Ad Code

Responsive Advertisement

"பள்ளி செல்லும் குழந்தைகளில் 10 சதவீதம் பேருக்கு கற்றலில் குறைபாடு'

பள்ளி செல்லும் குழந்தைகளில் 10 சதவீதம் பேரிடம் கற்றலில் குறைபாடு காணப்படுகிறது என சென்னை டிஸ்லெக்சியா(கற்றலில் குறைபாடு) சங்கத் தலைவர் டி.சந்திரசேகர் கூறினார்.சென்னை டிஸ்லெக்சியா சங்கம், ரோட்டரி சங்கம் சென்னை- தெற்கு சார்பில் கற்றலில் குறைபாடுடைய குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி ஆயிரம் விளக்கு ஆசான் மெமோரியல் சீனியர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

சென்னை டிஸ்லெக்சியா சங்கத்தலைவர் டி.சந்திரசேகர் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து பேசியதாவது: பள்ளி செல்லும் குழந்தைகளில் 10 சதவீதம் பேரிடம் கற்றலில் குறைபாடு காணப்படுகிறது. இந்தக் குறைபாட்டை அந்தந்த வகுப்பு ஆசிரியர்கள்தான் கண்டறிய வேண்டும். மற்ற குழந்தைகள் போன்று சாதாரணமாகப் படிக்க வைக்க, கூடுதலாக சிறுமுயற்சி மேற்கொள்ள வேண்டும். தற்போது இந்தக் குறைபாடு குறித்து பொதுமக்களிடம் நிறைய விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் உட்பட உலக பிரபலங்கள் பலரும் இந்தக் குறைபாடு உடையவர்கள்தான். இவர்கள் கலை மற்றும் வடிவமைப்பில் ஆர்வமுடையவர்களாக இருக்கின்றனர். 


மற்ற குழந்தைகளுடன் சாதாரண போட்டிகளில் இவர்கள் பங்கேற்க முடிவதில்லை. எனவே இம்மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் சென்னை டிஸ்லெக்சியா சங்கம் ஒருவார நிகழ்ச்சியை நடத்துகிறது.ஓவியம், கோலம், நெருப்பில்லா சமையல், பயனற்ற பொருட்களில் இருந்து கைவினைப் பொருள் தயாரித்தல், இசைமற்றும் நாடகப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படுகிறது. 


அத்துடன்வரும் கல்வியாண்டு முதல் இம்மாணவர்களுக்கு தமிழ் வழிக்கல்விப் பயிற்சிகளை வழங்கும் வகையில் முதற்கட்டமாக, சில பள்ளிகளில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்றார். அதைத்தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் 3 பிரிவாக நடைபெற்ற ஓவியப் போட்டியில் சுமார் 100 மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கம் சென்னை-தெற்கு உறுப்பினர் மக்தூம் முகமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement