Ad Code

Responsive Advertisement

ஆசிரியர்களிடம் நிவாரண நிதி வசூலில் குளறுபடி!

அரசு பள்ளி ஆசிரியர்களின் வெள்ள நிவாரண நிதி வசூலிப்பில், பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன. சென்னையை புரட்டிப்போட்ட வெள்ளத்தை தொடர்ந்து, மீட்பு பணிகளுக்காக தங்களது ஒருநாள் ஊதியத்தை தருவதாக, ஆசிரியர்களின் அமைப்புகள் அறிவித்தன. இதையடுத்து, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விரும்பினால், முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு, ஒருநாள் ஊதியத்தை அளிக்கலாம் என தமிழக அரசு உத்தர விட்டது.


இதற்காக, விருப்பமுள்ளவர்களின் டிசம்பர் மாத ஊதியத்தில் நிவாரண நிதியை பிடித்துக்கொள்ள அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதுகுறித்து, பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை மூலம் கல்வி அலுவலகங்களுக்கு அரசாணை நகல் அனுப்பப்பட்டது. ஆனால், பல மாவட்டங்களில் முதன்மை கல்வி அதிகாரிகள், இந்த சுற்றறிக்கையை பள்ளிகளுக்கு அனுப்பாததால், டிசம்பர் மாத சம்பள பட்டியலில், நிவாரண நிதி பிடித்தம் குறித்த நடைமுறைகளில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில், விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் முதல்வரின் நிவாரண நிதிக்கு, ஒருநாள் ஊதியத்தை கட்டாயம் தர வேண்டுமென, அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக புகார் கூறப்படுகிறது.



இதுகுறித்து, ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:அரசாணை பிறப்பிக்கப்பட்ட பின்பும், பல தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அதிகாரியிடமிருந்து வழிகாட்டு நெறிமுறைகள் இன்னும் வரவில்லை. மேலும் அரசாணை நகலைக் கூட அனுப்பவில்லை. அதனால், டிசம்பர் மாத சம்பளத்துக்கு, வழக்கமாக, 15ம் தேதி தயார் செய்யப்படும் பட்டியலில், ஆசிரியர்களின் பணப்பிடித்தம் குறித்து, பல மாவட்டங்களில் எந்த தகவலும் இடம்பெறவில்லை. சில மாவட்டங்களில் முதன்மை கல்வி அதிகாரிகளின் விரைவான செயல்பாட்டால், நிதி வழங்கும் ஆசிரியர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. வேறு சில மாவட்டங்களில், விருப்பமுள்ள ஆசிரியர்களின் பட்டியலையே கேட்காமல், அதிகாரிகளே உத்தரவிட்டு அனைத்து ஆசிரியர்களின் சம்பளத்தையும் கட்டாயமாக பிடித்தம் செய்கின்றனர். எனவே, இதுதொடர்பாக கல்வித்துறை உயரதிகாரிகள் சரியான செயல்முறை உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement