Ad Code

Responsive Advertisement

அன்பாசிரியர் 12 - விஜயலலிதா: பள்ளி பலத்தை 5-ல் இருந்து 246 ஆக உயர்த்திய தனித்துவம்!

நான் உயிரோடு இருப்பதற்கு, என் பெற்றோருக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். சிறப்பாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்குக் கடமைப்பட்டிருக்கிறேன்.


கரூர் காந்தி கிராமத்தின் அருகில் இருக்கும் அந்த அரசு தொடக்கப் பள்ளியைச் சுற்றிலும், ஏராளமான தனியார் பள்ளிகள். பள்ளிக்கு வெகு அருகில், இரண்டு மெட்ரிக் பள்ளிகள். ஒரு காலத்தில் 5 பேர் மட்டுமே படித்த ஆரம்பப் பள்ளியில் இன்று 246 பேர் படிக்கின்றனர். இதில் சுமார் 100 குழந்தைகள், தனியார் பள்ளிகளிலிருந்து இங்கு வந்து சேர்ந்திருக்கின்றனர். ஆறு பெங்காலி குழந்தைகள் இந்தப் பள்ளியில் சேர்ந்து தமிழையும் கற்கின்றனர். இவை அனைத்துக்கும் யார் காரணம்?
அத்தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை விஜயலலிதா சொல்கிறார்.


வாசிப்பு பயிற்சியும், சுகாதாரமும்
தொலைக்காட்சி பார்ப்பதைக் குறைக்க வேண்டும்; தினசரி செய்தித்தாள்களை பார்க்க வேண்டும்; வாரம் ஒரு தடவையாவது நூலகம் செல்ல வேண்டும் போன்ற விஷயங்கள் குழந்தைகளின் மனதில் விதைக்கிறோம்.



வாசிப்புப் பயிற்சிக்காகக் குழந்தைகளை, செய்தித்தாள்களின் தலைப்புகளை வெட்டி, தங்கள் நோட்டுப்புத்தகங்களில் ஒட்டச் சொல்கிறோம். 6 ஆசிரியர்கள், 6 தமிழ்ச் செய்தித்தாள்களை வாங்கித் தருகின்றனர். ஒரு ஆசிரியர் ஆங்கில செய்தித்தாளை வாங்கி வருகிறார்.
விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வருபவர்களுக்கு நிச்சயம் பரிசு உண்டு. இதனால் உடல்நிலை சரியில்லாமல் விடுமுறை எடுப்பவர்களைத் தவிர, பெரும்பாலான மாணவர்கள் 100 சதவீத வருகையை உறுதி செய்கின்றனர்.



பள்ளியின் சுகாதாரத்தில் நாங்கள் சமரசம் செய்து கொள்வதே இல்லை. மூவாயிரம் ரூபாய் கொடுத்து ஆயா ஒருவரை வேலைக்கு வைத்திருக்கிறோம். சுகாதாரமான குடிநீர் வழங்கப்படுகிறது. கழிப்பறை வசதி செய்யப்பட்டு முறையாகப் பராமரிக்கப்படுகிறது. எங்கள் வளாகத்தில் குப்பையைக் கண்டுபிடித்துச் சொல்பவர்களுக்குப் பரிசுகள் அளித்து தூய்மையை உறுதி செய்கிறோம்.



வாராவாரம் வியாழன் அன்று சுற்றுச்சூழல் மன்றமும், வெள்ளியில் செயல்திட்டப் பொருட்கள் கண்காட்சியும் உண்டு. மூலிகைத் தோட்டமும் இங்கே பராமரிக்கப்படுகிறது. பல்லாங்குழி, கொலகொலயா முந்திரிக்கா, கோலி, பட்டம் விடுதல் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை நடத்தவும் குழு அமைத்திருக்கிறோம்.


பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரைப் போட்டி, கண்காட்சி ஆகியவையும் உண்டு. எங்கள் பள்ளியில் ஒவ்வொரு வகுப்புக்கும் இவற்றில் ஒரு பொறுப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. வருடந்தோறும் சிறப்பான முறையில் ஆண்டு விழா நடத்தப்படுகிறது. திறமை, தரம் தாண்டி ஆர்வத்துடன் எல்லாக் குழந்தைகளையும் மேடை ஏற வைப்பதுதான் எங்களின் குறிக்கோள். இதில் மாணவர்கள் அனைவருக்குமே பரிசுகள் உண்டு.



கிராமக் கல்விக் குழுக்கள் மூலம் எல்லா வகுப்பறைகளுக்கும் மின்விசிறி வசதிகள் செய்திருக்கிறோம். எட்டு கணிப்பொறிகள் வாங்கப்பட்டு, ஏசி அறையில் வைத்துப் பயன்படுத்தப்படுகின்றன. அரசு தரும் சீருடைகளோடு, ஸ்பான்சர்ஷிப் மூலம் மாணவர்களுக்கு கூடுதல் சீருடைகள் வழங்கப்படுகின்றன.



பள்ளி மேலாண்மைக் குழு மூலம், மாதந்தோறும் பெற்றோர் சந்திப்பை நடத்தி வருகிறோம். செயல்முறைத் திட்டங்களை ஆண்டின் தொடக்கத்திலேயே கொடுத்து விடுகிறோம். பெற்றோர்களின் ஒத்துழைப்போடு அவை ஆண்டு விடுமுறைகளிலேயே முடிக்கப்படுவதால் இது சாத்தியமாகிறது. செயல்வழிக் கற்றலில் தொடர்ந்து மூன்று வருடங்களாக சிறந்த பள்ளி விருதைப் பெற்று வருகிறோம்.
பலமாக நினைப்பது



பலவீனமாக இல்லை என்பதைத்தான் என்னுடைய பலமாக நினைக்கிறேன். எங்கள் அரசுப் பள்ளி நகர்ப்புறத்தில் இருக்கிறது. இதனால் இட வசதி போதவில்லை. நடந்து செல்லும் தூரத்திலேயே இரண்டு தனியார் பள்ளிகள் இருக்கின்றன. இவை எல்லாவற்றையும் தாண்டிதான் இயங்கிக் கொண்டிருக்கிறோம். நல்லதை நோக்கிப் பயணிப்பதால்தான் நீண்ட தூரத்துக்கு வெற்றிகரமாக செயல்பட முடிகிறது.



இங்கேயும் டயரி முறை உண்டு. அதில் தினமும் வீட்டுப்பாடங்களை எழுதிக் கொடுக்கிறோம். பெற்றோர்கள் பார்த்து அதில் கையெழுத்துப் போட்டுக்கொடுக்க வேண்டும்.



ஆர்.டி. எனப்படும் தொடர் சேமிப்பு மூலம், பெற்றோர்கள் தங்கள் குழந்தை பெயரில் மாதமொரு முறை குறைந்தபட்சமாக 100 ரூபாயை செலுத்தலாம். அவர்கள் அதை ஐந்தாம் வகுப்பு முடித்துச் செல்லும்போது பெற்றுக் கொள்ளுமாறு செய்திருக்கிறோம்.



பள்ளி வேலை நேரங்களில் ஆசிரியர்கள் செல்பேசி பயன்படுத்த அனுமதி இல்லை. அவசரத்துக்கு லேண்ட்லைனை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். பெற்றோர்களும் அதன் வழியேதான் தங்கள் மாணவர்களைத் தொடர்பு கொள்கின்றனர். எங்கள் பள்ளியைப் பற்றிக் கேள்விப்படும் பெற்றோர்கள் தொலைவில் வசித்தாலும் ஆட்டோ மூலம் தங்கள் குழந்தைகளை அனுப்பி வைக்கின்றனர். இது எங்களை இன்னும் உற்சாகமாக செயல்பட வைக்கிறது.



எதிர்காலத் திட்டங்கள்
தொடக்கப் பள்ளியாக இருக்கும் எங்கள் பள்ளியை நடுநிலைப்பள்ளியாக ஆக்க வேண்டும் என்பது என்னுடைய குறுகிய காலத் திட்டம். பால்வாடியில் இருக்கும் 35 குழந்தைகளை, எங்கள் ஆசிரியர்களைக் கொண்டு பார்த்துக் கொள்கிறோம். அவர்கள் அனைவருமே அடுத்த கல்வியாண்டில் எங்கள் பள்ளிக் குழந்தைகள் ஆகப் போவதால் இப்போதே அக்கறையுடன் கவனிக்கிறோம்.



5 மாணவர்களே இருந்த எங்கள் தொடக்கப்பள்ளியில் இப்போது 246 பேர் படிக்கிறார்கள். குறைந்தபட்சம் 1000 மாணவர்களாவது இங்கே படிக்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. என்னையும் சேர்த்து இங்கு பணிபுரியும் 8 ஆசிரியர்களும் பெண்கள்தான். நிச்சயம் பெண்களால், நாட்டின் தலைவிதியை நல்லபடியாக நிர்ணயிக்க முடியும்தானே?

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement