Ad Code

Responsive Advertisement

நெல்லை அருகே அரசு பள்ளியில் ஆசிரியரை அவமான படுத்திய மாணவர்கள் 2 பேர் டிஸ்மிஸ்

நெல்லை அருகே உள்ள கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல் நிலைப்பள்ளியில் 1,087 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்கள் தொடர்ந்து ஒழுங்கீனமாக நடந்து வருவதாக மாவட்ட கல்வி அதிகாரி சவுந்தரநாயகிக்கு புகார் வந்தது. இந்த நிலையில் நேற்று பள்ளியின் சுற்று சுவரை சில மாணவர்கள் உடைத்துவிட்டனர். இதனால் இன்று காலை மாவட்ட கல்வி அதிகாரி சவுந்தரநாயகி கயத்தாறு பள்ளிக்கு விசாரணைக்கு சென்றார்.

பள்ளியில் நடந்த இறை வணக்க கூட்டத்தில் கலந்து கொண்ட சவுந்தரநாயகி மாணவ, மாணவியர்களுக்கு அறிவுரை கூறிக்கொண்டிருந்தார். அப்போது பிளஸ்– 2 வரலாற்று வகுப்பு மாணவர்கள் இறைவணக்க கூட்டத்திற்கு வராமல் வகுப்பறைக்குள் இருந்தனர். இதனால் அவர்களை அழைத்து வரும்படி உடற்கல்வி ஆசிரியர் சுப்பாராஜிடம் கூறினார். இதைத் தொடர்ந்து அவர் வகுப்பறைக்கு சென்று அங்கு இருந்த மாணவர்களை வெளியில் வரும்படி அழைத்தார்.

அப்போது அவர்கள் ஆசிரியர் சுப்பாராஜை தாக்கி அவர் அணிந்திருந்த பேண்ட்டை கிழித்து அவமானப்படுத்தினர். கல்வி அதிகாரி முன்பே மாணவர்கள் அரங்கேற்றிய இந்த அடாவடியை கண்டு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதைத் தொடர்ந்து மாவட்ட கல்வி அதிகாரி சவுந்தரநாயகி, பள்ளி தலைமை ஆசிரியை (பொறுப்பு) சுதா மற்றும் ஆசிரியர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார்.

இதில் பள்ளியில் தொடர்ந்து ஒழுங்கீனமாக நடக்கும் பிளஸ்– 2 வரலாற்று பிரிவு மாணவர்கள் சுந்தர்ராஜ், பொன்இசக்கி ஆகியோரை டிஸ்மிஸ் செய்வது என்றும் மேலும் 2 மாணவர்களை ஆண்டு இறுதி தேர்வு வரை சஸ்பெண்ட் செய்வது என்றும், 14 மாணவர்கள் மீது போலீசில் புகார் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மாணவர்கள் சுந்தர்ராஜ், பொன்இசக்கி ஆகியோரை பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கி அவர்களுக்கு டி.சி.யை தலைமை ஆசிரியை வழங்கினார். மேலும் பள்ளியில் ஒழுங்கீனமாக செயல்படும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கல்வி அதிகாரி சவுந்தரநாயகி தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement