Ad Code

Responsive Advertisement

தனியார் பள்ளிகளில் மர்மமாகும் 'அட்மிஷன்' விண்ணப்பம் அளித்த பெற்றோர் ஏமாற்றம்

விதிகளை மீறி, முன்கூட்டியே தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முடிந்து விட்டது. விண்ணப்பம் கொடுத்தவர்கள், பள்ளிக்குள் நுழைய முடியாமல் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர். தமிழகத்தில், அரசு பள்ளிகளை விட, சில குறிப்பிட்ட அரசுஉதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகள், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் தான், பிள்ளைகளை சேர்க்க, பெற்றோர் விரும்புகின்றனர்.

இந்த பள்ளிகளில், கல்வி கட்டணம், சிறப்பு கட்டணம் மற்றும் நன்கொடை என, பல ஆயிரம் ரூபாய்கட்டணம் வசூலித்தாலும், பெற்றோர் முட்டி மோதுகின்றனர். ஆனால், இந்த பள்ளிகளில், 'அட்மிஷன்' நடைமுறை புரியாத புதிராகவே உள்ளது.கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஏப்ரலில் விண்ணப்பம் கொடுத்து, மே மாதம், இரண்டாம் வாரம் முதல், மாணவர்களை பள்ளியில் சேர்க்க வேண்டும். ஆனால், சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி, ஈரோடு, திருப்பூர், திருச்சி போன்ற பெருநகரங்களில், கிறிஸ்துமஸ் விடுமுறைமுடிந்ததும், விண்ணப்பம் கொடுத்து, மாணவர் சேர்க்கையை மார்ச்சுக்குள் முடித்து விடுகின்றனர். 


இந்த நடைமுறை பள்ளிக்கு பள்ளி, நகரத்துக்கு நகரம், மாவட்டத்துக்கு மாவட்டம் மாறுபடுகிறது. எந்த பள்ளியில், எப்போது விண்ணப்பம் கொடுக்கின்றனர்; எப்போது, மாணவர் சேர்க்கை நடத்துகின்றனர் என்பது புரியாத புதிராக உள்ளது.இந்த நடைமுறையையும் பெற்றோர் பின் தொடர்ந்து, விண்ணப்பம் வாங்கி, பள்ளிகளில் கொடுத்து விடுகின்றனர். ஆனால், 'அட்மிஷன்' கிடைத்ததா என்றால், அது தான் இல்லை. விண்ணப்பம் கொடுத்த பலரும், தினமும் பள்ளிகள் முன் காத்து கிடக்கின்றனர். ஆனால், அவர்களை தனியார் பள்ளிகள், உள்ளே அனுமதிக்காமல், காவலர்கள் மூலம் பதில் அளிக்கின்றனர். 


பெரும்பாலான பெற்றோருக்கு, 'அட்மிஷனுக்கு தேர்வானால், வீட்டுக்கு கடிதம் வரும்' என்ற, ஒரே பதிலையே திரும்ப, திரும்ப சொல்லி அனுப்புகின்றனர். இதனால்,பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகளிடம், 'சீட்' கேட்டு, பலர் தஞ்சம் புகுந்துள்ளனர். கல்வி அதிகாரிகளிடம் சிபாரிசு கடிதம் பெற்று ஏராளமானோர் செல்கின்றனர். ஆனால், அவர்களுக்கும், பள்ளிகள் அட்மிஷன் வழங்குவதில்லை.



இதுகுறித்து, அதிகாரிகளிடம் கேட்ட போது, 'தனியார் பள்ளிகள் ஏஜன்ட்களை வைத்து பணம் வசூலித்து, 'அட்மிஷன்' வழங்குவதாக, தகவல் வருகிறது. ஆனால், அதற்கு பெற்றோர் தரப்பில் இருந்து புகார் இல்லை. எழுத்துப்பூர்வ புகார் வந்தால், அதன் மீது நடவடிக்கை எடுப்போம்' என்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement