Ad Code

Responsive Advertisement

கல்வியியல் கல்லூரி பல இருந்தும் திறமையான ஆசிரியர் இல்லையே: NCERT மண்டல இயக்குனர் வேதனை

'தமிழகத்தில் கல்வியியல் கல்லுாரிகள் பல இருந்தும் திறமையான ஆசிரியர்கள் உருவாவதில்லையே' என, என்.சி.இ.ஆர்.டி., மண்டல இயக்குனர் வேதனை தெரிவித்தார்.காந்தி கிராம பல்கலை கல்வியியல்துறை, தேசிய தேர்வு சேவை மையம் இணைந்து நடத்திய 'தேர்வு முறையில் சீர்திருத்தங்கள்' என்ற தேசிய கருத்தரங்கு நேற்று துவங்கியது.

தேசிய தேர்வு சேவை மைய தலைவர் பாலகுமார் முன்னிலை வகித்தார். பல்கலை பதிவாளர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்து பேசுகையில், “கற்றல் திறன் குறைபாடுகளால் ஐ.ஐ.டி., போன்ற கல்வி நிறுவனங்களில் தமிழக மாணவர்கள் 4.6 சதவீதமே படிக்கின்றனர். ஆந்திரா, உ.பி., ம.பி., பீஹார் மாநிலத்தவர் அதிகம் படிக்கின்றனர். தமிழக மாணவர்கள் நுழைவதற்கு மனப்பாட முறையே தடையாக உள்ளது”, என்றார்.

திரும்ப திரும்ப தேர்வுதேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன (என்.சி.இ.ஆர்.டி.,) மைசூர் மண்டல இயக்குனர் ராவ் பேசியதாவது: பாடத்திட்டம், கற்பித்தல், தேர்வு முறைகள், மதிப்பிடுதல் தொடர்பாக ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்க வேண்டும். ஒருங்கிணைந்த தேர்வு முறைகள் உருவாக்கப்பட வேண்டும். பாடம் குறித்த புரிதல் ஏற்படும் வரை திரும்ப திரும்ப மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்த வேண்டும்.

பள்ளிகளில் மாணவர்களுக்கு அறிவியல் சோதனை முறைகள், ஆய்வுக்கூடங்களில் கற்றுத்தரப்படுவது இல்லை. இது எதிர்காலத்தில் மாணவர்களின் கண்டுபிடிப்புத் திறனை பாதிக்கும்.

இசை, நடனம், ஓவியம், நடிப்பு சார்ந்த தனித்திறன்களை மதிப்பிடப்பட வேண்டும். அப்பொழுதுதான் மாணவர்களுக்கு கற்றலில் உற்சாகம் பிறக்கும். தமிழகத்தில் ஆசிரியர்களை உருவாக்கும் கல்வியியல் கல்லுாரிகள் நிறைந்துள்ளன. ஆனால் அங்கிருந்து திறமையான ஆசிரியர்கள் வெளியேறுவது இல்லை. ஆசிரியர்களின் சிறந்த கற்பித்தல் முறைகளே தேர்ந்த மாணவர்களை உருவாக்கும், என்றார். கருத்தரங்க ஏற்பாடுகளை துறைத்தலைவர் ஜாகிதாபேகம், உதவிப் பேராசிரியர் முருகன் செய்திருந்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement