Ad Code

Responsive Advertisement

சாட்சி கையெழுத்து போட்டால் பிரச்னை வருமா?

இதனைப்பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், "கேரண்டி கையெழுத்து" (ஜாமீன்) மற்றும் "சாட்சி கையெழுத்து" என்ற இருவகைகளை அறிந்து கொண்டால் மிக இலகுவாக நீங்களே புரிந்து கொள்வீர்கள்.


”சாட்சி கையெழுத்து என்பது எந்த ஒரு ஆவணத்திலும் கையெழுத்து இட்டதற்கு சாட்சியாக இரண்டு நபர்களை கையெழுத்து போட வைப்பதுதான். அதாவது, அந்த ஆவணத்தில் கையெழுத்து போட்டவர் இந்த நபர்தான் என்பதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் போடும் கையெழுத்துதான் சாட்சி கையெழுத்து. உயில், தானம் போன்ற ஆவணங்களில் சாட்சி கையெழுத்து அவசியம்.

வங்கியில் கடன் வாங்கும்போது கேரன்டி கையெழுத்து கேட்பார்கள். கேரன்டி கையெழுத்து என்பது கடன் வாங்கும் நபர் கடனை திரும்பச் செலுத்தவில்லை எனில் கேரன்டி கையெழுத்து போட்டவர் தான் அந்த கடனை திரும்பச் செலுத்த கடமைப்பட்டவர் ஆவார். நேரடியாக கடன் வாங்கிய நபரை அணுகாமல் கேரண்டி கையெழுத்து போட்டவரிடமே கடனை கேட்க வங்கிக்கு உரிமை உண்டு. அந்த கடனில் அவருக்கும் பங்குண்டு என்பதே கேரண்டி கையெழுத்தின் சாராம்சம்.


கேரண்டி கையெழுத்துக்கும், சாட்சி கையெழுத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. ஆவணத்தில் தனக்கு முன்பாக அதை எழுதிக் கொடுத்தவர் கையப்பமிட்டார் என்பதற்கு ஆதாரம்தான் சாட்சிக் கையெழுத்து. அதற்கு மட்டுமே சாட்சி பயன்படுவார். தவிர, அந்த ஆவணத்தில் இருக்கும் மற்ற விஷயங்களுக்கு சாட்சி கையெழுத்து போட்டவர் பொறுப்பாக மாட்டார். சாட்சி கையெழுத்து போடும்போது அந்த ஆவணத்தில் இருக்கும் சங்கதிகள் அல்லது தகவல்கள் சாட்சி கையெழுத்து போடும் நபருக்கு தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அதாவது ஆவணத்தின் தன்மை, உரிமை மாற்றம் என எதுவாக இருந்தாலும் அதை சாட்சி தெரிந்து கொள்ள, தெரிந்திருக்க வேண்டிய அவசிய மில்லை. (நெருங்கிய உறவினர் தயாரித்த ஆவணத்தில் கையெழுத்து போடுகையில் விதி விலக்கு உண்டு)



சாட்சி கையெழுத்து போடுபவருக்கு என்ன சிக்கல்வரும்? நில அபகரிப்பு மோசடி வழக்கு தொடுக்கபடும் போது, இந்த நிலத்தை நான் விற்கவில்லை இந்த கையெழுத்து என்னுடையது இல்லை என அந்த நிலத்தை விற்ற நபர்கள் சொல்லும்போது. அல்லது புரோநோட்டை எழுதி கொடுத்தவர் அதில் உள்ள கையெழுத்தை மறுக்கும் போது அந்த ஆவணத்தில் சாட்சி கையெழுத்து போட்ட நபர்களை நீதிமன்றம் விசாரணைக்கு வரச்சொல்லும். இந்த இடத்தில்தான் சாட்சி கையெழுத்து போடும் நபருக்கு பொறுப்பு வருகிறது. அந்த ஆவணத்தில் கையெழுத்து போட்டது இவர்தான் என சாட்சி கையெழுத்து போட்ட நபர் சொல்லும் சாட்சிதான் மிக முக்கியமாக கருதப்படும். இந்த நேரத்தில் மட்டும்தான் சாட்சி கையெழுத்து போட்டவர் நீதிமன்றத்திற்கு அழைக்கப்படுவார்.



நன்கு தெரிந்தவர் உங்களிடம் கேட்டுக் கொண்டால் ஒழிய, முன்பின் தெரியாதவர்களுக்கு சாட்சி கையெழுத்து போட வேண்டாம். சிலர் நூறு அல்லது இருநூறு கொடுப்பதாகவும் ஆசை காட்டுவார்கள். பணத்திற்காக ஆசைப்பட்டு யார் யாருக்கோ கையெழுத்து போட்டால் பிற்பாடு நீதிமன்றத்தின் படிகளை அடிக்கடி ஏற வேண்டியிருக்கும்!


நன்றி:
‪ஆர்‬.சையத் பஷீர் (நிறுவன தலைவர்)
ஊழலுக்கு எதிரான அமைப்பு

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement