Ad Code

Responsive Advertisement

பிளஸ்2 தேர்வு இன்று துவக்கம் பயம், பதட்டம் வேண்டாம்! வெற்றி நிச்சயம்!

பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று துவங்குகிறது. கோவை வருவாய் மாவட்டத்தில், 336 பள்ளிகள் வாயிலாக, 35 ஆயிரத்து 867 பேர் எழுதுகின்றனர். 'இறுதி சமயத்தில், கடினமான, தெரியாத கேள்விகளை புதிதாக படிப்பதை தவிர்ப்பது, பதட்டத்தை தவிர்க்கும்' என, மாணவர்களுக்குஉளவியல் வல்லுனர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழகம் முழுவதும், பிளஸ் 2 தேர்வுகள் இன்று துவங்கவுள்ளன. முதல்நாளில் தமிழ் முதல் தாள் தேர்வை மாணவர்கள் எழுதவுள்ளனர். கோவையில், 94 மையங்களில், 35ஆயிரத்து 867 மாணவ, மாணவிகள் தேர்வை எழுதுகின்றனர். தேர்வுக்கான அனைத்து பணிகளும் முடிந்துள்ள நிலையில், நேற்று இறுதி கட்ட ஆய்வு கூட்டம் அந்தந்த மையங்களில் நடந்தது.நமது கல்விமுறையில், பிளஸ் 2 தேர்வும் அதில் நாம் பெறும் மதிப்பெண்களும் , நம் உயர்கல்வி, வேலைவாய்ப்பு, எதிர்காலத்தை தீர்மானிக்கும் முதல் மற்றும் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. 


இதனால், மாணவர்களின் மத்தியில் பதட்டம் இருப்பது இயல்பு. ஆனால், பதட்டம் என்பது அதிகரிக்கும்போது நம் சிந்தனை திறன் செயல் இழக்கநேரிடும் என்பதை மாணவர்கள் அறிந்துகொள்வது அவசியம்.மாணவர்கள் இறுதிநேரத்தில் புதிதான கேள்விகளை படிப்பதும், கடினமாக கருதும் கேள்விகளை படிப்பதையும் தவிர்க்கவேண்டும். அவ்வாறு, புதிதாக பாடங்களை படிப்பதாலும், கடினமான கேள்விகளை படிக்க முயற்சி செய்வதாலும் ஒரு வித, பயம், பதட்டம் அதிகரித்து மறதி ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.


கோவை மண்டல உளவியல் ஆலோசனை நிபுணர் அருள்வடிவு கூறியதாவது:


பதட்டம், பயம் மாணவர்களின் கவனத்தை சிதறடித்து மறதியைஏற்படுத்திவிடும். தெரிந்த கேள்வியை எழுதவும் சிரமம் ஏற்படும். 


எனவே, இறுதி நேரத்தில் படிப்பதை தவிர்த்துவிடுங்கள். தேர்வு மையத்தில் சக மாணவர்களுடன் இது முக்கியமான கேள்வி, இந்த கேள்வி கட்டாயம் வரும் போன்ற தேவையற்ற விவாதங்களை தவிர்த்து,அமைதியாக இருப்பது அவசியம். தேர்வு துவங்க சற்று முன்பு, புத்தகங்களை எடுத்து வைத்து விட்டு, படித்த கேள்விகளை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.தேர்வுக்கு செல்லும்போது, ஹால்டிக்கெட், பேனா, பென்சில் போன்ற முக்கியமான பொருட்களை எடுத்துவைத்துவிட்டோமா என்று ஒரு முறைக்கு இரண்டு முறை பார்த்து விட்டு கிளம்புங்கள். 



மாணவர்களின் மனநிலையை புரிந்து, பெற்றோர் ஆலோசனை கூறவேண்டும். காலை நேர உணவை கட்டாயம் புறக்கணிக்க கூடாது. தண்ணீர் நன்றாக குடிப்பது அவசியம்.கேள்வித்தாள்களை ஒரு முறைக்கு இரண்டு முறை நன்றாக படித்து புரிந்து பதில்களை எழுதவேண்டும். தெரியாத கேள்விகள் இருப்பின், பதட்டம் அடையாமல் அடுத்தடுத்த கேள்விகளை எதிர்கொள்ளுங்கள். தெரியாத அல்லது குழப்பும் கேள்விகளை இறுதியாக எதிர்கொள்வது பதட்டத்தை தவிர்க்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement