மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பல நல்ல திட்டங்களைத் தீட்டி அவற்றைச் செயல்படுத்தியது அதிமுக அரசு தான் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறினார். வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த 17 அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, அரக்கோணத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:
ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத் தரம் உயர, பொருளாதாரம் வளர்ச்சி அடைய வேண்டும். குடும்பப் பொருளாதாரம் உயர்வதற்கு உறுதுணையாக இருப்பது கல்வி.
பள்ளி மாணவர்கள் இடையூறின்றி கல்வி கற்க பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது. திமுக ஆட்சியில் ஒரு இணை சீருடை வழங்கப்பட்டதை, 4 இணை சீருடையாக வழங்கியது, நோட்டுப் புத்தகம், மடிக்கணினி, மதிய உணவு என கல்வி கற்கும் மாணவர்களுக்குத் தேவையான அனைத்தையும் வழங்கி வருகிறோம்.
புத்தகச் சுமையை குறைத்து முப்பருவ முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. கல்வித் தரம் உயர்வு, ஆசிரியர் நியமனங்களால், பள்ளிக் கல்வியில் தமிழகம் சிறந்த மாநிலமாக விளங்குகிறது.
ஆனால், திமுக தேர்தல் அறிக்கையில் மாணவர் நலன் காக்கும் திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை. அதிமுக ஆட்சியில் பொறியியல் கல்லூரிகள் உள்பட 56 புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டன.
கடந்த ஆண்டு 2 லட்சத்துக்கும் மேற்பட்ட முதல் தலைமுறை மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்தாமல் படித்து வருகின்றனர். சுயநிதிக் கல்லூரிகளில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதன் மூலமாக மாணவர்கள் சேர்க்கை விகிதத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்குகிறது.
இந்தத் திட்டங்கள் எதையும் செயல்படுத்தப் போவதாக திமுக தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்படவில்லை. திமுக தற்போது மேல்நிலை, கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமே மடிக்கணினி வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
மாணவர்களின் வளர்ச்சிக்கான திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என உறுதி அளித்தது அதிமுக தான். குழந்தைகளின் கல்விக்கு வேட்டு வைக்கும் திமுகவை மக்கள் விரட்டியடிக்க வேண்டும்.
பொருளாதாரம் சிறக்க உடல்நலம் சிறப்பாக இருப்பது அவசியம். அதிமுகவின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ஒரு குடும்பம் 4 ஆண்டுகளில் ரூ. 4 லட்சத்துக்கு மருத்துவ சிகிச்சை பெற முடியும். இதனை மாற்றி, பழைய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் கொண்டு வரப்படும் என்கிறது திமுக தேர்தல் அறிக்கை.
அவர்கள் ஆட்சியில் இருந்தபோது, நடைமுறையில் இருந்த திட்டத்தில் 4 ஆண்டுகளுக்கு ரூ. ஒரு லட்சத்துக்கு மட்டுமே சிகிச்சை பெற முடியும். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடரும்.
திமுக, காங்கிரஸ் கட்சிகள் ஊழல் ஆட்சியை மத்தியிலும், மாநிலத்திலும் நடத்தி வந்தன. முந்தைய திமுக ஆட்சியில் கிரானைட் ஊழல், நிலக்கரி இறக்குமதி ஊழல், வேலைவாய்ப்பு, பணியிட மாறுதலில் ஊழல் உள்ளிட்டவை அரங்கேறின. ரூ. 1.76 லட்சம் கோடி 2ஜி ஊழலில் திளைத்தது திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் தான்.
தமிழகத்தில் மீண்டும் ஆட்சி மலர்ந்தால் பூரண மதுவிலக்கு என்னும் லட்சியத்தை அடைவோம். அதிமுக தேர்தல் அறிக்கையில் இலவச மின்சாரம், விவசாயக் கடன் தள்ளுபடி உள்பட ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்து சமய அறநிலையத் துறையின் நேரடி ஆளுகையின் கீழ் வராத கோயில்களில் 20 ஆண்டுகள் பணிபுரிந்து, 60 வயது நிறைவடைந்த கிராம கோயில் பூசாரிகளுக்கான ஓய்வூதியத்தை ரூ. 750-லிருந்து ரூ. 1,000-ஆக உயர்த்தியது அதிமுக அரசு தான். அவர்களது ஊதியக் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும்.
கடந்த 2005-இல் கொண்டு வரப்பட்ட புதுவாழ்வுத் திட்டம் ஒரு சில மாதங்களில் நிறைவடையவுள்ளது. இரண்டாம் புதுவாழ்வுத் திட்டம் ரூ. 900 கோடியில் உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும். புதுவாழ்வுத் திட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் 2-ஆவது திட்டத்திலும் பணியாற்றுவார்கள்.
அதிமுக தேர்தல் அறிக்கையில் ஏராளமான இலவசங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது உண்மை தான். ஏழைகளின் பக்கம் எப்போதும் உள்ள அதிமுக, அவர்களை வாழ்வில் கைதூக்கி விடும் திட்டங்களை தேர்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்துள்ளது.
தமிழகத்தில் தொலைக்காட்சிப் பெட்டிகளை கொடுத்து கேபிள் இணைப்பு மூலம் திமுக பல ஆயிரம் கோடி கொள்ளை அடித்தது. அந்த எண்ணம் எங்களுக்கு இல்லை.
என்னை தனிப்பட்ட முறையில் குற்றம்சாட்டி வந்த திமுக உள்ளிட்ட கட்சிகள், தற்போது அதிமுகவால் தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற முடியாது என்று பேசி வருகின்றனர். திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்றால் மட்டுமே, நான் வாக்குறுதி அளிப்பேன்.
தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட அனைத்தையும் நிறைவேற்றுவோம். இதை எதிர்ப்பவர்கள் மக்கள் மீது அன்பு இல்லாதவர்கள்.
அதிமுக தேர்தல் அறிக்கையை தடை செய்ய வேண்டும் என்று கோரி நீதிமன்றத்துக்கு திமுக சென்றுள்ளது. இவர்கள் தான் மக்களின் எதிரிகள். இவர்களை வாக்காளர்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். கடந்த தேர்தலின்போது அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளோம். சொன்னதைச் செய்தோம், சொல்லாத பலவற்றையும் செய்துள்ளோம்.
அதிமுக ஆட்சி மக்களுக்கு வசந்தத்தை கொடுத்துள்ளது. இதுதொடர, தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ, தொழில்கள் வளர்ச்சி அடைந்திட, தொடர்ந்து முன்னேற்ற பாதையில் செல்ல அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார். திமுகவினர் பொய் பிரசாரம்
அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை தாங்கள் செய்ததாக திமுகவினர் பொய்ப் பிரசாரம் செய்வதாக முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார். அரக்கோணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதிலிருந்து:
அனைத்து மக்களுக்கும் தேவையான குடிநீர் வழங்கும் நோக்கில், வேலூர் கூட்டுக் குடிநீர்த் திட்டம் ரூ. 1,300 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை வழியாக குழாய் அமைக்க மத்திய அரசின் அனுமதி கிடைக்கத் தாமதமானதால், சில பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை. உரிய அனுமதி பெற்று இப்பகுதிகளில் திட்டம் செயல்படுத்தப்படும்.
கடந்த 2011 ஜனவரி இறுதியில் இத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டிய அப்போதைய துணை முதல்வர் ஸ்டாலின், இதை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வெறுமனே அடிக்கல் நாட்டுவதில் மட்டும் குறியாக இருந்துவிட்டு, அத்திட்டத்தை தாங்கள் செய்ததாக திமுகவினர் பொய்ப் பிரசாரம் செய்கின்றனர் என்றார் ஜெயலலிதா.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை