகள் தெரிவித்தனர். பி.எட் படிப்புக்காக நிறைய பேர் முன்னணி ஐடி நிறுவனங்களில் பார்க்கும் வேலையை உதறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள ஆசிரியர் பணிதான் பெண்களுக்கு ஏற்ற பணி என்று அவர்கள் கருதுகின்றனர். வேலூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த பி.டெக். பட்டதாரி மொழியரசி கூறும்போது, “ஐடி வேலையில் இரவுப் பணி இருக்கும். திருமணம் ஆவதற்கு முன்பு ஷிப்டு முறையில் வேலை செய்வதில் சிரமம் இருக்காது. ஆனால், திருமணம், குடும்பம் என்று ஆன பிறகு இத்தகைய பணிச்சூழல் சரிப்பட்டு வராது. ஆசிரியர் வேலை, நிம்மதியான பணி” என்றார். முன்னணி ஐடி நிறுவனம் ஒன்றில் வேலையை ராஜினாமா செய்துவிட்டு பி.எட் படிப்பதற்காக வந்துள்ள சென்னை யைச்சேர்ந்த பொறியியல் பட்டதாரி பெண் ஒருவர் கூறும்போது, “ஐடி துறையில் மனஅழுத்தம் அதிகமாக இருக்கும். வேலையும் பார்க்க வேண்டும். குடும் பத்தையும் நன்கு கவனித்துக்கொள்ள வேண்டு்ம என்று நினைக்கும் பெண் களுக்கு அருமையான பணி ஆசிரியர் பணிதான்” என்றார். சென்னை குரோம் பேட்டையைச் சேர்ந்த பிஇ (கம்ப்யூட்டர் சயின்ஸ்) பட்டதாரியான சிவகாமி சுந்தரியும் இதே கருத்தை சொன்னார். நாகப்பட்டினம் மயிலாடுதுறையைச் சேர்ந்த பி.டெக் (இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி) பட்டதாரியான சுருதியின் தந்தை எஸ்.நாராயண பிரசாத் கூறும்போது, “முன்னணி ஐடி நிறுவனத்தில் பணியாற்றிய எனது மகள் பணியில் திருப்தி இல்லாத காரணத்தினால் வேலையை ராஜினாமா செய்துவிட்டார். ஐடி பணியுடன் ஒப்பிடும்போது ஆசிரியர் பணி பாதுகாப்பானது, எந்தவிதமான நெருக்கடியும் இன்றி பணியாற்றலாம்” என்றார். திருநின்றவூரைச் சேர்ந்த வி.யாமினி என்ற பிடெக் பட்டதாரி கூறும்போது, “நான் பிளஸ்2 முடித்துவிட்டு பொறியியல் படிப்பில் சேரப்போகிறேன் என்றபோது ஆசிரியர் பயிற்சியில் சேருமாறு பெற்றோர் அறிவுரை சொன்னார்கள். ஆனால், நான் அதையெல்லாம் கேட்காமல் பொறியியல் படிப்பை தேர்வுசெய்தேன். எனக்கு குழந்தை பிறந்த பின்னர்தான் பெற்றோர் சொன்ன அறிவுரை புரிகிறது. எனவே, ஆசிரியர் வேலைக்காக பி.எட் படிப்பில் சேரப்போகிறேன்” என்றார். அம்பத்தூரைச் சேர்ந்த அனுப்பிரியா, பி.எட் படிப்புக்காக ஐடி வேலையை உதறிவிட்டார்.

டெல்லி கல்லூரியில் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்த அவர், “திருமணம் முடிந்த பிறகு குடும்பத்தைக் கவனித்துக்கொள்ள அருமையான பணி ஆசிரியர் பணிதான்” என்றார். பூந்தமல்லி அய்யப்பன்தாங்கலைச் சேர்ந்த பிஇ பட்டதாரி ரேவதி, சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த பிடெக் பட்டதாரி திவ்யா பிரேம்குமார் ஆகியோரும் இதே கருத்தை தெரிவித்தனர்.

ஜெ.கு.லிஸ்பன் குமார் சென்னை

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement