Ad Code

Responsive Advertisement

பிஎப் சந்தாதாரர்களுக்கு அதிகபட்ச காப்பீடு ரூ.5.5 லட்சமாக உயர்கிறது

பிஎப் காப்பீடு தொகை ரூ.5.5 லட்சமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.  தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் (இபிஎப்ஓ), 6  கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர் கணக்குகளை நிர்வகித்து வருகிறது. தற்போது தொழிலாளர் டெபாசிட் தொகையுடன் இணைந்த காப்பீடு திட்டத்தில் அதிகபட்ச காப்பீடு ரூ.3.6 லட்சமாக உள்ளது. 

இந்த தொகையை ரூ.5.5 லட்சமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாதம் 9ம் தேதி, தொழிலாளர்  டெபாசிட்டுடன் இணைந்த காப்பீடு திட்ட குழு கூட்டம் நடக்கிறது. இதில் இந்த பரிந்துரை முன்வைக்கப்பட உள்ளது. இந்த குழுவின் அனுமதி கிடைத்த  பிறகு, பிஎப் நிறுவனத்தின் முடிவெடுக்கும் அதிகாரம் படைத்த மத்திய அறக்கட்டளை வாரியத்திடம் இது சமர்ப்பிக்கப்பட உள்ளது.

மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தலைமையிலான இந்த குழு உறுப்பினர்கள் புதிய திட்டத்துக்கு அனுமதி அளித்த பிறகு, தொழிலாளர் நல  அமைச்சக முடிவுக்காக இது கொண்டு செல்லப்படும்.  தற்போதுள்ள காப்பீடு முறையின்படி, ஒரு நிறுவனத்தில் தொடர்ந்து ஓராண்டு பணிபுரிந்த பிஎப்  சந்தாதாரர் மரணம் அடைந்தால், அவரது வாரிசுக்கு அந்த ஓராண்டின், அதாவது 12 மாத சம்பளத்தின் சராசரியில் 20 மடங்கு தொகை கிடைக்கும். இத்துடன்  20 சதவீத போனஸ் தொகையும் சேர்த்து வழங்கப்படும். இந்த சம்பள வரம்பு அதிக பட்சம் ரூ.15,000 ஆகும். இதன்படி அதிகபட்ச காப்பீடு தொகையாக ரூ.3.6  லட்சம் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

தற்போது அமல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய திட்டப்படி இந்த அதிக பட்ச காப்பீடு பலன், ஊழியர் மரணமடைந்த ஆண்டின் 12 மாதங்களின் சராசரி  சம்பள தொகையில் 30 மடங்காக வழங்க பரிந்துரை செய்யப்படுகிறது. இத்துடன், பிஎப் கணக்கில் உள்ள சராசரி தொகையில் 50 சதவீதம் சேர்த்து  வழங்கப்படும். ஆனால், இந்த பிஎப் தொகை ரூ.1 லட்சத்துக்கு மிகாது. இந்த புதிய காப்பீடு திட்டம் அமல்படுத்தப்பட்டால், சந்தாதாரரின் குடும்பத்தினர்  பெரிதும் பயனடைவார்கள்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement