Ad Code

Responsive Advertisement

இபிஎஃப் தொகை மீதான புதிய வரியை திரும்பப் பெற மத்திய அரசு பரிசீலனை

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் (இபிஎஃப்) இருந்து 60 சதவீத தொகை திரும்பப் பெறப்படும்போது, அதன்மீது விதிக்கப்படவுள்ள வரியை திரும்பப் பெறுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி திங்கள்கிழமை தாக்கல் செய்த 2016-17ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், தொழிலாளர்கள் தாங்கள் பணியில் இருந்து ஓய்வு பெறும்சமயத்தில் இபிஎஃப்-பில் இருந்து 60 சதவீத தொகையை திரும்பப் பெறும்போது வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் புதிய வரி, வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல்அமலுக்கு வரும் என்றும் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. 


மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு, ஆர்எஸ்எஸ் ஆதரவு பிஎம்எஸ் தொழிற்சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்களும், பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்தன.தொழிலாளர் சமுதாயத்தின் மீதான தாக்குதல் இது என்றும்,இரட்டை வரி விதிப்பு என்றும் அவை குற்றம்சாட்டியுள்ளன.



இதையடுத்து, இபிஎஃப் தொகை மீது விதிக்கப்பட இருக்கும் வரியை திரும்பப் பெறுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று மத்திய அரசு செவ்வாய்க்கிழமை உறுதியளித்துள்ளது. இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வரியானது, தனியார் நிறுவனங்களில் அதிக வருமானத்துடன் பணியாற்றிவிட்டு, ஓய்வு பெறுவோரை கவனத்தில் கொண்டே வெளியிடப்பட்டுள்ளது.

இபிஎஃப் திட்டத்தின் கீழ் தற்போது 3 கோடியே 70 லட்சம் பேர் உள்ளனர். இதில் 70 லட்சம் பேர் தனியார் நிறுவனங்களில் அதிக வருமானத்துடன் பணியாற்றுபவர்கள் ஆவர். அவர்கள் தாங்கள் ஓய்வுபெறும்போது, இபிஎஃப் திட்டத்தில் இருந்து எந்தக் கட்டணமும் செலுத்தாமல் பணத்தை திரும்பப் பெறுகின்றனர். அதன் மீதே வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள் தொடர்பாக மத்திய நிதியமைச்சகத்துக்கு பல்வேறு ஆலோசனைகள் வந்துள்ளன. அதில், இபிஎஃப் தொகை மீது வரி விதிக்கப்படுவதற்கு எந்த அளவையும் நிர்ணயிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆலோசனைகளை பரிசீலித்து அரசு இறுதி முடிவெடுக்கும் என்று அந்த அறிவிப்பில் மத்திய நிதியமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.



வருவாய்த்துறை செயலர் விளக்கம்: 
இதனிடையே, தில்லியில்மத்திய வருவாய்த்துறை செயலர் ஹஷ்முக் ஆதியா பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், இபிஎஃப் தொகை மீது எந்த வரியும் விதிக்கப்பட மாட்டாது என்று விளக்கம் அளித்துள்ளார். இபிஎஃப் தொகைக்கு அளிக்கப்படும் வட்டி அளவில் 60 சதவீதத்துக்கு மட்டுமே வரி விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.அதேசமயம், மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் வட்டி மீது மட்டுமே வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்படவில்லை.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement