காத்திருக்கிறது ரூ. ஒரு லட்சம் கோடி
7வது ஊதியக்குழு பரிந்துரைஎந்த நாட்டின் பொருளாதாரமும் பணம் புழங்கினால்தான் செழிப்பாக இருக்கும். திடீரென ரூ.1 லட்சம் கோடி பணம் சந்தையில் பாய்ந்தால் என்னாகும்? கார் விற்பனை, டூ வீலர் விற்பனை, வீடு, மனை விற்பனை தூள் பறக்கும். அதுபோக, வீட்டுக்குத் தேவையான வாஷிங் மெஷின், ஏ.சி., 50 அங்குல டிவி என பணம் தாராளமாக புழங்கும்.
ஐந்தாவது ஊதிய குழு பரிந்து ரைக்குப் பிறகு அதனை அமல்படுத்த மத்திய அரசு 19 மாதங்கள் எடுத்துக் கொண்டது. அதேபோல ஆறாவது ஊதிய குழு பரிந்துரையை ஏற்றுக் கொள்ள மத்திய அரசு 32 மாத காலம் அவகாசம் எடுத்துக்கொண்டது. ஆனால் இப்போது ஆறு மாதங்களுக் குள்ளாகவே இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. 47 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களும் 53 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் இதன் மூலம் பயனடைவார்கள். 23.5 சதவீத ஊதிய உயர்வுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் அடிப்படை ஊதியம் 14.3 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டிருக்கிறது. கடந்த நான்கு சம்பள கமிஷன்களில் குறைந்தபட்ச ஊதிய உயர்வு இதுதான். இதற்கு முந்தைய கமிஷன்களில் அடிப்படை சம்பளம் 20.6%,27.6%,31% மற்றும் 54% உயர்த்தப்பட்டிருக்கின்றன. மத்திய அரசு எவ்வளவு ஊதிய உயர்வு வழங்குகிறது, மத்திய அரசுக்கு எவ்வளவு செலவாகும்,எந்தெந்த துறைகளில் வளர்ச்சி ஏற்படும், பணவீக்கம் உயருமா என ஒவ்வொன்றையும் பார்ப்போம். சலுகைகள் என்ன? மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.7,000-லிருந்து ரூ.18,000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதேபோல அதிகபட்ச சம்பளம் ரூ.90,000-லிருந்து ரூ. 2.50 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
புதிதாக பணியில் சேரும் ஆரம்பகட்ட பணியாளரின் சம்பளம் ரூ.18,000 ஆக இருக்கும். அதேபோல புதிதாக பணியில் சேரும் பிரிவு 1 அலுவலரின் சம்பளம் ரூ.56,100 ஆக இருக்கும். இதன் மூலம் குறைந்தபட்ச பணியாளர்களுக்கும் அதிகபட்ச பணியாளருக்கும் உள்ள விகிதம் 1:13.9 ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக இந்த விகிதம் 1:12 என்ற அளவில் இருந்தது. இதனை 1:8 என்ற அளவில் குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் இருந்தன. 3 சதவீத ஆண்டுஊதிய உயர்வு தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர பணிக்கொடை ரூ.10 லட்சத்திலிருந்து 25 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. வீடு கட்டுவதற்காக முன் தொகை ரூ.7.5 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அரசின் செலவுகள் ஏழாவது சம்பள கமிஷனின் பரிந்துரையை ஏற்பதால் அரசுக்கு இந்த ஆண்டு கூடுதலாக ரூ. 1.02 லட்சம் கோடி செலவாகும். தவிர அடுத்தடுத்த நிதி ஆண்டுகளில் கூடுதலாக ரூ.72,800 கோடி செலவாகும். சம்பளம், சலுகை மற்றும் ஓய்வூதியத்துக்காக மத்திய அரசு செலவிடும் தொகை ஜிடிபியில் 2.8 சதவீதமாக கடந்த சில நிதி ஆண்டுகளாக இருந்தது. நடப்பு நிதி ஆண்டில்3.4 சதவீதமாக உயரக்கூடும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
பலன்கள் என்ன? அரசுக்கு செலவு,சங்கங்கள் எதிர்ப்பு என இருந்தாலும் பொருளாதாரத்தில் ஏழாவது ஊதிய குழு தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த பரிந்துரையால் ஒரு கோடிக்கும் அதிகமானவர்களிடம் கூடுதல் தொகை இன்னும் சில மாதங்களில் கிடைக்கும். அதனால் தொலைக்காட்சி, ஏசி, வாஷிங்மெஷின் என்று அழைக்கப்படும் வொயிட் கூட்ஸ் விற்பனை நன்றாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. கூடுதலாக பருவமழை நன்றாக இருப்பதால் கிராமப் புற பொருளாதாரம் மேம்படும் என்பதால் இந்த துறை நிறுவனங்களின் விற்பனை உயரும். பொதுவாகவே விழாக்காலங் களில்தான் இதுபோன்ற பொருள்களின்விற்பனை அதிகரிக்கும், இப்போது சம்பள கமிஷனும் வந்துள்ளது. தவிர வீடு வாங்கும் போக்கும் உயரும். ஆட்டோமொபைல் துறை ஆறாவது சம்பள கமிஷன் அமல்படுத்தப்பட்ட போது 2 வருடங்களுக்கு மேலான நிலுவைத் தொகை மக்களுக்கு கிடைத்ததால் அப்போது விற்பனை அதிகரித்தது.
ஆனால் இப்போது ஆறு மாத நிலுவைத் தொகை கிடைக்கும் என்பதால் பெரிய அளவில் விற்பனை இருக்காது என்று ஆட்டோமொபைல் துறையினர் கருத்து தெரிவித்திருக்கின்றனர். இருந்தாலும் அதிக பட்ச ஊதியம் உயர்த்தப்பட்டிருப்பதால் கணிசமாக விற்பனை இருக்கும் என்று இந்த துறையினர் எதிர்பார்க்கிறார்கள். மாருதி சுஸூகி 2.5 லட்சம் கார்களை மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு விற்க முடியும் என்று கருத்து தெரிவித்திருக்கிறது. அதே சமயத்தில் இரு சக்கர வாகன விற்பனை உயரும் என்று ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் கருத்து தெரிவித்திருக்கிறது. பங்குச் சந்தை ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பணப்புழக்கம் அதிகரித்தாலும் ஏழாவது ஊதிய குழுவால் பெரிய ஏற்றம் இருக்காது என பங்குச்சந்தை வல்லுநர் ஜி .சொக்கலிங்கம் தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாக ஆட்டோமொபைல், எலெக்ட்ரானிக்ஸ் கூட்ஸ் ஆகிய நிறுவனங்கள் விற்பனை அதிகரிக்குமே தவிர இதனால் பங்குச்சந்தையில் பெரிய மாற்றம் வர வாய்ப்பில்லை என்று கூறியிருக்கிறார். ஜிடிபி வளர்ச்சி ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையால் பொருளாதாரத்தில் வேகம் எடுக்கும் என்று தரமதிப்பீட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. செலவுகள் மற்றும் சேமிப்பு உயரும் என்பதால் நடப்பு நிதி ஆண்டில் 7.9 சதவீத வளர்ச்சி இருக்கும் என்று கிரிசில் தெரிவித்துள்ளது. சம்பளக் கமிஷனால் ஒரு சதவீதம் கூடுதல்வளர்ச்சி இருக்கும் என்று பேங்க் ஆப் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஜிடிபி வளர்ச்சி ஒரு புறம் இருந்தா லும் பணவீக்கம் உயர்வதற்கான வாய்ப்பும், நிதிப் பற்றாக்குறைக்கு நிர்ணயம் செய்யப்பட்ட இலக்கை எட்டமுடியாமல் போவதற்கான சாத்தியங்களும் உள்ள தாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது குறைந்தபட்ச ஊதியம் 18,000 ரூபாயாக நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. இதனை 26,000 ரூபாயாக உயர்த்த சங்கங்கள் கோரிக்கை வைத்தன. இந்த கோரிக்கை முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும், குறைந்தபட்ச சம்பளம் மாற்றம் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒரு வேளை மாற்றம் நிகழ்ந்தால் நுகர்வு மேலும் உயரவே வாய்ப்புள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை