ஆசிரியர் கல்வியியல் இளநிலை பட்டப் படிப்பான பி.எட். படிப்பில் 2015-16 கல்வியாண்டில் சேருவதற்கு 1,136 பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.பி.எட். படிப்பில் பி.இ. பட்டதாரிகள் சேர்க்கப்படுவது இந்தியாவில் இதுவே முதன் முறையாகும். தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலின் (என்.சி.டி.இ.) புதிய 2014 வழிகாட்டுதலின்படி, பி.இ. முடித்தவர்கள் முதன் முறையாக பி.எட். படிப்புகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.
இதைத் தொடர்ந்து, 2015-16 பி.எட். மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு நடத்தும் சென்னை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் பி.இ. முடித்தவர்களிடமிருந்தும் விண்ணப்பங்களைப் பெற்றது.
அதன் மூலம், பி.எட். சேர்க்கைக்கு மொத்தம் விண்ணப்பித்த 7,425 பேரில், 1,136 பேர் பொறியியல் பட்டதாரிகள் என்பது தெரியவந்துள்ளது.இந்த நிலையில், இந்தப் புதிய நடைமுறைக்கு கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பி.எட். முடிக்கும் பொறியியல் பட்டதாரிகள் எந்தவிதமானப் பதவிக்குத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியது:
பள்ளி ஆசிரியர் ஆக வேண்டும் என்ற எண்ணம் சிறிதளவும் இல்லாமல் பொறியியல் படிப்பில் சேர்ந்து படித்தவர்களை பி.எட். படிக்க அனுமதித்து பள்ளி ஆசிரியர்களாக நியமிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
எந்தவிதக் கட்டுப்பாடுமின்றி சேர்க்கையை அனுமதித்து, இப்போது லட்சக்கணக்கான பி.இ. பட்டதாரிகள் வேலையில்லாமல் திண்டாடுகின்றனர் என்பதற்காகவே இவ்வாறு திசை திருப்பும் நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ளன.
இந்த நடைமுறை அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க உதவாது. ஆசிரியர் ஆக வேண்டும் என்ற லட்சியத்தோடு இளநிலை, முதுநிலை கலை-அறிவியல் பட்டப் படிப்புகளையும் பி.எட்., எம்.எட். படிப்புகளையும் முடித்து காத்திருப்பவர்களின் நிலையையும் கேள்விக்குறியாக்கிவிடும்.
ஃபின்லாந்து போன்ற நாடுகளில் அதிக மதிப்பெண்ணுடன் பட்டப் படிப்புகளை முடித்து, ஆசிரியர் பணி மீதான தனது ஆர்வத்தை உரிய முறையில் நிரூபிப்பவர்களுக்கு மட்டுமே ஆசிரியர் கல்வியில் சேருவதற்கும், ஆசிரியர் பணியில் சேருவதற்கும் அனுமதி வழங்கப்படுகிறது.
ஆனால், இங்கு கல்வியாளர்களிடமோ, நிபுணர்களிடமோ கலந்தாலோசிக்காமல் இப்படிப்பட்ட முடிவு எடுக்கப்பட்டிருப்பது பள்ளிகளில் ஆரோக்கியமான சூழலை உருவாக்காது என்றார்.
இந்த நிலையில், பி.இ. முடித்தவர்களை பி.எட். படிக்க அனுமதிப்பது ஆரோக்கியமான சூழலை உருவாக்காது. இவர்களுடைய எதிர்காலம் என்ன என்பதையும், இவ்வாறு பி.இ. முடித்து பி.எட். முடிப்பவர்கள் எந்தெந்தப் பணிக்குத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்பதை அரசு முதலில் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.
இதே கருத்தை பொறியியல் கல்லூரி பேராசிரியர்களும் தெரிவித்தனர். பி.எட். முடிக்கும் பி.இ. பட்டதாரிகளைப் பொறியியல் கல்லூரிகள் அல்லது பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஆசிரியர்கள் பயிற்றுநர்கள் அல்லது வேறு பணிகளில் அமர்த்த வேண்டுமே தவிர, அவர்களை பள்ளி ஆசிரியர் பணியில் அமர்த்துவது கல்வித் தரத்தைப் பாதிக்கும் என பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை