Ad Code

Responsive Advertisement

போலி கல்விச் சான்றிதழ் கொடுத்த இரு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

போலி கல்விச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த விவகாரத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இருவர் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
 

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த முனியப்பன்(37), வேலூர் மாவட்டம், திருப்பத்தூரை அடுத்த எர்ரம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.
 

பணியில் சேர்ந்தபோது அவர் அளித்த கல்விச் சான்றிதழ் போலியானது என்பது விசாரணையில் தெரியவரவே கல்வி அதிகாரிகளால் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் செய்யப்பட்டது.
 

இதுதொடர்பாக முனியப்பனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இடைத்தரகர் ராஜேந்திரன் மூலம் போலி கல்விச் சான்று பெற்றது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர்.
 

இடைத்தரகர் ராஜேந்திரன் மூலம் போலி கல்விச் சான்று பெற்று வேலூர் மாவட்டத்தில் மற்றொரு ஆசிரியர் பணியில் சேர்ந்திருப்பதாக கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.
 

இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் கந்திலி ஒன்றியத்துக்கு உள்பட்ட செவ்வாத்தூர் புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வரும் செந்தில்குமார் என்பவர் தனது பெயரை கிருபா என மாற்றி போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்திருப்பது கண்டறியப்பட்டது.
 

இதையடுத்து போலி கல்விச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த விவகாரத்தில் சிக்கிய ஆசிரியர்கள் முனியப்பன், செந்தில்குமார் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் (பொறுப்பு) சிவானந்தம் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.
 

பதிவேடுகள் ஆய்வு: இவர்களைத் தொடர்ந்து மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் போலிச் சான்றிதழ் அளித்து எவரேனும் பணியில் சேர்ந்துள்ளனரா என்பது குறித்து ஆசிரியர்களின் பதிவேடுகளை கல்வித்துறை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement