Ad Code

Responsive Advertisement

உங்களுக்கு என்ன பயிற்சி வேண்டும்? தனித்தனியே கேட்கப்படும் கேள்வியால் ஆசிரியர்கள் குழப்பம்

'உங்களுக்கு என்ன பயிற்சி வேண்டும்?' என, ஒவ்வொரு ஆசிரியரிடமும், தனித்தனியே விவரம் கேட்கப்படுவதால், ஆசிரியர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை,அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஒரு சில நாள் பாடம் சார்ந்து, பயிற்சி வழங்கப்பட்டு வந்தன. இவை சமீப காலமாக அதிகரித்து, அனைவருக்கும் கல்வி திட்டம், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம், ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை என தனித்தனியே ஆண்டுக்கு, 20 நாள் வரை பயிற்சி வழங்கப்படுகிறது.

இதனால், ஆர்வத்துடன் கலந்து கொண்ட நிலை மாறி, பயிற்சி என்றாலே, பதறியடித்து ஓடும் நிலை உள்ளது. இந்நிலையில், ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில், அனைத்து ஆசிரியர்களிடமும், 'என்ன பயிற்சி வேண்டும்?' என, விபரம் கேட்கப்பட்டுள்ளது. இதனால், ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: வழக்கமாக என்ன பயிற்சி வழங்க வேண்டும் என்பதை கல்வித்துறை அலுவலர்களே முடிவு செய்து, பயிற்சிக்குஅழைப்பது வழக்கம். இந்த முறை, அனைத்து ஆசிரியர்களிடமும் என்ன பயிற்சி தேவை என, கேட்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான தேவையை கொண்டுள்ளனர் என்பதால், பல்வேறு விதங்களில் படிவங்களை நிரப்பி வருகின்றனர். எப்போது வழங்கப்படுவது? என்ன விதமான பயிற்சி? என எதுவும் குறிப்பிடாமல், படிவங்கள் வழங்கப்பட்டதால், குழப்பம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் விஜயகுமார் கூறியதாவது: அடுத்த, 2016-17 ம் கல்வியாண்டில், ஆசிரியர் கல்வி நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் பயிற்சி, ஆசிரியர்களுக்கு தேவையான பயிற்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஆசிரியர்களின் தேவைகளும் கேட்கப்பட்டுள்ளது. இதில், அதிகப்படியான தேவை உள்ள பயிற்சிகள், மத்திய அரசின் நிதியுதவியுடன் அடுத்த கல்வியாண்டில் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement