Ad Code

Responsive Advertisement

"மாணவர்களின் ஒழுக்கத்திறனை மேம்படுத்துவதில் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு'

மாணவர்களுக்கு கல்வித் திறனுடன் ஒழுக்கத்திறனையும் மேம்படுத்துவதில் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உள்ளது என்று திருவள்ளுவர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பி.குணசேகரன் கூறினார்.

கிராப்ஸ் கல்வி அறக்கட்டளை சார்பில் குரோம்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கல்லூரி பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு விருதுகள் வழங்கும்  விழாவில் அவர் மேலும் பேசியது:

மாணவர்களுக்கு நல்லொழுக்கத்தைப் போதிக்கும் பொறுப்பு பெற்றோர்களுக்கு இருந்தாலும், அவற்றைக் கடைப்பிடிக்க கற்றுத் தரும் பொறுப்பு ஆசிரியர்களுக்குத்தான் உள்ளது. வகுப்பில் பாடம் சொல்லித்தருவது மட்டும் தான் எனது கடமை என்று பொறுப்பைத் தட்டிக்கழிக்கக் கூடாது.

ஒரு காலத்தில் யாதுமாகி, எல்லாவற்றையும் கற்றுத்தரும் மிக உயர்ந்த சேவையை வழங்கி வந்த ஆசிரியர் பணி, இன்று வெறும் பயிற்சியாளராகத்தான் கருதப்படும் நிலை உருவாகி உள்ளது.

மாணவர்களது கல்வித்திறனையும்,ஒழுக்கத்திறனையும் நெறிப்படுத்தி மேம்படுத்துவதில் பள்ளி ஆசிரியர்களுக்கு மிக முக்கிய பங்குண்டு. கடினமான,சவால் நிறைந்த அந்த பணியில் பலர் அர்ப்பணிப்புடன் இன்று ஈடுபட்டு வருகின்றனர். 

கல்வி போதிக்கும் ஆசிரியர்களிடம் நன்னடத்தை மிக அவசியம். மாணவர்கள் மத்தியில் மதிப்பையும், மரியாதையையும் தக்க வைத்துக்கொள்ள நன்னடத்தை மிகவும் அவசியமானதாகும் என்றார்.

மணிப்பால் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒய்.குருபிரசாத் ராவ் பேசுகையில்,ரஷ்யாவில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும் நேரம் மிகவும் குறைவு.கால் மணிநேரமே பாடம் நடத்தும் அவர்கள், மீதி நேரத்தை மாணவர்களை பாடம் நடத்த வைக்கின்றனர். தவறுகளைச் சுட்டிக் காட்டி அவர்களது ஆளுமைத் திறனை மேம்படுத்த உதவுகின்றனர் என்றார். விழாவில் 160 பேராசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement