Ad Code

Responsive Advertisement

பிளஸ்-2 தேர்வில் முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்ததாக தலைமை ஆசிரியர்கள் உள்பட 4 பேர் இடைநீக்கம்

அந்தியூர் பள்ளியில் நடந்த இந்த மோசடி குறித்து பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 4-ந் தேதி முதல் ஏப்ரல் 1-ந் தேதி வரை நடந்தது. வேதியியல் தேர்வில் கேள்விகள் கடினமாக கேட்கப்பட்டதாக கூறப்பட்டது. வேதியியல் தேர்வில் விடைகளை ஆசிரியர்கள் திருத்தியபோது, 5 மாணவர்களின் விடைத்தாள்களில் ஒரு மதிப்பெண் கேள்விகளில் சில கேள்விகளுக்கு விடை அளித்தது ஒரே கையெழுத்தாக இருந்தது.


அந்த 5 மாணவர்களும் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள ஆதர்ஷ் வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் என்று கூறப்படுகிறது. எனவே அந்த 5 மாணவர்களையும் தேர்வுத்துறை அதிகாரிகள் அழைத்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அந்த மாணவர்கள் விடைத்தாளில் உள்ள குறிப்பிட்ட கையெழுத்து ‘எங்களுடையது இல்லை’ என்று கூறி உள்ளனர். இதனால் அந்த மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.


4 ஆசிரியர்கள் இடைநீக்கம் இந்த நிலையில் தேர்வில் எவ்வாறு முறைகேடு நடந்தது என்பது குறித்து தேர்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். விசாரணையின் அடிப்படையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் ஆதர்ஷ் வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு பணியில் ஈடுபட்ட ஈரோடு மாவட்டம் மாத்தூர் மாடல் பள்ளி தலைமை ஆசிரியர் நஷீர், டி.ஜி.புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் சகாயராஜ், பவானி அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆறுமுகம், முருகன் ஆகிய 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு தேர்வுத்துறை அதிகாரிகள் பள்ளிக்கல்வி இயக்குனரகத்திற்கு சிபாரிசு செய்துள்ளனர்.


இதையொட்டி அந்த 4 ஆசிரியர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். 


இது குறித்து தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாநில தலைவர் சாமி சத்திய மூர்த்தி கூறியதாவது:- 


தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள ஆதர்ஷ் வித்யாலயா மெட்ரிகுலேசன் பள்ளியில் தேர்வுப்பணியில் ஈடுபட்டிருந்த 4 ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதுதவறு இல்லை. ஆனால் அந்த பள்ளியில் தேர்வுப்பணியில் ஈடுபட்டிருந்த முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் ஆகியோரிடமும் விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நட வடிக்கை எடுக்கவேண்டும். 


ஒரே கையெழுத்து 5 மாணவர்களின் விடைத்தாளில் எப்படி வந்தது. இது பெரிய அளவில் நடந்த மோசடி ஆகும். இதில் பலரும் ஈடுபட்டிருக்க வாய்ப்பு உண்டு. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். கல்விப்பணி தொடர வாய்ப்பு அளிக்க வேண்டும் தேர்வு முடிவு வெளியிடப்படாமல் இருக்கும் 5 மாணவர்களுக்கும் மீண்டும் தேர்வு நடத்தி அவர்கள் கல்விப்பணி தொடர வாய்ப்பு அளிக்க வேண்டும். விதிமுறைகளை மீறி மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் அதிக மாணவர்களை சேர்க்கக்கூடாது. இதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு சாமி சத்திய மூர்த்தி தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement