Ad Code

Responsive Advertisement

மடிக்கணினி, பாடப்புத்தகம், சீருடை, காலணி, சைக்கிள் என மாணவர்கள் பயன்பெறும் திட்டங்களுக்கு ரூ.2,705 கோடி ஒதுக்கீடு; தமிழக பட்ஜெட்டில் தகவல்.

மடிக்கணினிகள், விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், 4 சீருடைத் தொகுப்புகள், காலணிகள், புத்தகப் பைகள், பஸ் கட்டண சலுகைகள், சைக்கிள்கள் என மாணவர்கள் பயன்பெறும் திட்டங்களுக்கு ரூ.2,705 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பட்ஜெட்டில் கூறப்பட்டிருப்பதாவது:–

நபார்டு வங்கி கடன்

* புவியியல் தகவல் முறைமையின்படி தயாரிக்கப்பட்ட பள்ளி இருப்பிட வரைபட செயலி உதவியுடன் புதிய பள்ளிகளைதொடங்குதல், இயங்கிவரும் பள்ளிகளை தரம் உயர்த்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் குழந்தைகள் அனைவரும் பள்ளிகளில் சேர்க்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்–மாணவர் விகிதாச்சாரம், தொடக்கப் பள்ளிகளில் 1:25 ஆகவும், நடுநிலைப் பள்ளிகளில் 1:24 ஆகவும், உயர்நிலைப் பள்ளிகளில் 1:26 ஆகவும், மேல்நிலைப் பள்ளிகளில் 1:37 ஆகவும் மேம்படுத்தப்பட்டு, தேசிய அளவுகோலான, முறையே 1:30, 1:35, 1:40 மற்றும் 1:45 என்ற விகிதாச்சாரங்களைவிட சிறப்பாக உள்ளன.

* 2016–2017–ம் ஆண்டில் 59.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தொடக்க மற்றும் உயர்நிலை பள்ளிகளில் 4,339 கழிவறைகள் அமைத்துத்தரப்படும். நபார்டு வங்கிக் கடன் உதவியுடன் வகுப்பறைகள், கழிவறைகள் மற்றும் குடிநீர் வசதிகள் போன்ற பள்ளி கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக, இந்த திருத்த வரவு–செலவு திட்ட மதிப்பீடுகளில் 333.61 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மடிக்கணினி

* ‘குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்’ கீழ், நடப்பாண்டில், 86,199 குழந்தைகள் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்காக, இந்தத் திருத்த வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 125.70 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* அனைவருக்கும் கல்வி இயக்கத்திற்காக 2,329.15 கோடி ரூபாயும், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கத்திற்காக 1,139.52 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* இந்த அரசு, மாணவ–மாணவியர்களுக்கு மடிக்கணினிகள், விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், 4 சீருடைத் தொகுப்புகள், காலணிகள், புத்தகப் பைகள், பஸ் கட்டணச் சலுகைகள், சைக்கிள்கள் போன்றவற்றைத் தொடர்ந்து வழங்கும். இதற்காக, 2016–2017–ம் ஆண்டிற்கான திருத்த வரவு–செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 2,705 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10, 11 மற்றும் 12–ம் வகுப்புகளில் மாணவிகளின் இடைநிற்றலை மேலும் குறைக்கும் பொருட்டு, சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இத்திட்டத்திற்காக, 2016–2017–ம் ஆண்டிற்கான திருத்த வரவு–செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 381 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களுக்கு மானியம்

* பள்ளிக் கல்விக்காக, 2016–2017–ம் ஆண்டிற்கான திருத்த வரவு–செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மொத்தமாக24,130 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* கல்வியில் பின்தங்கிய குடும்பங்களில் இருந்து உயர்கல்வி பயிலும் மாணவ – மாணவியர்களை ஊக்குவிக்க, முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்குக் கல்விக் கட்டணத்தைத் திரும்ப வழங்கும் திட்டத்தைத் தொடர்ந்துசெயல்படுத்த, 2016–2017–ம் ஆண்டிற்கான திருத்த வரவு–செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 582.58 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக, 2016 – 2017–ம் ஆண்டிற்கான திருத்த வரவு–செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 233 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு 152.97 கோடி ரூபாய் உள்பட, அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் மானியம் வழங்குவதற்காக, திருத்த வரவு–செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மொத்தமாக இந்த அரசு 357.12 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. 2016–2017–ம் ஆண்டிற்கான திருத்த வரவு–செலவுத் திட்ட மதிப்பீடுகளில், உயர்கல்வித் துறைக்கென மொத்தமாக 3,679.01 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement