Ad Code

Responsive Advertisement

ஆம்! நான் ஒரு ஆசிரியர்...!

கவிதாயினி அமுதா பொற்கொடி
காலச் சக்கரம் தவறினாலும் 
கடமை கடிகாரம் எனை துயில் எழுப்பும்.....
விடியா இருளில் விளக்கேற்றி
பணி விரையும் தலைவனுக்கு
படுக்கை பக்கத்தில் தேனீர் நீட்டி
பக்கவாட்டில் புதல்வனுக்கு தொட்டில் ஆட்டி
பள்ளிக்கு செல்லும் மகளுக்கு சிற்றுண்டி ஊட்டி
சாட்டையில் சுற்றும் பம்பரமாய் 
காலத்தைக் கணக்கிட்டபடி
சமைத்தல்,கூட்டல்,துவைத்தல் என
அடுக்கடுக்காய் பணிகளை நிறைவேற்றி
வேர்வையுடன் நீராடி
வகையாய் பார்த்து சேலை கட்டி
வெளிப்பூச்சு அலங்காரம் கூட்டி
ஆட்டோ கண்ணாடியில் தலை சீவி
அனுதினமும் புன்னகைத்துப் பூரிப்பேன்
ஆம்! நான் ஒரு ஆசிரியர்!

வருகைப்பதிவேட்டில் கையொப்பம்
வகுப்பறையில் வண்ண மலர்களின் வரவேற்பு
கிள்ளும் அடிவயிற்றுப் பசியை ஒத்திவைக்கும்
இடைவேளை தேனீர் அதற்கு முற்றுவைக்கும்

நேற்றையப் பாடத்தின் திருப்புதல் 
இன்றைய பாடத்திட்டத்தின் அறிமுகம் 
கற்றல் கருவுடன் ஒழுக்க போதனை
கற்பித்தல் நடுவே சிறு குறும்புகளில் லயிப்பு
கடிவது போல் இடையே செல்லக் கண்டிப்பு
இடைவிடாது இழைந்தோடும் இதமான உணர்வு
ஆம்! நான் ஒரு ஆசிரியர் !

இவ் உன்னதப் பணியை யாம் ஏற்றது.....
என் வாழ்வாதாரத்திற்காக அல்ல
வாழ்வையே ஆதாரமாக்க ஏற்றப் பணி

என் உயிர் வளர்க்க அல்ல
வாழ்வு உயிரோட்டம் பெற ஏற்றப் பணி

எதுவும் கிடைக்காமல் ஏற்றது அல்ல
எல்லோரையும் ஏற்றும் ஏணியாக இருக்க ஏற்றப் பணி

என் தனி அடையாளத்திற்காக அல்ல
பலரை அடையாளம் காட்டிட ஏற்றப் பணி

நான் கற்றதை ஒப்பிக்க அல்ல
எனை கற்பித்தலில் ஒப்படைக்க ஏற்றப் பணி

மாணவர் மதிப்பெண் இலக்குக்காக அல்ல
அவர் வாழ்வில் இலக்கை வகுக்க ஏற்றப் பணி

வழியில் ஒதுங்க மரமாய் அல்ல
வழிகாட்டி மரமாய் இருக்க ஏற்றப் பணி

ஓய்வுக் காலம் வரை பணி முடிக்க அல்ல
ஓய்ந்து காலன் பணி முடிக்கும் வரை செய்ய ஏற்றப் பணி

ஏழு ஸ்வரங்களின் ஏற்ற இறக்கங்களில்
பிறக்கும் எத்தனை இதமான ராகங்கள்
வாழ்வியல் மீட்டும் இன்ப துன்ப ராகங்களில்
இறுதி மூச்சுவரை இசைந்து ஒலிக்கும்
என் இதயம் மீட்டும் ஒரே ராகம்
ஆம்! நான் ஒரு ஆசிரியர்!

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement