Ad Code

Responsive Advertisement

காலை உணவில் தான் மூளையின் சக்தி உள்ளது உணவு நிபுணர் ஆலோசனை

தேர்வின் போது பயத்தின் காரணமாகவே மாணவர்கள் பசியை தவிர்த்து விடுகின்றனர். இதனால் மனதளவில் பதட்டமும், உடலளவில் கூடுதல் சோர்வுமாக தவிக்கின்றனர். 'மூளைக்கு தேவையான சக்தி, காலை உணவில் உள்ளது' என்கிறார், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை முதன்மை உணவு நிபுணர் ஜெயந்தியால்.


அவர் கூறியதாவது: மாணவர்கள் தேர்வு நேரங்களில் முறையான உணவு முறையை பின்பற்றாததால் எடை கூடுதல், மந்தநிலை, விரைவில் சோர்வடைதல், மனஉளைச்சல் போன்ற பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர். மலச்சிக்கல் ஏற்படவும் வாய்ப்புள்ளது. முறையான உணவுமுறையை பின்பற்றினால் பயமின்றி தேர்வெழுதலாம்.


காலை உணவு சாப்பிட்டால் சோம்பேறித்தனம் ஏற்படும் என நினைக்கின்றனர். இது தவறு. காலை உணவை நன்றாக உண்ண வேண்டும். தேர்வு நேரங்களில் பசியுடன் இருந்தால் தேர்வில் கவனம் செலுத்த முடியாது. மூளைக்கு தேவையான சக்தியை காலை உணவில் இருந்து தான் பெறுகிறோம். காலை உணவுடன் ஒரு முட்டை, ஒரு டம்ளர் பால் சேர்த்துக் கொள்ளலாம்.



இரவு நேரங்களில் உணவை குறைத்து சாப்பிடலாம். எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவுகள் நல்லது. எண்ணெய், நெய்யில் பொறித்த உணவுகளை இரவில் தவிர்க்க வேண்டும். விட்டமின் அதிகமுள்ள பழங்கள், காய்கறி, கீரைகளை சாப்பிட்டால் சுறுசுறுப்பாக படிக்க முடியும்.


வெளியிடங்களில் மற்றும் ஓட்டல் உணவுகளை தேர்வு காலங்களில் தவிர்ப்பது நல்லது. இதனால் திடீர் உடல் உபாதைகளில் இருந்து விடுபடலாம். பசிக்கும் நேரத்தில் பழஜூஸ், காய்கறி சூப், பழ சாலட், காய்கறி சாலட், மோர், இளநீர், பிஸ்கெட் சாப்பிடும் போது களைப்பில் இருந்து விடுபடலாம்.



இரண்டு அல்லது மூன்று மணிநேர இடைவெளியில் பாதி அல்லது முக்கால் வயிறு சாப்பிடுவது நல்லது. அதிக இனிப்பு பண்டங்கள், கிழங்கு வகைகளை குறைத்துக் கொள்ள வேண்டும். மலச்சிக்கலை தவிர்க்க நார்ச்சத்துள்ள காய்கறி, கீரை, தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும்.



ரத்தசோகை ஏற்படாமல் இருக்க இரும்புச்சத்துள்ள பேரீச்சை, உலர் திராட்சை, தர்பூசணி, சோயாபீன்ஸ், காராமணி, சுண்டைக்காய் அதிகம் சாப்பிட வேண்டும். ஆவியில் வேகவைத்த உணவுகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். காய்ச்சி வடித்த குடிநீரை குடிப்பதால் காய்ச்சல், சளி தொந்தரவு வராமல் பார்த்துக் கொள்ளலாம், என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement