இந்த ஆண்டில் மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வை ரத்து செய்து மத்திய அரசு பிறப்பித்த அவசர சட்டத்துக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.
மருத்துவ படிப்பில் சேருவதற்கான தேசிய தகுதி நுழைவுத்தேர்வு என்ற பொது நுழைவுத்தேர்வை (‘நீட்’) இந்த கல்வி ஆண்டில் நிறுத்தி வைக்கும் வகையில் மத்தியமந்திரிசபை பரிந்துரை செய்த அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த மாதம் 24–ந் தேதி ஒப்புதல் அளித்தார்.இந்த அவசர சட்டத்தின்படி தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, குஜராத், மேற்கு வங்காளம், அசாம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் இந்த ஆண்டு மட்டும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வு கிடையாது.
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
நாடு முழுவதும் பொது நுழைவுத்தேர்வு மூலமாக மட்டுமே மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை அனுமதிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் சில மாற்றங்கள் செய்து மத்திய அரசு பிறப்பித்த இந்த அவசர சட்டத்தை எதிர்த்து, மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆனந்த்ராய் மற்றும் சங்கல்ப் அறக்கட்டளை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இந்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அனில் ஆர்.தவே, சிவகீர்த்தி சிங், ஏ.கே.கோயல் ஆகியோர் அடங்கியஅமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.மத்திய அரசின் சார்பில் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கி ஆஜரானார். தமிழக அரசின் சார்பில் மூத்த வக்கீல் வி.கிரி, தமிழக அரசு வக்கீல் யோகேஷ் கன்னா ஆகியோர் ஆஜரானார்கள்.மனுதாரர் ஆனந்த் ராய் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அம்ரீந்தர் சரண் தன்னுடைய வாதத்தின் போது கூறியதாவது:–
தீர்ப்புக்கு எதிரானது
சுப்ரீம் கோர்ட்டு இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே வழங்கிய தீர்ப்பில், மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை ‘நீட்’ என்ற பொது நுழைவுத்தேர்வின் மூலமாகத்தான் நடத்த வேண்டும் என்று தெளிவாக கூறப்பட்டு உள்ளது. ஆனால் மத்திய அரசு தற்போது பிறப்பித்துள்ள அவசர சட்டம் முற்றிலும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக உள்ளது. மேலும் இந்த அவசர சட்டம் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதாக அமைந்து உள்ளது. எனவே மத்திய அரசு பிறப்பித்துள்ள அவசர சட்டத்திற்கு உடனடியாக இடைக்கால தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அரசு கோரிக்கை
மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கி தனது வாதத்தின் போது கூறியதாவது:–சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்குவதற்கு முன்பே, கோவா, குஜராத், மிசோரம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான நுழைத்தேர்வு நடைபெற்று விட்டது. மத்திய அரசின் அவசர சட்டத்தை தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் மாணவர் சேர்க்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, மாணவர் சேர்க்கையே முடிந்து விட்டது. 17 மாநிலங்களில் மாணவர் சேர்க்கையும், அதற்கான தேர்வுகளும் நடைபெற்றுவிட்டன.மேலும் மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எந்த மாநிலத்தில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பவில்லை. இந்த நிலையில் மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு தடை விதிக்கும் பட்சத்தில் மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும். ஏற்கனவே வழக்கு நடைபெற்ற போதே மாணவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாயினர். எனவேமத்திய அரசின் அவசர சட்டத்துக்கு தடை விதிக்க கூடாது.இவ்வாறு அவர் தனது வாதத்தின் போது கூறினார்.
நீதிபதிகள் கருத்து
வக்கீல்கள் வாதத்தின் போது நீதிபதிகள் குறுக்கிட்டு கூறியதாவது:–மத்திய அரசு பிறப்பித்த அவசர சட்டம் சரியானதாக இல்லை. மருத்துவ படிப்பின் அடிப்படை தரத்தில் எந்தவிதமான சமரசமும் கூடாது என்பதை கருத்தில் கொண்டே பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படவேண்டும் என்று இந்த கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. சமூக நலனை கருத்தில் கொண்டே அந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. தனியார் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ரூ.50 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடி வரை மாணவர்கள் செலவழிக்க வேண்டியுள்ளது என்பதையும் இந்த கோர்ட்டு அறிந்துள்ளது.மே 9–ந் தேதி வழங்கப்பட்ட தீர்ப்புக்கு பிறகும், அந்தமாதம் 24–ந் தேதி பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்துக்கு பிறகும் பல மாநிலங்கள் தங்கள் மாநிலத்தில் சொந்த தேர்வுகளை நடத்தி உள்ளன. இந்த தேர்வுகள் சட்டவிரோதமானவை.இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.
தமிழ்நாடு
இதைத்தொடர்ந்து பேசிய அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கி, இந்த அவசர சட்டத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டில் ஏற்கனவே மருத்துவ கல்லூரிகளில் மாணவர்சேர்க்கை முடிவடைந்து விட்டது என்று கூறினார்.அதற்கு நீதிபதி ஏ.கே.கோயல், ‘‘அவசர சட்டத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் மாணவர் சேர்க்கை நடைபெற்றாலும் அடுத்த ஆண்டில் இந்த அவசர சட்டம் அங்கு பயன்படாது. பொது நுழைவுத்தேர்வு மூலமாக மட்டுமே மாணவர் சேர்க்கை அந்த மாநிலத்தில் நடைபெற்றாக வேண்டும். மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை அடுத்த ஆண்டில் நடைமுறைப்படுத்த முடியாது என்றார். சட்டமன்றங்களில் இயற்றப்படும் சட்டம் பாராளுமன்றத்துக்கு எதிராக இருப்பின் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டம் தான் நிலைக்கும்’’ என்றார்.
திருப்தி இல்லை
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இறுதியில் பிறப்பித்த உத்தரவு வருமாறு:–மருத்துவ மாணவர் சேர்க்கை விவகாரத்தை மத்திய அரசு கையாண்ட விதம் திருப்தி அளிப்பதாக இல்லை. ஏற்கனவே மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு தொடர்பாக இந்திய மருத்துவ கவுன்சில் அறிக்கை வெளியிட்டபோதே அதற்கு மத்திய அரசு தடை விதிக்கவோ, எதிர்ப்பு தெரிவிக்கவோ முயற்சிக்கவில்லை. தற்போதும் கூட, வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அவசர சட்டம் கொண்டுவந்து பிரச்சினைக்கு தீர்வு காணப் போகிறோம் என்றும் கூறவில்லை.
தடை விதிக்க முடியாது
நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னரே அவசர அவசரமாக இந்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. மத்திய அரசின் செயல்பாடு வருத்தம் அளித்தாலும், மாணவர்களின் நலனையும், எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது. அவசர சட்டத்தில் உள்ள குளறுபடிகள் குறித்துமனுதாரர்கள் தங்கள் தரப்பு வாதங்களை கோர்ட்டின் முன்வைக்கலாம்.
இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி உள்ளனர்.அத்துடன் இந்த வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை