Ad Code

Responsive Advertisement

பிஹாரில் பிளஸ் 2 தேர்வு முறைகேடு: முதலிட மாணவி ரூபி ராய் கைது

பிஹாரில் முறைகேடு புகாரில் சிக்கிய பிளஸ் 2 முதலிட மாணவி ரூபி ராய் மறுதேர்வில் தேர்ச்சி பெறாததை அடுத்து, சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் அவரை கைது செய்தனர். 



பிஹார் பிளஸ் 2 தேர்வில் கலை பாடப்பிரிவில், 500-க்கு 444 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவியாக அறிவிக்கப்பட்டவர் ரூபி ராய் (19). ஆனால், உள்ளூர் தொலைக்காட்சி பேட்டியில் ‘பொலிட்டிக்கல் சயின்ஸ்’ என்பதை ‘புரோடிகல் சயின்ஸ்’ என உச்சரித்ததும், அரசியல் அறிவியல் பாடம், சமையல் கலை சம்பந்தப்பட்டது எனக் கூறியதும் அவரின் தேர்வை கேள்விக்கு உள்ளாக்கின.

இவரைப் போல, கலை மற்றும் அறிவியல் பிரிவில், 14 மாணவர்கள் அடிப்படைத் தகுதியின்றி, முதலிடம் பிடித்ததாக எழுந்த புகாரை விசாரிக்க, சிறப்பு புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிடப்பட்டது. மற்ற 13 மாணவர்களும் மறுதேர்வுக்கு ஆஜராகி, முந்தைய தேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், ரூபி ராய் மட்டும் மறுதேர்வுக்கு வராமல் இருந்தார்.

கடந்த, 3 மற்றும் 17-ம் தேதி என இரு முறை அவருக்கு வாய்ப்பு அளித்தும், பல்வேறு காரணங்களைக் கூறி, மறுதேர்வுக்கு ஆஜராகாமல் இருந்தார். இந்நிலையில், நேற்று பாட்னாவில் கல்வித் துறையின் சிறப்பு குழு முன்பாக மறுதேர்வுக்கு ரூபி ராய் ஆஜரானார். மறுதேர்வில் அவரின் தகுதியிழப்பை குழுவினர் உறுதி செய்ததை அடுத்து, ரூபி ராயை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

இன்று அவரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த உள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். ரூபி ராய் உள்பட, முறைகேட்டில் ஈடுபட்ட நான்கு மாணவர்களுக்கு எதிராக, பாட்னா சிவில் நீதிமன்றம் ஜாமினில் வெளிவர முடியாத கைது வாரன்ட் பிறப்பித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

இவ்வழக்கில் வைசாலி மாவட்டத்தில் உள்ள வி.ஆர் கல்லூரி முதல்வர் பச்சா ராய் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு, பாட்னா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிஹார் மாநில தேர்வு வாரிய முன்னாள் தலைவர் லால்கேஷ்வர் பிரசாத், அவரின் மனைவி மற்றும் ஐக்கிய ஜனதா தள முன்னாள் எம்எல்ஏ உஷா சின்ஹா உள்பட 20 பேரை சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் கைது செய்துள்ளனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement