Ad Code

Responsive Advertisement

14 ஆயிரம் கோடி! 'மட்டம்' போடும் ஆசிரியர்களால் அரசுக்கு இழப்பு... 25 சதவீதம் பேரின் மோசடி தோலுரிப்பு

கல்வித் துறையில் உள்ள பல்வேறு ஊழல்களால், கல்வித் தரம் பாதிக்கப்படுவதுடன், மக்களின் வரிப்பணமும் வீணடிக்கப்படுகிறது. இந்தியாவில், 25 சதவீத ஆசிரியர்கள் வகுப்புகள் எடுக்காமல், 'மட்டம்' போடுவதால், ஆண்டுக்கு, 14 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.



உலக அளவில் பல்வேறு துறைகளில் உள்ள ஊழல்கள் குறித்த ஆண்டு அறிக்கையை, ஜெர்மனியை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'டிரான்பரன்சி இன்டர்நேஷனல்' என்ற அரசு சாரா அமைப்பு வெளியிட்டு வருகிறது. கல்வித் துறையில் உள்ள ஊழல்கள் குறித்த, 448 பக்கங்கள் அடங்கிய, மிக விரிவான அறிக்கையை, அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.

ஆரம்ப கல்வி:
கல்வித் துறையில் ஊழல்களுக்கான வாய்ப்புகள் குறித்தும், நடந்து வரும் மோசடிகள் குறித்தும் இந்த அறிக்கை தோலுரித்து காட்டியுள்ளது.குறிப்பாக, ஆரம்ப கல்வித் துறையில் உள்ள ஊழல்கள், முறைகேடுகள், அனைவருக்கும் கல்வி உரிமையை நசுக்குவதாக உள்ளதாக அறிக்கை கூறுகிறது.அதில், மிக முக்கியமான பிரச்னையாக இந்த அறிக்கை கூறுவது, ஆசிரியர்களின் விடுமுறையைத் தான். ஆண்டு விடுமுறைகளைத் தவிர, பள்ளிகளுக்கு செல்லாமல் இருப்பது, பள்ளிக்கு மட்டம் போட்டு, தன் சொந்த வேலையைச் செய்வது ஆகிய வற்றையும் குறிப்பிடுகிறது. மேலும், அரசு திட்டப் பணிகளுக்குசெல்வதாகக் கூறி, சொந்த வேலைக்கு செல்வதையும் இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இவ்வாறு ஆசிரியர்கள் அதிகளவு விடுமுறை எடுக்கும் நாடுகளில், இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இதனால், இந்தியாவில் ஆண்டுக்கு, 14 ஆயிரம் கோடி ரூபாய் வீணடிக்கப்படுவதாகவும் அறிக்கை கூறுகிறது.

சொந்த தொழிலுக்கு...:
அறிக்கையில், மேலும் கூறப்பட்டுள்ளதாவது: உலக அளவில், ஆசிரியர்கள் அதிக அளவில் விடுமுறை எடுப்பது அல்லது பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதில், கென்யா, 30 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. உகாண்டாவில், 27 சதவீதம் பேரும்; இந்தியாவில், 25 சதவீதம் பேரும் விடுமுறையில் இருக்கின்றனர்.இதில், தங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட விடுமுறையில் இருப்பவர்கள், 10 சதவீதத்தினர் மட்டுமே. மக்கள் கணக்கெடுப்பு, போலியோ சொட்டு மருந்துகொடுப்பது உள்ளிட்ட அரசு பணிகளுக்காக செல்வது என, 7 சதவீதம் பேர் பள்ளிகளுக்கு வருவதில்லை. மீதமுள்ளவர்கள்,தங்களுடைய சொந்த தொழில் அல்லது வேறு வேலையைச் செய்கின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கண்காணிப்பு தேவை:

ஆசிரியர்கள் அதிக அளவுக்கு விடுமுறை எடுப்பது அல்லது பள்ளிக்கு வராமல் இருப்பது, பாடம் எடுக்காமல் இருப்பதற்கு, போதிய கண்காணிப்பு இல்லாததே காரணம். ஆசிரியர்களை விட, அவர்களை கண்காணிக்கும் தலைமை ஆசிரியர்கள், கல்வித் துறை அதிகாரிகளே அதிகமாக, 'காணாமல்' போய்விடுகின்றனர் என, இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
வழி காட்டுகிறது ராஜஸ்தான்:
இந்த பிரச்னைக்கு தீர்வு காண, ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆசிரியர்களின் வருகைப் பதிவேடு கணினி மயமாக்கப்பட்டது. வகுப்புகள், ரகசிய கேமராக்களால் கண்காணிக்கப்பட்டன. விடுமுறையைத் தவிர, மாதத்தில் பள்ளிக்கு வரும் நாட்களுக்கு மட்டுமே சம்பளம் என்ற திட்டமும் கொண்டு வரப்பட்டது. அதன்பின், ஆசிரியர்கள் விடுமுறை எடுப்பது, 44 சதவீதம் குறைந்துள்ளது என்றும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement