Ad Code

Responsive Advertisement

ஆங்கில கல்வியில் அசத்தும் அரசு பள்ளி!

ராசிபுரம் அருகே, தமிழ் மற்றும் ஆங்கில கல்வியில் தனியார் பள்ளிக்கு இணையாக அசத்தும் கிராமப்புற பள்ளி, தற்போது இட நெருக்கடியால் அவதிப்பட்டு வருகிறது.

ராசிபுரம் அடுத்த, குட்டலாடம்பட்டி பஞ்சாயத்து, மலையம்பாளையம் கிராம சுற்றுப்பகுதியில், 300 குடும்பங்கள் வசிக்கின்றனர். இக்கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு துவக்கப்பள்ளி, தனியார் பள்ளிகளுக்கு நிகராக வாகன வசதி, இசை, நடனம், கராத்தே, யோகா, அடையாள அட்டை என செயல்பட்டு வருவதால், இப்பள்ளியில் தங்களது குழந்தைகளை சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டிவருகின்றனர்.



இதுகுறித்து, இப்பள்ளியில், 14 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஆசிரியர் செந்தில் கூறியதாவது:
இக்கிராமத்தில் கூலித்தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். அதனால், குடும்ப வறுமை காரணமாக வயல் வேலைக்கு செல்வது, கால்நடை மேய்க்க செல்வது, செங்கல் சூளைகளுக்கு செல்வது போன்றவை மாணவர்களிடம் இருந்தது. இந்நிலை குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, அவர்கள் வேலைக்கு செல்வது படிப்படியாக குறைக்கப்பட்டது.



இப்பள்ளி, 2000ம் ஆண்டுக்கு பின், ஈராசிரியர் பள்ளியாக தரம் உயர்த்தி மாணவர் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், ஒன்றாம் வகுப்பு முதல், மூன்றாம் வகுப்பு வரை ஆங்கில வழிக்கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. தற்போது, 114 மாணவர், 106 மாணவியர் உட்பட, 220 பேர் படிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.



தமிழக துவக்கக்கல்வி துறையின் சிறந்த பள்ளிக்கான விருதும், நாமக்கல் மாவட்டத்தின் முன் மாதிரி பள்ளிக்கான விருதும் பெற்றுள்ள இப்பள்ளி, தற்போது இட நெருக்கடியால் திணறி வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை, எட்டு பிரிவுகளாக நடக்கும் பள்ளி மரத்தடியிலும், அருகில் உள்ள கோவிலிலும் நடந்து வருவது வேதனை அளிப்பதாக உள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement