Ad Code

Responsive Advertisement

திறமையாக செயல்படாத அதிகாரிகளை பணிநீக்கம் செய்யலாம் மத்திய அரசு உத்தரவு

நேர்மை இல்லாத, திறமையாக செயல்படாத அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய அரசு முடிவு
மத்திய அரசு ஊழியர்களிடையே நேர்மையை உறுதி செய்ய பின்பற்ற வேண்டிய அணுகுமுறை குறித்து மத்திய மந்திரிசபை செயலாளர் பி.கே.சின்கா தலைமையில் சமீபத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
அதில், அரசு அதிகாரிகள் நேர்மையும், திறமையும் மிக்கவர்களாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அப்படி இல்லாதவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

கட்டாய ஓய்வு
அதன் அடிப்படையில், மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை, அனைத்து மத்திய அமைச்சகங்களுக்கும் ஓர் உத்தரவை அனுப்பி வைத்துள்ளது. அதில், தத்தமது அமைச்சகங்களில் உள்ள நேர்மையற்ற, திறமையாக செயல்படாத ஊழியர்களை அடையாளம் கண்டறியுமாறு கூறியுள்ளது.

அத்தகைய ஊழியர்களை, அடிப்படை விதி (56ஜெ)–யின் கீழ், கட்டாய ஓய்வில் (பணிநீக்கம்) அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

விதி கூறுவது என்ன?
‘35 வயதுக்கு முன்பு பணியில் சேர்ந்து, தற்போது 50 வயதைக் கடந்த எந்த குரூப் ஏ, குரூப் பி ஊழியரையும், தேவைப்பட்டால் பொதுநலன் கருதி, கட்டாய ஓய்வில் அனுப்ப மத்திய அரசுக்கு முழு உரிமை உள்ளது’ என்று அடிப்படை விதி (56ஜெ) கூறுகிறது.

குரூப் சி ஊழியரைப் பொறுத்தவரை, 55 வயதைக் கடந்தவரை கட்டாய ஓய்வில் அனுப்பலாம்.

ஆனால், மேற்கண்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஒரு கட்டுப்பாடு உள்ளது. அதாவது, யாருடைய ஆண்டு ஊதிய உயர்வு கடந்த சில ஆண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டுள்ளதோ, யாருடைய பதவி உயர்வு, கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதோ அத்தகைய ஊழியர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்.

யார் யார்?
இந்த பணிநீக்க நடவடிக்கை, குறிப்பிட்ட காலவரையறைக்குள் முடிக்கப்பட வேண்டும் என்பதால், இதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், புகார்களை உடனுக்குடன் விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என்றும் அனைத்து அமைச்சகங்களையும் மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்த 2012–ம் ஆண்டு பிப்ரவரி மாதம், மன்மோகன்சிங் அரசு இதேபோன்ற உத்தரவை பிறப்பித்தது.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.ஆர்.எஸ். ஆகிய அகில இந்திய பணிகளில் உள்ள அதிகாரிகள், குரூப் ஏ அதிகாரிகள் ஆவர். அரசிதழ் பதிவு பெறாத அதிகாரிகள், குரூப் பி அதிகாரிகள் ஆவர். கிளார்க் மற்றும் அமைச்சக ஊழியர்கள், குரூப் சி ஊழியர்கள் ஆவர்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement