Ad Code

Responsive Advertisement

திருநங்கைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு: 6 மாதங்களில் அரசு முடிவெடுக்க வேண்டும்

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் திருநங்கைகளுக்கு வாய்ப்பு அளித்தல், இட ஒதுக்கீடு செய்தல் ஆகியவை குறித்து 6 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என்று தமிழக சமூக நலத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


சென்னை உயர் நீதிமன்றத்தில் திருநங்கைகள் ஸ்வப்னா, கிரேஸ் பானு, செல்வி மனோஜ் பிரேம்குமார், லிவிங் ஸ்மைல் வித்யா, செல்வம் ஆகியோர் திருநங்கைகளுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி மனுத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல் வாதிடும்போது, ‘தமிழகத்தில் 3328 திருநங்களுக்கு மட்டும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. திருநங்கைகளுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அதன் மூலம் கல்வி வேலை வாய்ப்பில் அவர்கள் பயன்பெற முடியும். மிகவும் பரிதாபமான நிலையில் உள்ள இந்த பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடம் வழங்கினால் அவர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபட வாய்ப்பு ஏற்படாது. வெறும் அடையாள அட்டை மட்டும் அவர்களின் வயிற்றை நிறைக்காது என்று வாதிட்டார்.

இந்த வழக்கை விசாரித்த முதல் டிவிஷன் பெஞ்ச் வழக்கில் இறுதி உத்தரவை பிறப்பித்தது. அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது: அரசியலமைப்பு சட்டம் பிரிவு 14ல் திருநங்கைகளுக்கு பல வாய்ப்புகள் தரப்பட்டுள்ளது. ஆனால், இது வெறும் ஏட்டளவில்தான் உள்ளது என்றும் அவர்களை பெண் என்றோ அல்லது மாற்றுப்பாலினம் என்றோ அழைக்க வேண்டும் என்று வாதிட்டுள்ளனர். திருநங்கைகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்குமாறு உத்தரவிடவும் கோரப்பட்டுள்ளது. எனவே, மனுதாரர்களின் கோரிக்கையை தமிழக சமூக நலத்துறை பரிசீலனை செய்து சம்மந்தப்பட்ட துறைகளுடன் ஆலோசித்து 6 மாதங்களுக்குள் உரிய முடிவை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement