Ad Code

Responsive Advertisement

சார்ஜில் போட்டபடியே பேசியதால் விபரீதம்: செல்போன் வெடித்ததால் சிறுவன் பார்வை இழப்பு

சார்ஜில் போட்டிருந்த செல்போனில் பேசிய போது, அது வெடித்துச் சிதறியதில் சிறுவனுக்கு பார்வை இழப்பு ஏற்பட்டது. முகம் மற்றும் கையிலும் காயம் ஏற்பட்டது.


மதுராந்தகம் அடுத்த செய்யூர் பகுதியை சேர்ந்தவர் எட்டியப்பன் (40). இவரது மனைவி வெண்ணிலா (35). இவர்கள் மகன் தனுஷ் (9). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த மாதம் 29-ம் தேதி வீட்டில் செல்போன் சார்ஜில் போடப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் அழைப்பு வந்ததால், சார்ஜில் இருந்த செல்போனை அப்படியே எடுத்து தனுஷ் பேசியுள்ளான். அப்போது செல்போன் வெடித்து சிதறியது. சத்தம் கேட்டு பெற்றோர் ஓடி வந்து பார்த்தபோது தனுஷின் முகம், வலது கையில் காயம் ஏற்பட்டிருந்தது. இரண்டு கண்களிலும் பலத்த காயம் ஏற்பட்டதால், அவனால் கண்களை திறந்து பார்க்க முடியவில்லை.



இதைத்தொடர்ந்து செங்கல் பட்டு அரசு மருத்துவமனையில் தனுஷ் சேர்க்கப்பட்டான். அங்கு அவனுக்கு முதல் கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தீக்காய சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டான். டாக்டர்கள் தனுஷின் முகம் மற்றும் வலது கையில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை அளித்தனர். இதையடுத்து கண்களில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெற எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு டாக்டர்கள் கூறினர்.



எழும்பூர் கண் மருத்துவமனை டாக்டர்கள் சிறுவனை பரிசோதனை செய்து பார்த்ததில், அவனது வலது கண் கருவிழி முற்றிலும் சேதமடைந்தும், இடது கண்ணின் முழி கிழிந்திருப்பதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து டாக்டர்கள் குழுவினர் அறுவைச் சிகிச்சை மூலம் தானமாக கிடைத்த கருவிழியை வலது கண்ணில் பொருத்தினர். இடது கண்ணில் கிழிந்திருந்த இடத்தில் தையல் போட்டு சரிசெய்தனர்.



இதுதொடர்பாக எழும்பூர் அரசு கண் மருத்துவமனை இயக்குநர் மற்றும் கண்காணிப்பாளர் டாக்டர் வகீதா நசீர் கூறியதாவது:



சார்ஜில் இருந்த செல்போனில் பேசிய போது, அது வெடித்து சிதறியதில் சிறுவனின் முகம், கையில் காயம் ஏற்பட்டது மட்டுமின்றி வலது கண்ணில் கருவிழி முற்றிலும் சேதமடைந்ததால் பார்வையும் பறிபோனது. மாற்று கருவிழி பொருத்தப்பட்டுள்ளது. அந்த கண்ணில் புரையும் உள்ளது. ஒரு மாதத்துக்கு பிறகு புரை அகற்றப்படும். லென்ஸ் பொருத்த திட்டமிட்டுள்ளோம். இடது கண் பாதிப்பும் சரிசெய்யப்பட்டது. இடது கண்ணில் தற்போது 3 மீட்டர் அளவுக்கு பார்வை இருக்கிறது. தொடர்ந்து சிறுவனை கண்காணித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement