Ad Code

Responsive Advertisement

மனப்பாடம் செய்யாமல் பாடத்தை புரிந்து படித்து தேர்வு எழுதும் முறை: அரையாண்டு தேர்வில் அறிமுகப்படுத்தப்படுகிறது

ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளரும், அரசு தேர்வுத்துறை இயக்குனருமான தண்.வசுந்தராதேவி நேற்று கூறியதாவது:-பள்ளிக்கல்வித்துறைக்கு என அரசு அதிக நிதியை ஒதுக்கி வருகிறது. அதனால் பணம் எதுவும் செலவளிக்காமல் அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். அவர்களுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள், விலை இல்லா நோட்டு புத்தகங்கள், புத்தகப்பைகள், காலணிகள், சைக்கிள் உள்பட 14 வகையான விலை இல்லா பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகள் நிறையபேர் 100-க்கு 100 மதிப்பெண் பெறுகிறார்கள். இது வரவேற்கத்தக்கது. ஆனால் அந்த மாணவர்கள் புரிந்து படித்திருக்கவேண்டும். பாடப்புத்தகங்களின் பின்னால் கொடுக்கப்படும் கேள்விகளை மட்டும் மனப்பாடம் செய்துவிட்டு சிலமாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுவிடுகிறார்கள்.எனவே அனைத்துமாணவர்களும் பாடத்தை புரிந்துபடிக்கவேண்டும் என்பது அரசு தேர்வுத்துறையின் முடிவு. மனப்பாடம் செய்து படிக்காமல் புரிந்து படித்து தேர்வுஎழுதும் முறை அரையாண்டு தேர்விலேயே முதல்முதலாக அறிமுகப்படுத்தப்படுகிறது.

அரையாண்டு தேர்வுக்கான தேதி இன்னும் முடிவாகவில்லை. அரையாண்டு தேர்வு டிசம்பர் மாதம் நடக்கும். அரையாண்டு தேர்வு தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளில் படிக்கும் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு பொருந்தும்.அரசு தேர்வுத்துறை அரையாண்டுக்கு வினாத்தாள்களை சி.டி.வடிவில் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கும். அவர் அதை காப்பி எடுத்து அந்தந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பிரிண்ட் எடுத்துக்கொடுப்பார்.ஆனால் சில தனியார் பள்ளிகள் அரசு தேர்வுத்துறை நடத்தும் பொது அரையாண்டு தேர்வை நடத்தாமல் அவர்களே தனியாக தேர்வை நடத்துகிறார்கள். அவ்வாறு நடத்தும் பள்ளிகள் எந்த எந்த பள்ளிகள் என்று கணக்கு எடுத்து அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்து பள்ளிகளும் அரசு தேர்வுத்துறை நடத்தும் அரையாண்டு தேர்வை நடத்துங்கள். அதுவே மாணவ-மாணவிகளுக்கு நல்லது.இவ்வாறு தண்.வசுந்தராதேவி தெரிவித்தார். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement