Ad Code

Responsive Advertisement

தற்காலிக பட்டாசுக் கடை வைக்க ஆசையா? அதற்கு லைசன்ஸ் வாங்க வழிமுறைகள்...

திடீரென ஒரு கூரை அமைத்து அதில் பட்டாசுப் பொருட்களை விற்பது என்பது இந்த தீபாவளி சமயத்தில் புதிதாக முளைக்கும் காளான் தொழில். உண்மையில் சீசனுக்கேற்ற தொழிலாக பட்டாசு விற்க வேண்டும் என்றால் கூட சட்டத்தின் அனுமதி தேவை. விற்பனையாளர்கள் அதற்குரிய லைசன்ஸ் முன்னரே பெற வேண்டும். ஆனால் சமீபத்தில் தில்லி உயர் நீதிமன்றம், இப்படிப்பட்ட, பாதுகாப்பு நடவடிக்கை ஏதுமற்ற தற்காலிக பட்டாசு விற்பனைக் கூடங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என உத்திரவு கொடுத்திருக்கிறது.

பட்டாசுகளின் விலை அந்தப் பெட்டியில் அச்சடிக்கப்பட்டிருக்கும். நாம் கொடுத்த விலை ஒன்றாகவும், அந்த பட்டாசுப் பொட்டலத்தில் இருக்கும் விலையோ மிக மிக மிக அதிகமானதாக இருக்கும். கவனித்துள்ளீர்களா? இல்லையெனில், இனி கவனியுங்கள்.

இந்தக் கூடுதல் விலை பெட்டியில் அச்சடிக்கப்படுவது ஏன் என்றால், அந்த MRP விலையானது. அந்தப் பட்டாசுகளை மிகப் பாதுகாப்பாக வைக்கவும். மிக மிகப் பாதுகாப்பாக ஓரிடத்திலிருந்து வேறிடத்திற்குக் கொண்டு செல்லவும் ஆகும் தொகையையும் சேர்த்துத்தான்.

பட்டாசுப் பொருட்களை மற்ற பொருட்களைப் போல கூரியரில் அனுப்பக்கூடாது. பொதுவாகனங்களில் கொண்டு செல்லக் கூடாது. ஒரு வீட்டிற்குத் தேவையான சின்னஞ்சிறு பெட்டி என்றாலும் கூட அப்படிக் கொண்டு செல்லக்கூடாது.

பட்டாசுக் கடையும் கூட பொதுமக்கள் புழங்கும் அல்லது வீடுகள் போன்றவை இருக்கும் இடங்களில் இருந்து 50 மீட்டர் தொலைவிலேயே இருக்க வேண்டும்.

லைசன்ஸ் இல்லாத கடைகளில் நாம் வாங்குவதைத் தவிர்ப்பதன் மூலம், நம் பாதுகாப்பை நேர் செய்து கொள்ள முடியும்.

சரி. லைசன்ஸ் வாங்க வேண்டும் எனில் என்னென்ன வழி முறைகள்?

லைசன்ஸ் வாங்க வேண்டும் எனில் உதாரணமாக கோயமுத்தூர் கார்பரேஷன் எல்லைக்குள் எனில், டெபுடி கமிஷனரிடம் அதற்கான விண்ணப்பத்தை அளிக்க வேண்டும். டெபுடி கமிஷனர் அந்த விண்ணப்பத்தை ரெவின்யு டிபார்ட்மெண்ட், ஃபயர் டிபார்மெண்ட், போலீஸ் டிபார்ட்மெண்ட் மூவருக்கும் அனுப்பி வைப்பார். அந்த மூன்று துறையிலிருந்தும் அந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படும்.

இதே லைசன்ஸ் மாநகர எல்லை தாண்டி உள்ள இடங்களுக்கு வாங்க வேண்டும் எனில் கலெக்டரிடம் விண்ணப்பிக்க வேண்டும். அவரும் அந்த விண்ணப்பத்தை, மேற்சொன்ன அதே மூன்று துறைகளுக்கும் அனுப்பி வைப்பார்.

உதாரணமாக, ரெவின்யூ டிபார்ட்மெண்ட் எனில், அந்தக் கடை போடப்படும் இடம், விண்ணப்பித்தவரின் சொந்த இடமா? இல்லை எனில் லீசுக்கோ, வாடகைக்கோ எடுத்திருக்கிறாரா? அப்படி எடுத்திருந்தால் அதற்கான ஒப்பந்தங்கள் ஏதும் இருக்கிறதா என்பனவற்றை ஆராயும். ஏன் எனில், ஒருவர் பெயரில் விண்ணப்பித்துவிட்டு, மற்றொருவர் கடை போடக்கூடாது என்பதே சட்டம். எவர் லைசன்ஸ் வாங்குகிறாரோ அவரே கடை போடலாம். விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் இடத்தில் தான் கடை போடுகிறார்களா? அல்லது விண்ணப்பத்தில் ஓரிடமும், உண்மையில் வேறிடத்திலும் கடை போடப்படுகிறதா? எனவும் ஆராய்வார்கள். ஏனெனில், சொல்லப்பட்ட இடத்தில் மட்டுமே மற்ற பாதுகாப்பு வழிகள் இருக்கின்றனவா என கவனிக்கப்படும்.

போலீஸ் துறையானது, அந்தக் கடைக்கு வாங்கப்படும் வெடிப் பொருட்கள், விற்பனைக்கு மட்டுமே பயனாகிறதா? அல்லது வேறெதேனும் சட்ட விரோதமான வேலைகளுக்குப் போகிறதா? என்பதை ஆராய்வார்கள். இது போக, எவர் பெயரில் விண்ணப்பிக்கப்படுகிறதோ அவர் பெயரில் வேறேதும் குற்ற நடவடிக்கை துறை ஏட்டில் பதிவாகியுள்ளதா போன்ற பலவற்றை ஆராய்ந்த பின்பே அனுமதி வழங்குவார்கள்.

அந்த மூன்று துறைகளின் அனுமதி கிடைத்த பிறகே டெபுடி கமிஷனரோ கலெக்டரோ லைசன்ஸ் சர்டிஃபிகேட் வழங்குவார். லைசன்ஸை வருடா வருடம் புதுப்பித்துக் கொள்ளலாம்.

தீயணைப்புத் துறை எனில், பட்டாசுக் கடை போடப்படும் இடம் ஒரு வேளை தீப்பிடித்தால், தீயணைப்பு வாகனமோ, ஆம்புலன்ஸோ சுலபத்தில் போய்வரத் தோதாக இருக்கிறதா? என்பன போன்றவற்றை ஆராயும்.

ஃபயர் சர்வீஸ் துறையானது, எக்ஸ்ப்லோசிவ்ஸ் சட்டம், மற்றும் பில்டிங் கோட் இவற்றை அடிப்படையாக வைத்து பிரிக்கப்பட்ட டிவிசன்களுக்கான வரைமுறைகளை அடிப்படையாக வைத்து அந்த இடங்களில் என்ன மாதிரியான பாதுகாப்பு வழி முறைகள் செய்ய வேண்டி இருக்கும் என கணிக்கும். உதாரணமாக ஒரு கடையானது 9 Square metre முதல் 25 Square metre வரை இருக்கலாம். அந்த கடையானது ஒரு அபார்ட்மெண்ட்டின் கீழ் அமைந்ததாக இருக்ககூடாது. ஏதும் காம்ப்லக்ஸ் கட்டிடத்தில் இருக்கக்கூடாது. கட்டிடத்திற்கு தனித்தனியாக நுழைவு வாயில் மற்றும் வெளியேறும் வழி இருக்க வேண்டும். அதாவது பழக்கடை போல, கடைக்காரரைச் சுற்றி பட்டாசுகள் அமைந்திருக்கக்கூடாது. விபத்து ஏற்பட்டால், வாங்க வந்தவர்களும் சரி, விற்பவரும் சரி தப்பிக்க ஏதுவாக வழி இருக்க வேண்டும்.

அருகே ட்ரான்ஸ்ஃபார்மரோ, பொது சனங்கள் அதிகம் புழங்கும் கோவில், பள்ளிகள் இருகக்கூடாது.

ஒரு பட்டாசுக் கடைக்குத் தேவையானவை, பாதுகாப்பு வழிமுறைகள் என்னென்ன என்பது, அதற்கான விண்ணப்பத்தின் இறுதியிலேயே இருக்கும்.

அவற்றைப் பின்பற்ற வேண்டும். பின்பற்ற வசதி இருக்கிறதா என்பதையே இந்த மூன்று துறைகளும் செக் செய்கின்றன.

அதே போல பொதுமக்கள் புழங்கும் ரயில், பஸ் போன்றவற்றில் மற்ற பொருட்களோடு பட்டாசுகளைக் கொண்டு போகக்கூடாது. விற்பனைக்கோ, சொந்தத் தேவைக்கோ அனுப்ப வேண்டும் என்றால் கூட அதற்கென விதிமுறைகள் உள்ளன.

இவை எல்லாம் போக, ஒரு லைசன்ஸ்சிற்கான கால அளவிற்கு மட்டுமே செல்லும். அதற்குப் பின் லைன்சன்ஸை புதுப்பிக்காமல் பயன்படுத்தக் கூடாது.

விண்ணப்பத்தில் குறிப்பிட்ட வகை, பட்டாசுகளை மட்டுமே கடையில் வைக்கவோ, விற்கவோ செய்யலாம்.

வாங்கி வைத்த பட்டாசுகள் களவு போனால் உடனடியாக போலீஸில் புகார் அளிக்க வேண்டும்.

பட்டாசுகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவதாக இருந்தாலோ, வெளி நாட்டுக்கு விற்பனை செய்வதாக இருந்தாலோ அதையும் குறிப்பிட்டு அதற்கான லைசன்ஸையும் பெற வேண்டும்.




ஆன்லைனில் பட்டாசுகள்:

இவை எல்லாமே தவிர ஆன்லைனில் பட்டாசு விற்பனையும் களை கட்டி வருகிறது. அப்படி நாம் ஆன்லைனில் வாங்குவதாக இருந்தால், முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டியது, அதை விற்பவர் பட்டாசு விற்பதற்கான லைசன்ஸைப் பெற்றிருக்கிறாரா? அந்தப் பட்டாசுகளை நமக்கு அனுப்பி வைக்க ‘பட்டாசுட்ரான்ஸ்போர்ட்’ லைசன்ஸ் வைத்திருக்கிறாரா? லைசன்ஸ் பெற விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள இடத்திலிருந்துதான் அவர் பட்டாசுகளை விற்கிறாரா?அனுப்புகிறாரா?

மேற்சொன்ன தகவல்களை மற்ற பட்டாசுக் கடைவிஷயத்திலும் அறிந்து கொள்வது அவசியம்.

இவை எல்லாம் போக, பட்டாசுகளை தீபாவளி போன்ற விசேஷ தினங்களில் மட்டும் கடை போட்டு விற்பவருக்கும் குறுகிய கால லைசன்ஸுகள் கிடைக்கின்றன.

இவை ஒரு மாதத்திற்கோ , பத்து நாட்களுக்கோ நம் விண்ணப்பத்திற்கேற்றபடி கிடைக்கும்.

மேற்சொன்ன கால அவகாசம் மீறியோ, பட்டாசுப் பெட்டியில் ‘only for exports’ என்றோ ‘only for export in other countries’ என்றோ, இருந்தால், அந்தப் பெட்டியை வாங்க வேண்டாம்.

இரண்டு பட்டாசுக் கடைகளுக்கு இடையே 3மீட்டருக்கும் குறைவான இடைவெளியே இருந்தால் அதுவும் சட்டவிரோதம் தான்.

இவை குறித்து உடனேயே Joint Chief Controller of Explosives க்குத் தெரியப்படுத்தவும்.

முகவரி: சென்னையில்:

South Circle

Joint Chief Controller of Explosives

A and D - wing, Block 1-8, IInd Floor, Shastri Bhavan, 26 Haddous Road, Nungambakkam,

Chennai - TamilNadu-600 006

(044)28287118




ஒரு குடும்பம் 100கிலோ வரை பட்டாசுகளை வாங்கிப் கொள்ளலாம். அதை விற்பனைக்காக அல்லாமல் சொந்த பயன்பாட்டுக்காக வீட்டில் வைத்திருப்பதோ, பயன்படுத்துவதோ சட்டப்படி குற்றம் அல்ல. ஆனால் அதைப் பத்திரமாக வைக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் பயன்படுத்தப் பட்டிருக்க வேண்டும்.

பயனாளிகள் தெரிந்து வைத்திருக்க/செய்ய வேண்டியவை:

1. லைசன்ஸ் இல்லாத கடையில் வாங்கக்கூடாது.

2. பட்டாசுப்பெட்டியில் தயாரிப்பாளர், நிறுவனம், பெயர் முகவரி அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.

3. விலை MRP க்கு மேல் போகக்கூடாது.

4. அடுத்தடுத்து கடைகள் அமைந்திருக்கக்கூடாது.

5. பட்டாசுகளை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டுமெனில் அதற்கும் லைசன்ஸ் பெற வேண்டும்.

6. இரவு பத்து மணிக்கு மேல் பட்டாசு வெடிக்கக்கூடாது.

7. பகலிலும் வெடிக்கப்படும் பட்டாசின், அதாவது தனிப்பட்டாசின் வெடிச்சத்தம் 4 மீட்டர் சுற்றளவில், 125 dB(AI) or 145 dB(C)pk டெசிபல் அளவிற்கு மேல் இருக்கக்கூடாது.

8. மக்கள் புழங்கும் ரோடுகளில் வெடி வெடிக்கக்கூடாது.

9. வெவ்வேறு பட்டாசுகளில் இருந்து வெடி பொருட்களை ஒன்றாக இணைத்து, புதிய பட்டாசு தயாரித்தலோ, அதை வெடிக்கச்செய்தலோ கூடாது.

10. தடை செய்யப்பட்ட வெடிகளை தயாரித்தலோ, வாங்கவோ, விற்கவோ, வெடிக்கவோ கூடாது.

இவை எல்லாம் தவிர நாம் செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்:

1. ஒவ்வொரு வீடு/அபார்ட்மெண்ட்/காலனியிலும் Fire Extinguisher தயாராக வைத்திருக்க வேண்டும்.

2. வாளிகளில் நீர் நிரப்பி அதை மூடி வைத்திருக்க வேண்டும்.

3. அல்லது வாளிகளில் மணல் நிரப்பி அதை மூடி வைத்திருக்க வேண்டும்.

4. கம்பி மத்தாப்புகளை பயன்படுத்தி முடித்ததும் அதை அதற்கென ஒரு நீர் நிரப்பப்பட்ட உலோக வாளியில் போட்டுவர வேண்டும்.

5. காலில் செருப்பு கண்டிப்பாக அணிய வேண்டும்.

6. பட்டாசு வெடிக்கும் நேரம் மட்டுமாவது முடிந்த வரை பருத்தி உடைகளை அணிதல் நல்லது.

7. சிறு நெருப்பு எனில் நீர் ஊற்றி அணைக்கலாம். பெரு நெருப்பு எனில் நீர் ஊற்றினால் சட்டெனப் பிடிக்கும் சூடான நீர் ஆவி, நம் மீது பட்டால் நெருப்பை விட அதிக சேதத்தை விளைவிக்கும்.

8. எனவே, வீடு/அபார்ட்மெண்ட்/காலனியில் பலர் பார்வையில் படும்படி தீயணைப்பு சேவை மையத்தின் தொலைபேசி எண்களைக் குறித்து வைத்தல் நலம்.

9. ஒவ்வொரு வீட்டிலும், முதலுதவிச் சிகிச்சைக்கான உபகரணங்கள் மருந்துகள் இருந்தே ஆக வேண்டும்.

10. அந்தந்தப் பகுதி மருத்துவரின் / மருத்துவ மனையின் தொலைபேசி எண்ணைக் குறித்து வைத்திருத்தல் அவசியம்.

தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

-ஹன்ஸா (வழக்குரைஞர்)

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement