Ad Code

Responsive Advertisement

அரசு ஊழியர்களுக்கான குடும்ப நல நிதி ரூ.3 லட்சமாக உயர்வு: முதல்வர் அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த குடும்ப நலநிதி ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று பேரவையில் அறிவித்தார்.தமிழக சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா வாசித்த உரையில், அரசின் முகமாகவும், மனமாகவும் செயல்படுகிறவர்கள் அரசு அலுவலர்கள் தான்.  அரசால் தீட்டப்படும்  செயல் திட்டங்களும், வகுக்கப்படும் நலத் திட்டங்களும் உரிய முறையில் மக்களைச் சென்றடையச் செய்பவர்கள் அரசு அலுவலர்கள்.

ஒரு அரசின் செயல் திறன்  அரசு அலுவலர்களின் செயல்திறனை பொறுத்தே அமையும்.அரசின் அடித்தளமாக, அச்சாணியாக, முதுகெலும்பாக விளங்குபவர்கள் அரசு அலுவலர்கள்.  இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த அரசு அலுவலர்களின் நலனில் எப்போதும் தனி அக்கறை கொண்டு எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.அரசு அலுவலர்கள் பணி தொடர்பாகவும், ஊதியம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பாகவும்  பல்வேறு  கோரிக்கைகள்  விடுத்துள்ளனர்.  


அரசு அலுவலர் சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி  அவர்களின் கோரிக்கைகளை ஆராயும்படி மூத்த அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர், நிதித் துறை செயலாளர் ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.அதன்படி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பல்வேறு அரசு அலுவலர் சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி உள்ளனர்.  அதன் அடிப்படையில் அரசு அலுவலர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.


1) குடும்ப நல நிதி
கடந்த 40 ஆண்டுகளாக அரசு அலுவலர்களுக்கு  குடும்பநல நிதித் திட்டம் என்ற ஒரு திட்டம்  செயல்படுத்தப்பட்டு வருகிறது.   இத்திட்டத்திற்கு அரசு அலுவலர்களிடமிருந்துமாதந்தோறும் அவர்களது சம்பளத்திலிருந்து 30 ரூபாய் பிடித்தம் செய்யப்படுகிறது.  இத்திட்டத்தின்படி, பணிக் காலத்தில் அரசு அலுவலர் இறந்தால், அவரின் வாரிசுதாரருக்கு 1 லட்சத்து  50 ஆயிரம்   ரூபாய், வழங்கப்படுகிறது.  இந்த குடும்ப நல நிதி உதவியை, உயர்த்த வேண்டுமென பல்வேறு சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன. 


இதனை ஏற்று, இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகை 3 லட்சம் ரூபாய் என உயர்த்தப்படும். அரசு அலுவலரின் சம்பளத்திலிருந்து மாதந்தோறும்  60 ரூபாய் இதற்காக பிடித்தம் செய்யப்படும்.  தற்போது, இத்திட்டத்திற்கு அரசு மானியமாக ஆண்டுதோறும் 6 கோடியே 18 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.  குடும்ப நல நிதி உதவித் தொகை உயர்த்தப்படுவதால் ஏற்படும் கூடுதல் செலவான சுமார் 6 கோடி ரூபாயை அரசு வழங்கும் என்று அறிவித்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement