Ad Code

Responsive Advertisement

கணினி வழி கற்பித்தலில் கலக்குது கன்னியாகுமரி

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில், கணினி வழி கற்பித்தல் மூலம், கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், அரசு பள்ளிகளை உற்சாகமடைய செய்துள்ளன.



மாணவர்களின் பொதுத்தேர்வு தேர்ச்சி, மாநில, 'ரேங்க்' எடுப்பது போன்றவற்றில், அரசு பள்ளிகள் பின்தங்கி இருப்பது வழக்கம். அதிகாரிகளின் நிர்வாக மேலாண்மையிலும் பல குறைபாடுகள் உள்ளதாக புகார்கள் உள்ளன. இந்த குறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, நவீன தொழில் நுட்பத்தையும், 'டிஜிட்டல் இந்தியா'வின் நோக்கத்தை அடையும் வகையிலும், கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியான, சி.இ.ஓ.,வின் இணையதள மேலாண்மை, தென் மாவட்ட அரசு பள்ளிகளை உற்சாகம் அடைய செய்துள்ளது.



அவரின் இந்த நடவடிக்கை, 'ஓ.பி.,' அடிக்கும் ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் கடிவாளம் போட்டுள்ளது. சி.இ.ஓ., ஜெயக்குமார் மதுரையை சேர்ந்தவர். 2015 ஜூன் முதல் கன்னியாகுமரியில் பணியாற்றி வருகிறார். அதற்கு முன், விருதுநகர் மாவட்ட சி.இ.ஓ.,வாக இருந்த போது, http://www.chiefeducationalofficer.in என்ற இணைய தளத்தை துவங்கினார். அதில், தனி 'பாஸ்வேர்டு' உடன், பள்ளிகளுக்கான சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டன.எந்த பள்ளி அறிக்கையை உடனே பார்த்து, நடவடிக்கையை துவங்கியது; எந்தெந்த பள்ளிகள் அறிக்கையையே பார்க்கவில்லை என்பதை காட்டும், வசதியும் இணையதளத்திலேயே செய்யப்பட்டது. அதனால், 'ஓ.பி.,' அடித்தவர்கள் கண்டறியப்பட்டு, தட்டி கொடுத்து வேலை வாங்கப்பட்டனர்.



பொதுத் தேர்வு தேர்ச்சியில் எப்போதும் முதலிடம் பெறும்விருதுநகர் மாவட்டம், சில ஆண்டுகளாக பின் தங்கியிருந்தது. எனினும், சி.இ.ஓ., ஜெயக்குமாரின் நடவடிக்கையால், கடந்த ஆண்டு தேர்வில், விட்ட இடத்தை பிடித்தது. இதேபோல, கன்னியாகுமரி சென்றதும், சி.இ.ஓ., ஜெயக்குமார், அங்கும் இணைய நிர்வாக திட்டத்தை விரிவுபடுத்தி, ஆசிரியர்கள் மட்டுமின்றி, மாணவர்கள் நலன் சார்ந்த தளமாகவும் மாற்றியுள்ளார். அந்த இணையதளம், விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களால் பயன்படுத்தப்படுகிறது.



இணையதளத்தில் இருப்பது என்ன?
* பிளஸ் 2, 10ம் வகுப்பு பாட புத்தகங்கள்* வல்லுனர் குழுவின் வழிகாட்டி புத்தகம்* முக்கிய வினா தொகுப்பு


* 2012 முதல், கடந்த கல்வி ஆண்டு வரையிலான, பொதுத் தேர்வு வினா தாள்கள்


* பாடங்களின் வீடியோ விளக்கங்கள்* அரசின் கல்வி நலத்திட்டங்கள்* உதவித் தொகை; அதை பெறும் வழிமுறைகள்


* கல்வித்துறை சார்ந்த அரசு தகவல்கள்*கல்வி சார்ந்த இணையதள முகவரிகள்


* கல்வி ஆண்டு காலண்டர்; பள்ளி நாட்கள்


* மாவட்ட மாணவர்களின் தனிப்பட்ட தேர்வு முடிவுகள்* தமிழ் எழுத்து வடிவங்கள்; சாப்ட்வேர் பட்டியல் என, டிஜிட்டல் மேலாண்மையின் அனைத்து அம்சங்கள் 


* பருவ தேர்வுகளில் முதலிடம் பெறும் மாணவர்கள், பாட ஆசிரியர்களின் பட்டியல் 


* கல்வி சார்ந்த குறைகளை தெரிவிக்க, இணையதளத்தில் தனி வசதியும் உள்ளது.


'சாப்ட்வேர்' இன்ஜினியர் அல்ல:
இந்த முயற்சியை மேற்கொண்ட ஜெயக்குமார், சாப்ட்வேர் இன்ஜி., படிப்பு முடித்தவர் அல்ல. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அரசு பள்ளியில், தமிழ் பாட முதுகலை ஆசிரியராக இருந்தவர். டி.என்.பி.எஸ்.சி.,யின் மாவட்ட கல்வி அதிகாரிக்கான, டி.இ.ஓ., தேர்வை எழுதி, டி.இ.ஓ.,பதவிக்கு வந்தார். 


மேலுாரில் பயிற்சி டி.இ.ஓ., - திருச்சி மாவட்ட மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் - முசிறி கல்வி மாவட்ட டி.இ.ஓ., - திருச்சியில் அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் சி.இ.ஓ., - விருதுநகர் சி.இ.ஓ., என பணியாற்றி, தற்போது கன்னியாகுமரி சி.இ.ஓ.,வாக உள்ளார். சமீபத்தில், தமிழக முதல்வர் வெளியிட்ட கற்றல் கையேடு புத்தகத்தை, இந்த இணைய தளத்தில் முதலில் வெளியிட்டனர். இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானதும், பள்ளிக்கல்வித் துறையின் மாநில இணையதளத்திலும் பதிவேற்றம் செய்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement