Ad Code

Responsive Advertisement

சிறப்பு முகாம்கள் தொடங்கின: ஒரு வாரத்தில் கல்விச் சான்றிதழ்கள்

மழை, வெள்ளத்தால் கல்விச் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கான சிறப்பு முகாம்கள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் 132 இடங்களில் திங்கள்கிழமை தொடங்கின. இவற்றில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பவர்களுக்கு ஒரு வாரத்தில் சான்றிதழ் நகல்கள் அளிக்கப்பட உள்ளன.
 

வெள்ளப் பெருக்கால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்தன. பலர் வீடுகளையும், உடைமைகளையும் இழந்ததோடு, கல்விச் சான்றிதழ்கள் உள்ளிட்ட பிற அரசு ஆவணங்களும் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
 

இதில், கல்விச் சான்றிதழ்களை இழந்தவர்கள் எளிதாக மறு சான்றிதழ்களைப் பெறும் வகையில் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களிலும் 132 சிறப்பு முகாம்களை தமிழக அரசு அமைத்துள்ளது. இவை திங்கள்கிழமை முதல் டிசம்பர் 27-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.
 

சென்னை மயிலாப்பூர் புனித எப்பாஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமை, பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி தொடக்கி வைத்தார். பின்னர் மாலை வரையில் ஏராளமானோர் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தனர்.
 

இதுகுறித்து சாந்தோமைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பார்த்திபன், மயிலாப்பூரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சரவணன் ஆகியோர் கூறியதாவது:
 

பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. தொலைந்துபோன சான்றிதழ்களை பெற சிறப்பு முகாம்களில் விண்ணப்பிப்பது என தமிழக அரசு அறிவித்தது மிக எளிதாக இருந்தது.
 

மதிப்பெண் சான்றிதழ்களின் பதிவு எண்கள் ஞாபகம் இல்லை. நகலும் இல்லை என்றனர். இவர்களுக்கு நகல் சான்றிதழ் பெற குறித்து இரண்டு வாரத்துக்கு பிறகு தகவல் தெரிவிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகத்திலும் விண்ணப்பிக்கலாம்: முகாமை ஆய்வு செய்த செயலர் டி.சபீதா நிருபர்களிடம் கூறியதாவது:
 

சென்னையில் மட்டும் 54 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 8-ஆம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஆசிரியர் பட்டயப் படிப்புச் சான்றிதழ், ஓவியம், நடனம் உள்ளிட்ட அரசு பட்டயச் சான்றிதழ்களை இழந்தவர்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். ஒரு வாரத்தில், விண்ணப்பித்தவர்களுக்கு நகல் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
 

முகாமில் பங்கேற்க இயலாதவர்கள் நேரடியாக பள்ளி கல்வித் துறை இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து நகல் சான்றிதழைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement