'கட்டண பாக்கிக்காக மாணவர்களின் சான்றிதழை பிடித்து வைத்துக் கொள்ளும், கல்லுாரி மற்றும் பல்கலை கழகங்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, பல்கலை கழக மானிய குழுவான, யு.ஜி.சி., எச்சரித்துள்ளது.
தனியார் சுயநிதி கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், கட்டணம் வசூலிப்பதில் பல விதிமீறல்கள் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுகின்றன. விதியை மீறி நன்கொடை வசூலித்தல், காப்புத் தொகையாக இரண்டு மடங்கு வசூலித்தல், விடுதி நிதி, கணினி வை-பை இணைப்பு நிதி, தேர்வு, பராமரித்தல் மற்றும் கட்டட நிதி என, பல வகைகளில் வரைமுறையின்றி கட்டணம் வசூலிப்பதால், மாணவர்கள் திணறலுக்கு ஆளாகின்றனர்.
மாணவர்கள் படிப்பை முடித்த பின்பும், காப்புத் தொகையை பல கல்லுாரிகள் திருப்பி தருவதில்லை. இது தொடர்பாக, சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மாணவி ஒருவர் வழக்கு தொடர்ந்து, தனியார் இன்ஜி., கல்லுாரியிடமிருந்து காப்புத் தொகை பெற்றார்.
இதற்கிடையில், கட்டண பாக்கி மற்றும் அபராதத் தொகை பாக்கி போன்றவற்றால், மாணவர்களின் சான்றிதழை தராமல், பல கல்லுாரிகள் இழுத்தடிப்பதாக, யு.ஜி.சி.,யில் புகார்கள் குவிந்துள்ளன. இதுதொடர்பாக, நடந்த விசாரணையில், பல கல்லுாரிகள் விதிமீறல்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், யு.ஜி.சி., செயலர் டாக்டர் ஜஸ்பால் சந்து, அனைத்து பல்கலைகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
மாணவர்கள் கட்டண பாக்கி வைத்திருப்பதற்காக, அவர்களின் அசல் சான்றிதழ்களை பணயமாக வைத்துக் கொள்ள கல்லுாரிகளுக்கு எந்த அனுமதியும் இல்லை. பல கல்லுாரிகளில் மாணவர்கள் ஒரு பாடப்பிரிவில் சேர்ந்து, பின் தங்களுக்கு பிடித்த வேறு பாடப்பிரிவில், வேறு கல்லுாரியில் சேர்ந்தால், அவர்கள் செலுத்திய கட்டணத்தை, கல்லுாரிகள் திரும்ப தரவில்லை என, புகார்கள் வருகின்றன. மேலும், கட்டணத்தை தாமதமாக செலுத்தும் மாணவர்களின் சான்றிதழ்களையும், சுயநிதி கல்லுாரி மற்றும் பல்கலைகள் திருப்பி தரவில்லை என, தெரியவந்துள்ளது.
சான்றிதழ்களை பிடித்து வைத்து, மாணவர்களை அடுத்த உயர்கல்விக்கோ, வேலைவாய்ப்புக்கோ செல்ல விடாமல் தடுப்பது சட்ட விரோதம். அதேபோல, ஒரு மாணவர் குறிப்பிட்ட கல்லுாரியில் சேர்ந்து விட்டு, சிறிது இடைவெளியில் வேறு கல்லுாரிக்கு மாறினால், அந்த இடத்தில் காத்திருப்பு பட்டியலில் உள்ள மாணவரை கல்லுாரிகள் சேர்க்கலாம். எனவே, பழைய மாணவருக்கு கட்டணத்தை கட்டாயம் திருப்பித் தரவேண்டும். இல்லையெனில், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை