Ad Code

Responsive Advertisement

மாணவன் முதுகில் அமர்ந்து பாடம் நடத்திய ஆசிரியர்?

அரசு பள்ளியில், மாணவனின் முதுகில் அமர்ந்து, ஆசிரியர் பாடம் நடத்திய சம்பவம், கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், அன்னுார் அரசு பள்ளி, 7ம் வகுப்பு மாணவன் பிரவீன்குமார். வகுப்பில், தமிழாசிரியர் மாரப்பன், பிரவீன்குமார் முதுகில் அமர்ந்து, பாடம் நடத்தியதாக அவரது தாயார் பரிமளா, கலெக்டரிடம் புகார் அளித்தார்.

நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழாசிரியர் மாரப்பன், என் மகனை படிக்க அனுமதிப்பதில்லை; மோசமான வார்த்தைகளால் திட்டியும், அடித்தும் துன்புறுத்தி வந்துள்ளார். வகுப்பில் அவனை குனியவைத்து, முதுகில் அமர்ந்து பாடம் எடுத்துள்ளார். இது பற்றி பெற்றோரிடம் தெரிவிக்கக் கூடாது என, மிரட்டியுள்ளார்.

கடந்த, 29ம் தேதி ஆசிரியரையும், தலைமை ஆசிரியரையும் சந்தித்து பேசினோம். 'உங்கள் மகனைப் பார்த்தாலே எரிச்சலாக இருக்கிறது. முகத்தை பார்த்தாலே கோபம் வருகிறது. வேறு பள்ளியில் சேர்த்து விடுங்கள்; கடும் மன உளைச்சல் ஏற்படுத்துகிறான்' என்று ஆசிரியர் மாரப்பன் கூறுகிறார். 

எங்களைப் போன்ற ஏழைகளுக்கு அரசு பள்ளி தான், அடைக்கலம் கொடுக்கிறது. அங்கு வரும் மாணவர்களுக்கு, நல்ல விஷயங்களை கற்றுக் கொடுத்து, நன்கு படிக்க வைக்க வேண்டிய ஆசிரியர்கள், இதுபோல் நடந்து கொள்வது வேதனை அளிக்கிறது. ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளி தலைமை ஆசிரியர் நேருவிடம் கேட்டதற்கு, 'ஆசிரியர் மாரப்பன், பிரவீன்குமார் மற்றும் அவரது பெற்றோரை, தனித்தனியாக விசாரித்தேன். வகுப்பிலுள்ள, 44 மாணவர்களிடம் விசாரணை நடத்தினோம். விசாரணையில், புகார் உண்மையில்லை என தெரிந்தது. மாணவன் குறும்பு செய்ததால் கண்டித்துள்ளார். ஒரு ஆசிரியரின் ஸ்தானத்தில் இருந்து, சிறு சிறு தண்டனைகளை மட்டுமே அவர் கொடுத்துள்ளார்' என்றார்.

கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்முருகன் கூறுகையில், ''இப்பிரச்னை குறித்து எனக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில், மாணவன், பெற்றோர், ஆசிரியரை விசாரணைக்கு உட்படுத்தி, அதன் பின், உண்மை நிலவரத்தை தெரிந்து, நடவடிக்கை
மேற்கொள்ளப்படும்,'' என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement