Ad Code

Responsive Advertisement

ஆன்லைனில்' காப்பியடித்து இனி பிஎச்.டி., வாங்க முடியாது

'ஆன்லைனில்' காப்பியடித்து, பல்கலைகளில், பிஎச்.டி., பெறும் முறைக்கு முற்றுப்புள்ளி வருகிறது. சென்னை பல்கலையில், இதற்கான புதிய சாப்ட்வேர், அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும், மின்னணு ஆளுமையை பலப்படுத்த, மத்திய, மாநில அரசுத் துறைகள் முயற்சிக்கின்றன. உயர் கல்வி மற்றும் பள்ளிக்கல்வியிலும், மின்னணு ஆளுமை மற்றும் கணினி வழி பயிற்சியை கொண்டு வர, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை உத்தரவிட்டு உள்ளது. 

இதையாட்டி, 'இன்பிலிப்நெட்' என்ற பெயரில், தகவல் மற்றும் நுாலக இணைப்பு மையம் சார்பில், அனைத்து கல்லுாரி மற்றும் பல்கலைகளின் புத்தகங்கள், பிஎச்.டி., ஆய்வுக் கட்டுரைகள், உயர் கல்வி தொடர்பான புத்தகங்கள் மற்றும் ஆவணங்கள், http://www.inflibnet.ac.in/ என்ற இணைய தளத்தில் இணைக்கப்படுகின்றன.இந்த தளம் மூலம், இனி வரும் காலங்களில், பிஎச்.டி., ஆய்வு கட்டுரைகளை சரிபார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. 300 கல்வி நிறுவனங்களின், 15 ஆயிரம் பிஎச்.டி., கட்டுரைகள் மற்றும், 50 கல்வி வெளியீட்டு நிறுவனங்களின் புத்தகங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக, பிஎச்.டி., ஆராய்ச்சி கட்டுரைகளில், முந்தைய கட்டுரைகளை காப்பியடித்து, புதிய கட்டுரைகள் சமர்ப்பிக்கும் பழக்கம் இருந்து வருகிறது.

இதுகுறித்து, பல்கலைகள் சார்பில், விசாரணை நடந்து பல கட்டுரைகள் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளன.இந்நிலையில், இணைய தளம் மூலம், இனி, பிஎச்.டி., கட்டுரைகளை கண்டுபிடிக்க பல்கலைகளுக்கு, பல்கலை மானியக்குழுவான யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் சென்னை பல்கலை யில், இந்த திட்டம், அறிமுகமானது. சென்னை பல்கலை கட்டுப்பாட்டிலுள்ள, 120 கல்லுாரிகளின் பேராசிரியர்களுக்கு, போலி பிஎச்.டி., கட்டுரைகளை கண்டறிவது குறித்து, பயிற்சி அளிக்கப்படுகிறது. 

எனவே, இனி, சென்னை பல்கலையில் கட்டுரை சமர்ப்பிப்போர் முந்தைய கட்டுரைகளை காப்பியடித்தால் அதை எளிதில் கண்டுபிடித்து விட முடியும்.ஏழை மாணவருக்கு மட்டுமே... முறைகேடுகளை தடுக்க, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு மட்டுமே, பிஎச்.டி., உதவித் தொகை வழங்க, மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. பல்கலை மற்றும் கல்லுாரி உதவி பேராசிரியர் பணியில் சேரவும், பிஎச்.டி., ஆராய்ச்சி மாணவர்கள் உதவித்தொகை பெறவும், மத்திய அரசு நடத்தும், 'நெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 

அதே நேரம், மத்திய பல்கலை மற்றும் யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழுவின் சிறப்பு அந்தஸ்து பெற்ற, சீர்மிகு திறன் வாய்ந்த பல்கலைகளில், நெட் தேர்வு இல்லாமலேயே, உதவித் தொகை வழங்கப்படுகிறது.இதன்படி, இளநிலை ஆராய்ச்சி மாணவர், மாதம், 25 ஆயிரம் ரூபாய்; முதுநிலை ஆராய்ச்சி மாணவருக்கு, மாதம், 28 ஆயிரம் ரூபாயுடன், 30 சதவீதம் வீட்டு வாடகையும் தரப்படும். இந்த உதவித் தொகை, பல்கலைகள் மூலமாக வழங்கப்படுகிறது.

நாடு முழுவதும், 15 ஆயிரம் பேர் உதவித்தொகை பெறுகின்றனர். இதில் முறைகேடுகள் நடப்பதாக, யு.ஜி.சி.,க்கு புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து, நெட் தேர்ச்சி பெறாதவருக்கு உதவியை நிறுத்த, மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு, மாணவர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.இந்நிலையில், 'ஆய்வுக் கமிட்டி அமைத்து, இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படும்' என, மத்திய மனிதவள அமைச்சகம் அறிவித்துள்ளது. 

உதவித்தொகை வழங்கும் முறையில் வெளிப்படைத்தன்மை; மாநில பல்கலை மாணவர்களுக்கும் உதவித் தொகை; பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு மட்டும் உதவி உள்ளிட்டவை குறித்து, இந்த கமிட்டி முடிவு செய்ய உள்ளது. 

டிசம்பருக்குள் அறிக்கை தாக்கல் செய்ய, கமிட்டிக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதுவரை, உதவித் தொகை வழங்குவதில் மாற்றம் இருக்காது என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement