Ad Code

Responsive Advertisement

இணையதளத்தில் பழுது: மின் நுகர்வோர் அவதி

தமிழ்நாடு மின் வாரிய இணையதளத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, மின் நுகர்வோர், மின் கட்டணம் செலுத்த முடியாமல், பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இது தொடர்பாக, மின் வாரியம் எந்த அறிவிப்பும் வெளியிடாதது, நுகர்வோரிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.மின் கட்டணம் செலுத்த, மின் வாரிய அலுவலகங்களில், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதை தவிர்க்க, மின் வாரிய இணையதளம் மூலம், மின் கட்டணம் செலுத்தும் வசதி, 2007ல் அறிமுகமானது.



இது மின் நுகர்வோரின் சிரமத்தை குறைத்தது. கடந்த, இரண்டு நாட்களாக, இந்த இணையதளத்தின் செயல்பாடு, மெதுவாக இருந்தது. கோடை வெயிலில் இருந்து தப்பிக்க, சுற்றுலா சென்றுள்ளவர்கள், இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்த முயற்சித்து, தோல்வியை தழுவினர். வெயிலில் மின் வாரிய அலுவலகத்திற்கு சென்று வரிசையில் நிற்க சிரமப்பட்டவர்கள், இணையதளம் செயல்படாததால் சிரமப்பட்டனர்.



இது தொடர்பாக மின் வாரியம் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.இந்த நிலையில், நேற்று இணையதள சேவை முற்றிலும் முடங்கியது. நேற்று இரவு மின் வாரிய இணையதளத்தில், 'இணையதளம் பழுதுடைந்துள்ளது. விரைவில் சரி செய்வோம்' என, தெரிவித்திருந்தனர். இரண்டு நாட்களாக, மின் வாரிய அதிகாரிகள் பாராமுகமாக இருந்தது மின் நுகர்வோரிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. நுகர்வோர் நலன் கருதி, இணையதள பழுதை சரி செய்து, மின் கட்டணம் செலுத்த, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement