Ad Code

Responsive Advertisement

ஒருங்கிணைந்த பாடத் திட்டம் நடைமுறைக்கு வருமா?

புதிய பட்டப் படிப்புகள், வேறுபட்ட பாடத் திட்டங்களால் எழும் சிக்கல்களுக்குத் தீர்வு காண உருவாக்கப்பட்ட "ஒருங்கிணைந்த பாடத் திட்டம்' நடைமுறைக்கு வருவது எப்போது என்ற எதிர்பார்ப்பு கல்வியாளர்களிடையே எழுந்துள்ளது.


தமிழகத்தில் சென்னைப் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 13 கலை- அறிவியல் பல்கலைக்கழகங்களின் கீழ் 700 கலை- அறிவியல்கல்லூரிகள் இணைப்பு பெற்று இயங்கி வருகின்றன.படிப்புகளை நடத்த அனுமதி, பாடத் திட்டங்களை வகுத்தல், தேர்வுகளை நடத்தி முடிவுகளை அறிவித்தல் போன்றவற்றை அந்தந்தப் பல்கலைக்கழகங்கள் செய்து வருகின்றன. இவற்றில் தன்னாட்சிக் கல்லூரிகள் மட்டும் பாடத் திட்டங்களை வகுத்து, பல்கலைக்கழகத்தின் ஒப்புதலைப் பெற்று நடத்திக் கொள்ளலாம்.இதனால், ஒரே படிப்புக்கு பல்கலைக்கழகங்களுக்குள் வேறுபாடு காரணமாக, மாணவர்கள் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர்.

உதாரணமாக, சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவர், சில காரணங்களுக்காக இரண்டாம் ஆண்டில் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள ஒரு கல்லூரிக்கு மாறுகிறபோது, அந்தப் பாடத் திட்டத்தில் உள்ள அதிகப்படியான வேறுபாட்டால் பெரும் சிக்கலை எதிர்கொள்ள நேரிடுகிறது என்கின்றனர் பேராசிரியர்கள்.இதேபோல, தொழில் நிறுவனங்களின் தேவைக்கேற்ப அறிமுகம் செய்யப்படும் புதிய படிப்புகளில் சேரும் மாணவர்களை, கல்லூரிப் பேராசிரியர்கள் தேர்வின்போது ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) புறக்கணிப்பதும் தொடர்கதையாகி வருகிறது.சில ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தப்பட்ட ஆசிரியர் தேர்வு வாரிய உதவிப் பேராசிரியர் தேர்வில், 50-க்கும்மேற்பட்ட மொழியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. மேலும், அப்ளைடு எகனாமிக்ஸ், கணினி அப்ளிகேஷனுடன் கூடிய வணிகவியல் படிப்புகளை முடித்தவர்களும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் பல ஆயிரம் மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டதாக பேராசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.இதையடுத்து, தமிழக அரசு உத்தரவின்பேரில் ஒருங்கிணைந்தபாடத் திட்ட விவரத்தை வெளியிடும் பணியை 2014-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் மேற்கொண்டது.

இதன்படி, பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி கல்லூரிகளில் வழங்கப்படும் நூற்றுக்கும் அதிகமான பட்டப் படிப்புகள் குறித்த முழு விவரங்களையும் சேகரித்து, அவற்றின் மூல பட்டப் படிப்பு வேறு எந்தெந்தப் பட்டப் படிப்புக்கு இணையானவை என இனம் காணும் பணிகள் நடைபெற்றன.


2015-ஆம் ஆண்டு இறுதியில் பணிகளை நிறைவு செய்து, பல்வேறு தரப்பினரின் கருத்துகளைக் கேட்பதற்கு அனுமதிகேட்டு தமிழக அரசுக்கு உயர்கல்வி மன்றம் சார்பில் கருத்துரு அனுப்பிவைக்கப்பட்டது.ஆனால், 6 மாதங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில், அரசின் ஒப்புதல் கிடைக்காததால், தயாரிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பாடத் திட்டம் இணையதளத்தில் பதிவேற்றம்செய்யப்படாமல் கிடப்பில் உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு உயர் கல்வி மன்ற அதிகாரிகள் கூறியதாவது:-திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், ஒவ்வொரு படிப்புக்கும் தனித் தனி நிபுணர்கள் மூலம் கருத்துகள் கேட்கப்பட்டு சீர்திருத்தங்களை மேற்கொள்ளப்படும்.

 இதையடுத்து, மாணவர்களின் பார்வைக்காக உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுவிடும்.இது நடைமுறைக்கு வந்தால், மாணவர் கல்லூரியில் சேரும்போதே தான் சேரும் பட்டப் படிப்பு, எந்தெந்தப் படிப்புகளுக்கு இணையானது என்பதை அறிந்துகொள்ள முடியும். டி.ஆர்.பி. வேலைவாய்ப்பில் இருந்து வரும் சிக்கலுக்கும் தீர்வு கிடைத்துவிடும் என்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement