Ad Code

Responsive Advertisement

ஆதார் அட்டை கட்டாயமில்லை என சுப்ரீம் கோர்ட் உத்தரவு: அரசியல் சாசன பெஞ்சில் ஆதார் வழக்கு

'ஆதார்' அடையாள அட்டை அனைவருக்கும் கட்டாயம்; அந்த அட்டை இருந்தால் தான், அரசின் நல உதவிகள் கிடைக்கும் என, கூறப்படுவதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்குகளை, மூன்று நீதிபதிகளை கொண்ட, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்த நிலையில், அதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், கூடுதல் நீதிபதிகளை கொண்ட, 'பெஞ்ச்'சிற்கு வழக்கு நேற்று மாற்றப்பட்டுள்ளது. ஆதார் அடையாள அட்டை கட்டாயம் என, நிர்ப்பந்திக்க கூடாது எனவும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அதிகாரம் கிடையாது:

'ஆதார் அடையாள அட்டை அனைவருக்கும் கட்டாயம்' என்ற அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சமூக ஆர்வலர்கள் பலர் தொடர்ந்திருந்த வழக்குகளை, நீதிபதிகள் செலமேஸ்வர், எஸ்.ஏ.பாப்டே மற்றும் சி.நாகப்பன் ஆகியோரை கொண்ட பெஞ்ச் விசாரித்து வந்தது.அதில், ஆதார் அடையாள அட்டை பெற, பொதுமக்கள் வழங்கும் தகவல்கள் எந்த அளவுக்கு ரகசியமாக வைக்கப்படும் என்ற மற்றொரு கேள்வி எழுந்தது.

அப்போது, 'பொதுமக்களின் தனித்தகவல்களை ரகசியம் காப்பது அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமை' என ஒருசாராரும், 'அது, அடிப்படை உரிமையல்ல' என, மற்றொரு சாராரும் வாதிட்டனர்.மேலும், 'அரசியல் அமைப்புச் சட்டம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க, மூன்று நீதிபதிகளை கொண்ட டிவிஷன் பெஞ்சுக்கு அதிகாரம் கிடையாது' என, மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

ரகசியம் காப்பது:

இதையடுத்து, ஆதார் அனைவருக்கும் கட்டாயமா என்ற விவகாரத்தில் முடிவெடுக்கவும், மக்களின் தனிப்பட்ட தகவல்கள் ரகசியம் காப்பது அடிப்படை உரிமையா என்பதை முடிவு செய்யவும், தலைமை நீதிபதி தலைமையிலான, கூடுதல் நீதிபதிகளை கொண்ட பெஞ்சுக்கு வழக்கை மாற்றுவது என, மூன்று நீதிபதிகள் பெஞ்ச், நேற்று முடிவு செய்து உத்தரவிட்டது.இப்போது இந்த வழக்கு, தலைமை நீதிபதியின் பரிசீலனைக்கு மாற்றப்பட்டுள்ளது; இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளின் பெயர்களை, தலைமை நீதிபதி விரைவில் அறிவிப்பார்.

ஆதார் அட்டை கட்டாயமில்லை:

மூன்று நீதிபதிகளை கொண்ட டிவிஷன் பெஞ்ச், முன்னதாக பிறப்பித்த உத்தரவின் முக்கிய அம்சங்கள்:
* பொது வினியோக திட்டம், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் காஸ் சிலிண்டர் பெற மட்டுமே, ஆதார் அடையாள அட்டை மற்றும் எண் கட்டாயமாக்கப்பட வேண்டும்.
*அரசின் பிற நலத்திட்ட உதவிகளை பெற, ஆதார் அடையாள அட்டை கட்டாயம் என, நிர்ப்பந்திக்க கூடாது.
* பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட, 'பயோமெட்ரிக்' விவரங்கள் மற்றும் பிற தகவல்களை, வேறு யாருக்கும் பகிரக் கூடாது.
* நீதிமன்றத்தின் உத்தரவு இன்றி, பொதுமக்களின் தகவல்கள் மற்றும் பிற குறிப்புகளை, குற்ற 
நடவடிக்கை விசாரணைக்கு எந்த அமைப்பினரும் பயன்படுத்தக் கூடாது.
* எனினும், ஆதார் தகவல் சேகரிப்பு பணிக்கு எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை; தொடர்ந்து அப்பணி நடைபெறலாம்.இவ்வாறு, பெஞ்ச் உத்தரவிட்டது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement