Ad Code

Responsive Advertisement

மத்திய அரசு ஆசிரியர் பணி வேண்டாம்: பட்டதாரிகள் ஓட்டம்

கே.வி., எனப்படும், 'கேந்திரிய வித்யாலயா' மத்திய அரசுப் பள்ளிகளில் பணியாற்ற, தமிழக பட்டதாரிகள் ஆர்வம் காட்டாததால், இதற்கான தகுதித் தேர்வில் பங்கேற்போர் எண்ணிக்கை சொற்பமாகவே உள்ளது. மத்திய அரசின், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி, அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர் பணியில் சேர, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

'சிடெட்' தேர்வு:

தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள், மாநில அளவில், ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வை நடத்துகின்றன. மத்திய அரசின் சார்பில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., மூலம் ஆசிரியர் தகுதித் தேர்வான, 'சிடெட்' நடத்தப்படுகிறது.இந்த ஆண்டில், இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த, சிடெட் தேர்வு முடிவுகள், இரு தினங்களுக்கு முன் வெளியாயின. 

6.55 லட்சம் பேர் எழுதிய அந்த தேர்வில், 1.14 லட்சம் பேர் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளனர்; இது, 17.48 சதவீதம். இதில், தமிழகத்தைச் சேர்ந்தோர் விரல் விட்டு எண்ணும் அளவிலேயே உள்ளனர். அதிலும் பலர், பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் என்பது கூடுதல் தகவல்.

பணிச்சுமை:

இதுகுறித்து கேந்திரிய வித்யாலயா ஆசிரியர்கள் கூறியதாவது:கே.வி., பள்ளிகளில் ஆசிரியராக சேர, சிடெட் தேர்வில் தேர்ச்சி அவசியம்; ஆங்கிலம், இந்தி போன்ற மொழிப் பாடங்களை அனைத்து ஆசிரியர்களும் எடுக்க வேண்டும்; பணிச்சுமை அதிகமாக இருக்கும். அதேநேரம், தமிழக பட்டதாரிகளில் பலருக்கு, இந்தி தெரிவதில்லை; இந்தி தெரியாமல், கே.வி.,யில் பணியாற்றுவது மிகக் கடினம்.

இந்தி மொழி தெரியாவிட்டால், 'பணியில் செயல்திறன் சரியில்லை' எனக் கூறி, 'சஸ்பெண்ட்' செய்யப்படுவது இந்த பள்ளிகளில் சாதாரணம். மேலும், ஒழுங்கு நடவடிக்கையாக, வடமாநிலங்களுக்கு பணியிடம் மாற்றப்படுவர். இதுபோன்ற பிரச்னைகளால், மத்திய அரசு ஆசிரியர் பணிக்கு, தமிழக பட்டதாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை. மேலும், தமிழகத்தில் நடத்தப்படும் தேர்வு போல் அல்லாமல், மத்திய அரசுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கடினம் என்பதும் இன்னொரு முக்கிய காரணம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement