Ad Code

Responsive Advertisement

ஆசிரியர் மீது தாக்குதல்: எஸ்.ஐ.யை கண்டித்து சாலை மறியல்

திருச்செங்கோட்டில் ஆசிரியரைத் தாக்கிய போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளரைக் கண்டித்து, ஆசிரியர்கள், மாணவர்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். 

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாமக்கல்லைச் சேர்ந்த மோகன்குமார் (30) பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.

தற்போது தேர்வுகள் நடைபெறுவதால், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து வினாத்தாள்களை பெற்றுக் கொண்டு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்குச் செல்ல, பெண்கள் மேல்நிலைப் பள்ளி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வேகமாக சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவரைத் தடுத்து நிறுத்திய போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளர் லட்சுமணகுமார், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் செல்ல மேம்பாலத்தை பயன்படுத்துங்கள் என கூறினாராம்.

அவசரமாக செல்ல வேண்டும் என மோகன்குமார் கூறியதையடுத்து, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த உதவி ஆய்வாளர் லட்சுமணகுமார், மோகன்குமாரை சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.

காயமடைந்த ஆசிரியர்

மோகன்குமார் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, பள்ளி ஆசிரியரைத் தாக்கிய போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளரைக் கண்டித்து, திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் அருகில் ஆசிரியர்கள், மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த டிஎஸ்பி விஷ்ணுபிரியா ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement