Ad Code

Responsive Advertisement

சுட்டெரிக்கும் கோடை வெப்பத்தால் பள்ளிகள் திறக்கப்படுவது தள்ளிப்போகுமா?- அக்னி வெயில் முடிந்ததும் அரசு பரிசீலிக்கும் என தகவல்

சுட்டெரிக்கும் கோடை வெப்பத்தால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா? என்று மாணவர்களும், பெற்றோர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ள நிலையில், அக்னி வெயில் முடிந்ததும் இதுகுறித்து பரிசீலிக்க இருப்பதாக அரசு வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.


தமிழகத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளி களில் ஆண்டு இறுதி தேர்வுகள் முடிவடைந்து ஏப்ரல் 4-வது வாரத்தில் இருந்தும், அதேபோல், தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மே 1-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. ஜூன் 1-ம் தேதி நெருங்கி வரும் நிலையில், கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பள்ளிகள் திறப்பு நாள் தள்ளிப்போகுமா என்ற எதிர் பார்ப்பு மாணவர்கள் மற்றும் பெற் றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது.



பள்ளிகள் திறக்கும் நாள் முன்கூட் டியே அறிவிக்கப்பட்டாலும்கூட வெயி லின் தாக்கம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் பள்ளிகள் திறப்பு நாள் தள்ளிவைக்கப்படுவது வழக்கம். சுட்டெரிக்கும் கோடை வெப்பத்தால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்படும். கூடுதல் விடுமுறை நாட்கள் பின்னர் சனிக்கிழமைகளில் வகுப்பு வைத்து சரிசெய்யப்படும்.



தமிழகத்தில் கடந்த 2012-13-ம் கல்வி ஆண்டில்கூட பள்ளி திறக்கும் நாள் ஜூன் 10-ம் தேதிக்கு தள்ளிவைக் கப்பட்டது. புதுச்சேரி அரசுகூட கடந்த ஆண்டு கடுமையான கோடை வெப் பம் காரணமாக பள்ளி திறக்கும் தேதியை ஜூன் 2-லிருந்து 12-ம் தேதிக்கு தள்ளிவைத்தது குறிப்பிடத்தக்கது.



கடந்த மே 4-ம் தேதி தொடங்கிய அக்னி வெயில் மக்களை வாட்டி யெடுத்து வருகிறது. அது இன்றுடன் முடிவடைகிறது என்றாலும்கூட சென்னை, வேலூர், மதுரை, திருச்சி உட்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருக்கிறது. வெப்பம் சுட்டெரிப்பதால் பகலில் அனல் காற்று வீசுகிறது.



இந்நிலையில், கோடை வெப்பம் கடுமையாக இருப்பதால், பள்ளிகள் திறக்கும் நாள் தள்ளிப்போகுமா என்று மாணவர்களும் பெற்றோர்களும் எதிர்பார்க்கிறார்கள். வெப்பத்தின் தாக்கத்தை கருத்தில்கொண்டு பள்ளி கள் திறப்பு தேதியை தள்ளிவைக்க வேண்டும் என ஆசிரியர்களும் அர சுக்கு கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். கோடை வெப்பத் தின் தாக்கம் கடுமையாக இருப் பதால் கோடை விடு முறையை மேலும் 10 நாட் களுக்கு நீட்டிக்க வேண் டும் என்று தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச் சங்க தலைவர் எஸ்.ஏ. ராஜ்குமார் பள்ளிக் கல்வித் துறைக்கு வேண்டு கோள் விடுத்துள்ளார்.



இதேபோல், தமிழ்நாடு ஆசிரி யர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டா) ஒருங்கிணைப்பாளர் பி.கே.இளமாறன், தமிழகத்தில் சுட் டெரிக்கும் வெப்பத்தின் தாக்கத்தால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் உள்ளது. வெப்பத்தின் தாக்கம் தொடரும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் வெயிலின் கொடுமைக்கு ஆளாகி பல்வேறு நோய்களால் பாதிக்கப்படும் ஆபத்து இருக்கிறது. எனவே, வெயிலின் தாக்கம் குறையும் வரை பள்ளி திறப்பு தேதியை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.



சுட்டெரிக்கும் வெப்பம் காரண மாக பள்ளி திறப்பு தேதி தள்ளிப்போக வாய்ப்பிருக்கிறதா என்று பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்ப னிடம் கேட்டபோது, ‘‘இது குறித்து அரசுதான் முடிவெடுக்கும்” என்றார்.
இதற்கிடையே, பள்ளி திறக்கும் முதல் நாள் அன்று அனைத்து மாண வர்களுக்கும் பாடப்புத்தகங்கள், நோட்கள், சீருடைகள் வழங்குவதற் காக அவற்றை பள்ளிகளுக்கு அனுப் பும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அக்னி வெயில் இன்றுடன் முடிவடைய இருப்பதால் 2 நாட் கள் வெப்பத்தின் தாக்கத்தை பார்த்து விட்டு அதன்பிறகு முடிவு செய்யலாம் என்ற திட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை இருப்பதாக தெரிகிறது.



கடந்த ஆண்டும் ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறி விக்கப்பட்டிருந்தது. வெயிலின் தாக் கம் அதிகமாக இருந்ததால் பள்ளி திறப்பு தேதியை தள்ளி வைக்க வேண் டும் என்ற கோரிக்கை எழுந்தது.ஆனால், ஏற்கெனவே அறிவிக்கப் பட்டபடி ஜூன்1-ம் தேதி பள்ளிகள் திறக் கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.



மாணவர்களுக்கு மருத்துவ ஆலோசனை
வெப்பத்தின் தாக்கத்தை தணிப்பது தொடர்பாக சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனை பேராசிரியர் டாக்டர் சீனிவாசராஜ் கூறும்போது, “அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகுதான் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அதனால் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்துவிடும். வெயிலால் பள்ளிக்கு செல்லும் மாணவர்களின் உடல்நிலை பாதிக்கப்படாது. ஆனால் சோர்வு அடைவார்கள். பெற்றோரும், ஆசிரியர்களும் மாணவர்களை அடிக்கடி தண்ணீர் குடிக்க சொல்ல வேண்டும். பழங்களை சாப்பிடச் சொல்ல வேண்டும். வெயில் குறையும் வரை பள்ளிகளில் மாணவர்களுக்கு விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி வகுப்புகளை நடத்தக்கூடாது. இதனை கடைபிடித்தால் மாணவர்களுக்கு உடலில் எந்த பிரச்சினையும் வராது. அவர்கள் உற்சாகமாக இருப்பார்கள்” என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement