Ad Code

Responsive Advertisement

தேர்வுக்கு வராத மாணவர்களும் 'பாஸ்': அரசு பள்ளி ஆசிரியர்கள் அதிருப்தி.

ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரை, மூன்றாம் பருவத்தேர்வுக்கு வராத மாணவர்களுக்கும், தேர்ச்சி வழங்கப்படுவதால், மாணவர்களிடையே கற்றல் குறித்த பொறுப்புணர்வு குறைந்து வருவதாக, ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, முப்பருவக்கல்வி முறை உள்ளது.

மேலும், அனைவருக்கும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், எட்டாம் வகுப்பு வரை, 'ஆல்பாஸ்' செய்யும் நடைமுறை அமலில் உள்ளது. எட்டாம் வகுப்பு முடிக்கும் வரை, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி செய்வது கட்டாயம் என்றாலும், ஒவ்வொரு பருவத்தின் முடிவிலும், தேர்வுகள் நடத்தப்படுகின்றன. 


அந்த தேர்வுகளில் பங்கேற்காத மாணவர்களுக்கும், தேர்ச்சி வழங்கும் நிலை காணப்படுவதால், மாணவர்களிடையே கற்றல் குறித்த பொறுப்புகுறைந்து வருவதாக, ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.



இதுகுறித்து அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: முப்பருவக்கல்வி முறை அமல்படுத்தப்படும் முன், பள்ளி இறுதி தேர்வுக்கு வராத மாணவர்களுக்கு, அதற்கு முந்தைய அரையாண்டு தேர்வு அடிப்படையில், தேர்ச்சி வழங்கப்படுவது வழக்கமாக இருந்தது. அதற்கு காரணம், அரையாண்டு மற்றும் இறுதி தேர்வு இரண்டுக்கும், ஒரே பாடங்களே இருந்ததுதான். 


ஆனால், தற்போது மூன்று பருவங்களுக்கும், வேறு வேறு பாடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், மூன்றாம் பருவத்தேர்வுக்கு வராத மாணவர்களுக்கு, இரண்டாவது அல்லது முதல் பருவ தேர்வு அடிப்படையில், தேர்ச்சி வழங்கும் நடைமுறை உள்ளது. மூன்றாம் பருவ பாடப்புத்தகம் முழுமையாக வேறுபட்டிருக்கும் நிலையில், அதில் தேர்வே எழுதாமல், தேர்ச்சி வழங்கும் நிலை உள்ளது.


 இதனால், மாணவர்களுக்கு கற்றல் குறித்த பொறுப்பு குறைந்து வருகிறது. 'எப்படியும் பாஸ் செய்துவிடுவார்கள்! பின் ஏன் படிக்க வேண்டும்' என்ற அலட்சிய போக்கு அதிகரித்துவருகிறது. 


அதைதவிர்க்க, தேர்வுக்கு வராதவர்களுக்கு, சிறப்பு தேர்வு ஒன்றை நடத்தி, பின் தேர்ச்சி வழங்கினால் கூட, அர்த்தமானதாக இருக்கும். அதை கல்வித்துறை அலுவலர்கள் கவனத்தில் கொண்டு, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, தேர்வுக்கு வராதவர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement